Wednesday, November 10, 2010

எழுப்புவோரை மிதிப்போம்!




சோம்பேறிகளைப் பத்தி ஒரு கதை எழுதணும்னு ரொம்பநாளா நெனைச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப அலுப்பா இருந்ததால எழுத முடியலை.

அந்தக்காலத்திலே சோம்பேறிகளுக்கு ரொம்ப மரியாதை கொடுத்திருக்காங்க.அதனாலதான் எல்லார் வீட்டிலேயும் சோம்பேறிகள் படுத்து உருள சொகுசான திண்ணை கட்டி வெச்சியிருக்காங்க.

வசதிபடைச்ச இன்னும் சிலபேர் சோம்பேறிகள் ஓய்வெடுப்பதற்காக தங்களோட சொந்த செலவிலேயே சத்திரம் கட்டிவெச்சி தரித்திரத்தில்... மன்னிக்கவும் சரித்திரத்தில் இடம்பிடிச்சிருக்காங்க.



ஒரு ஊர்ல லேசி கான் ன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் ஊர்ல இருக்கிற சோம்பேறிகள் எல்லோரையும் சேர்த்து 'ஓய்வு எடுப்போர் நலச்சங்கம்' னு ஒரு சங்கம் ஆரம்பிச்சான்.

சங்கத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

கொட்டாவி விடக்கூட அலுப்பு படுவார்கள் சிலர்.

மூக்கின்மேல் உட்கார்ந்திருக்கும் ஈயை விரட்ட ஆள்தேடுவார்கள் சிலர்.

கழன்று விழும் பேண்டை கையால் பிடிப்பதற்கு உதவி தேடுவார்கள் சிலர்.

கனிந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன அலுப்புபட்டு ஜுஸ் போட்டு குடிப்பவர்கள் சிலர்.

மாதாமாதம் சங்க கட்டிடத்துல கூட்டம் நடத்தினான். ஆனா அலுப்பா இருக்குதுன்னு சொல்லிட்டு சங்க உறுப்பினர்கள் யாருமே கூட்டத்துக்கு வர்றது இல்லை.

தூக்கக் கலக்கத்துடன் வந்திருந்த ஒருசிலரும் வந்தவுடனே கக்கத்தில் சுருட்டி வெச்சிருந்த பாயை விரிச்சிப்போட்டு ஆளுக்கொரு மூலையிலே அயர்ந்து தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சங்கக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.சங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமான அஞ்சால் அலுப்பு மருந்தை உடனே தடை செய்ய வேண்டும்.

2.மருத்துவமனைகளில் குளுகோஸ் பயன்படுத்தி நோயாளிகளை சுறுசுறுப்பாக்குவதை உடனே நிறுத்தவேண்டும்.

3.நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்க விடாமல் தடை ஏற்படுத்தும் மின்தடையை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

4.சோம்பல் காரணமாக சாலையோரத்திலும் பூங்காவிலும் சுருண்டு தூங்குபவர்களை மயக்கத்தில் விழுந்ததாக நினைத்து சோடாவை மூஞ்சியில் பீய்ச்சியடித்து எழுப்பி தொந்தரவு செய்பவரை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

5.அதிகாலையில் பெல் அடித்து தூக்கத்தை கலைக்கும் பால்காரர்கள் மற்றும் பேப்பர் போடுபவர்களின் வாகனங்களை உடனே பறிமுதல் செய்யவேண்டும்.

6. தூக்க மாத்திரை உற்பத்தியை அதிகரித்து சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.

7. குறட்டை சத்தத்தினை தேசிய கீதமாக அறிவிக்கவேண்டும்.

8. அரசாங்கமானது, சிறந்த சோம்பேறிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். அதையும் அவர்களை வெயிலில் அலையவிடாமல் அவர்களது வீட்டிற்கே நேரடியாகச்சென்று வழங்கவேண்டும்.

9. அதிகாலை நேரம் 5 என்பதை மாற்றி 11 மணியாக அறிவிக்க வேண்டும்.

10. அதிகாலையில் கூவும் சேவல்களுக்கு மரணதண்டனை வழங்கி, பின்னர் அவற்றை வறுத்து, கடிப்பதற்கு எளிமையாக இருக்கும் லெக் பீஸ் மட்டும் சங்கத்து உறுப்பினர்களுக்கு வழங்குமாறும், அதையும் சம்பளத்திற்கு ஆள் வைத்து ஊட்டி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.



ஒருநாள், சங்கத்தலைவர் லேசி கான் , லேசி ராமன் என்கிற தொண்டனை கூப்பிட்டு தனது கன்னத்தின் மேலே உட்கார்ந்து கடித்துக்கொண்டிருக்கும் கொசுவை விரட்ட உத்தரவிட்டான்.

அதற்கு அந்த தொண்டன் 'கொசுவை அப்புறமா விரட்டிக்கலாம். முதல்ல என் காலை நக்குற நாயை தயவு செய்து விரட்டிவிடுங்க தலைவரே' ன்னு கெஞ்சினான்.

மிரண்டு போன சங்கத்தலைவர், தொண்டன் தன்னை மிஞ்சிய சோம்பேறியாய் இருப்பதைக்கண்டு வியந்து 'நீதாண்டா இனிமேல் இந்த சங்கத்துக்கு தலைவர்'ன்னு சொல்லி தன்னோட பதவியை ராஜினாமா செய்தான்.

உடனே அந்த தொண்டன் 'எனக்கு அந்தபதவி வேண்டாம் தலைவரே' என்று பணிவுடன் சொன்னான்.

'எண்டா அப்படி சொல்லுற?' என்று கேட்டார்.

'அதுவந்து தலைவரே! இப்ப நான் தலைவர் ஆயிட்டா இப்ப நான் எழுந்திருச்சி வந்து உங்க இருக்கையில அமரணும். எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குது. மன்னிச்சுக்கங்க'

அதிர்ச்சியடைந்த சங்கத்தலைவர் ஆனந்தக்கண்ணீர் மல்க, கீழே குந்தியிருந்த அந்த தொண்டனை கட்டியணைத்து பாராட்டிவிட்டு குண்டுகட்டாக அவனை தூக்கி தலைவர் இருக்கையில் அமரவைத்துவிட்டு தான் தரையில் அமர்ந்துகொண்டார்.

புதிய சங்கத்தலைவர் லேசி ராமன் தலைமையில் சங்கம் மேலும் சிறப்பாக வளர்ச்சியடைந்து சங்கக்கட்டடம் ஆழ்ந்த தூக்கக்கலக்கத்துடன் அமைதியானது.