Wednesday, July 8, 2009

சாமி குத்தம் - சிறுகதை


கத்தியின் கூர்முனை அந்த நள்ளிரவின் கருமையிலும் மின்னியது.

அந்தக்கத்தியை தன்னுடைய இடுப்பில் எடுத்து செருகிக்கொண்டான் அறிவழகன்.


'நாளைக்கு இந்நேரம் நாம என்ன நிலையில் இருப்போம்னு யாருக்கும் தெரியாது. ஆனால் இத செஞ்சுத்தான் ஆகணும். வேற வழியில்லை' என்றான் கவியரசு.

'நாம எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கூட கேட்க மாட்டேனுட்டானுங்க.அவனுங்களுக்கு புத்தி புகட்டினாத்தான் நாம இந்த ஊர்ல இனிமே மனுசனா இருக்கலாம்' பற்களை நறநறவென கடித்தான் மேகநாதன்.

...........................................................................................................

அன்று மாலை ஊர் மத்தியில் நடந்த ஊர்ப்பொதுக்கூட்டத்தில் அறிவழகன் அமைதியாகத்தான் சொன்னான்.

'அய்யா! பெரியவங்க எல்லாரும் இங்க இருக்கீங்க. உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஒவ்வொரு வருசமும் நடக்கிற அம்மன் தேரோட்டம் எல்லாத் தெருவுக்கும் போகுது. ஆனா பல வருசமா எங்க மேலத்தெருவுக்கு மட்டும் வர்றதில்ல. காரணம் கேட்டா அது அந்த காலத்திலேயிருந்து வர்ற நடைமுறைன்னு சொல்றீங்க. ஆனா அது உண்மையில்லைங்க. அந்த காலத்துல எங்க தெரு ரொம்ப குறுகலா இருந்துச்சு. அதனால தேர் உள்ள வரமுடியல. ஆனா இப்பத்தான் அரசாங்கத்துல நல்ல அகலமா சாலை போட்டு கொடுத்து இருக்காங்க. அதனால இந்த வருசம் அம்மன் தேரோட்டம் எங்க தெருவுக்கும் வரணும்னு எங்க தெரு சனங்க ஆசைப்படுறாங்க. நீங்க பெரியவங்கதான் நல்ல முடிவு சொல்லணும்'

உடனே தெட்சிணாமூர்த்தி கோபமாக எழுந்தார்

'என்னப்பா! புதுசா பிரச்சினையை கௌப்பலாம்ணு வந்திருக்கியா?. உங்க தெரு வழியா எந்த வருசமும் அம்மன் போனதில்லை. அப்படி வரச்சொல்லி உங்கத்தெருவுல இருக்கிற பெரியவங்க யாரும் இதுவரைக்கும் எங்க கிட்ட கேட்டதும் இல்ல. இப்ப நீ வந்து புதுசா இந்தப்பிரச்சினையை கிளப்பாதே. போகாத தெருவுக்கு அம்மன் போனா சாமி குத்தமாயிடும். அப்புறம் ஊருக்கு ஏதாவது கெடுதி நடந்தா என்ன பண்றது? கொஞ்சம் படிச்சிட்டாலே புத்தி கோணலாயிடும் போலிருக்கு.'

'அய்யா! சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்தானுங்களே. இந்தப்பூமியை படைச்ச சாமிக்கு அந்தப்பூமியில இருக்கிற எங்க தெரு மட்டும் எப்படிங்க பிடிக்காம போகும்?. நீங்க இப்படி பண்றதால எங்க தெரு சனங்கள மத்த தெரு சனங்க ஏதோ நாயைப் பார்க்கிறது மாதிரி கேவலமா பார்க்கிறாங்க.ரொம்ப அவமானமா இருக்குங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.'

'இதப்பாரு தம்பி! நீ எங்களுக்கு அறிவுரை சொல்லாத. என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். நீ சொல்ற படியெல்லாம் நாங்க செய்ய முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க. முதல்ல கூட்டத்த விட்டு வெளியே போ.'

அவமானப்பட்டவனாக திரும்பினான் அறிவழகன்.

...........................................................................................................

'சரி. நாளைக்கு என்ன பண்ணனும்னு இன்னும் ஒரு தடவை சொல்றேன். எல்லாரும் கவனமா கேட்டுக்கங்க.
நாளைக்கு அந்தி நேரத்துலதான் அந்த அம்மன் தேர் நம்ம தெரு முனைக்கு பக்கத்தில வரும். அந்த நேரத்தில நாம ஆறு பேரும் திடீர்னு கத்தி அருவாளோட கூட்டத்துல நுழையணும். அங்க நின்னுகிட்டு இருக்கிற ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரம் கழுத்தில கத்தியை வெச்சிட்டு தேரை நம்ம தெருவுக்கு திருப்பச்சொல்லி மிரட்டணும். தேர் நல்லபடியா நம்ம தெருவை சுத்தி வந்ததும் நாம அங்கிருந்து போய் போலீசுல சரணடையனும். என்ன தண்டனை கிடைக்குதோ அதை நம்ம தெரு சனங்க நலனுக்காக நாம ஏத்துக்குவோம்.'

எல்லோரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர்.

...........................................................................................................

மறுநாள் அம்மன் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

ஊரில் அனைத்து தெருக்களையும் சுற்றிவந்தபின் மேலத்தெரு முனைக்கு அருகிலிருந்த புதுத்தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது.

திடீரென கூட்டத்தில் ஊடுறுவிய அறிவழகனும் அவனது நண்பர்களும் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்து தேர் முன்பாக நடந்து வந்துகொண்டிருந்த ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் கழுத்தில் வைத்து அழுத்தினர்.

'டேய்! யாராவது கிட்ட வந்தீங்கன்னா உங்க நாட்டாமை பொணமாயிடுவாரு. மரியாதையா தேரை மேலத்தெரு பக்கம் திருப்புங்கடா!' என்று கோபமாக கத்தினான் அறிவழகன்.

தேர் மேலத்தெரு பக்கமாக திரும்ப ஆரம்பித்தது.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து நான்கைந்து போலிஸார் துப்பாக்கிகளுடன் அறிவழகனையும் அவனது நண்பர்களையும் சுற்றி வளைத்தனர்.

'டேய்! மரியாதையா நாட்டாமையை விட்டுட்டு சரண்டர் ஆயிடுங்க. இல்லைன்னா, நாயைச் சுடுறது மாதிரி சுட்டு சாகடிச்சிடுவேன்.'

அறிவழகனும் அவனது நண்பர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கைகளைத்தூக்கியபடி போலீசாரிடம் சரணடைந்தனர். உடனே ஊர்மக்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். உடம்பில் ரத்தம் வழிய அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.

'நீங்க இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்கீங்கன்னு எனக்கு காலையிலேயே உங்க தெருக்காரன் ஒருத்தன் சொல்லிட்டான்டா. உங்களை இப்படி கையும் களவுமா பிடிக்கணும்னுதான் போலீஸ்ல புகார் கொடுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன். என் கழுத்திலயா கத்தி வெக்கறீங்க? ஜெயில்ல கிடந்து சாவுங்கடா!' என்று கோபமுடன் உருமினார் நாட்டாமை கல்யாணசுந்தரம்.

'நல்லவேளை! எங்க, அவனுங்க திட்டப்படி தேரு அந்தத்தெருவுக்குள்ள போயி சாமி குத்தத்துக்கு ஆளாயிமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். அந்த மாரியாத்தா நம்மளையெல்லாம் காப்பாத்திட்டா.'என்று பரவசமுடன் அம்மனை பார்த்து வணங்கினார் தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி கோபாலசாமி.

'சரி சரி! தேரை புதுத்தெருபக்கம் திருப்புங்கப்பா'என்று கூட்டத்தினை விரட்டினார் தெட்சிணாமூர்த்தி.

தேர் மேலத்தெரு முனையிலிருந்து புதுத்தெரு நோக்கி நகர ஆரம்பித்தது.

திடீரென பயங்கர சத்தத்துடன் தேரின் அச்சாணி முறிந்து தேர் ஒருபக்கமாக சாய்ந்தது. தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி,தேரிலிருந்து கீழேவிழுந்து தேருக்கு அடியில் நசுங்கினார். தேரிலிருந்து விடுபட்ட வேகத்தில் சக்கரமானது அருகில் நின்றுகொண்டிருந்து நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் மீது மோதி தூக்கி எறிந்துவிட்டு வேகமாக ஓடி, மேலத்தெருவுக்குள் நுழைந்து அறிவழகனின் குடிசை வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்து அடங்கியது.


சாய்ந்து கிடந்த தேரின் மேல் இருந்த அம்மன், முன்பைவிட மேலும் உக்கிரமாகக் காட்சியளித்தாள்.

..........................................................................................................

5 comments:

  1. :)

    முடிவு நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  2. உங்கள் பதிவில் இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை.
    சாமியைக் கூட ஏதும் கிண்டல் செய்து விடுவீர்களோ என்று பயந்துகொண்டேதான் படித்தேன்.
    நீங்க நல்லா எழுதுறீங்க மணி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி வித்யா!
    நன்றி சென்ஷி!

    காமெடி எழுதி எனக்கே போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி.

    அதனாலதான் இப்படி டெரர் ஆ ஒரு பதிவ போட்டு வெச்சேன்.

    ReplyDelete
  4. கொஞ்சமா எழுதுனாலும் நிறைவா எழுதுறீங்க..
    போன பதிவு அளவுக்கு இல்லையின்னாலும்,
    உங்க கதை ஒன்னும் மோசம் இல்லை!
    ஆனா டெரரா இருந்தது..


    புது பதிவிட்டிருக்கிறேன், டைம் இருந்தா....

    ReplyDelete