Tuesday, July 14, 2009

நில்..கவனி..சாப்பிடு!



காலையில் அலுவலகம் புறப்படுவதற்காக அவசர அவசரமாக சாப்பிட அமரும்போதுதான்,

'உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கா? சீதபேதியா? காலராவாக இருக்கலாம். உடனே ஒரு தேக்கரண்டி உப்புடன் ஆறு தேக்கரண்டி சர்க்கரையை கரைத்துக்கொடுங்கள்.'என்று தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பாகும்.

மதியம் சாப்பிட அமரும் நேரத்தில்,

'உங்களுக்கு இருமலா? சளியுடன் ரத்தமும் வருகிறதா? தொடர்ந்து காய்ச்சலா? காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனே அருகிலுள்ள சுகாதார மையத்தினை அணுகுவீர்!' என பாசமுடன் ஆலோசனை வழங்குவார்கள்.

இரவு நேரம் டின்னராவது நிம்மதியாக சாப்பிடலாம் என்றால் அப்போதுதான் விளம்பரத்தில்,குளோசப் காட்சிகளில் டாய்லெட்டை காண்பித்தபடி டாய்லெட் கழுவும் பாட்டிலை எப்படி உபயோகிப்பது என்று செய்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இப்படியாக எது எதற்கோ காசு செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்.


இந்த மக்களுக்கு 'பொது இடங்களில் நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?' என்று விளம்பரம் செய்தால் நல்லாயிருக்கும்.


'பந்திக்கு முந்திக்கொள்' என்று நம் முன்னோர்கள் பழமொழி கூறினார்களே தவிர 'பந்தியில் நாகரீகமாக சாப்பிடு' என்று ஏனோ கூற மறந்து விட்டனர்.

சாப்பிடுவதில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

ஒரு சிலர் சாதத்தினை கொத்தாக கையெறிகுண்டு போல உருட்டி அண்டைநாட்டின் மீது வீசுவது போல கோபமாக தொண்டைக்குழியை நோக்கி வீசி தாக்குதல் நடத்துவார்கள். வீசப்பட்ட கொத்துக்குண்டானது வாயின் பக்கவாட்டுச்சுவற்றில் மோதி சிதறி தொண்டைக்குழிக்குள் விழுந்து காணாமல் போகும்.உடனே அடுத்த கொத்துகுண்டினை தன் கைப்பட உருவாக்கி அடுத்த தாக்குதலை தொடங்குவார்கள்.

பாசமிகுதியால் சிலர் தனது குழந்தையை பள்ளியின் வாசல் வரை வந்து விட்டுவிட்டு திருப்தியுடன் வீட்டிற்கு திரும்பிச்செல்வார்கள்.

அதுபோல ஒரு சிலர், சாதத்தினை உள்ளங்கையில் அள்ளி அதனை தனது அய்ந்து விரல்களையும் உள்நாக்கு வரை உள்ளே விட்டு வழியனுப்பிவிட்டு திருப்தியுடன் கைவிரல்களை வாய்ச்சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள்.

ஒரு சிலர் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் சாதத்தினை எடுத்து வாயின் வாயிலாகிய உதட்டிலேயே வைத்து கூரியர் அனுப்பி விட்டு அவசரமாக திரும்பி விடுவர். வாயானது அந்த உணவினை உள்ளே அனுப்புவதற்காக இரண்டு உதடுகளையும் முத்தம் கொடுப்பது போல குவித்து, மூஞ்சியினை கூம்பு வடிவத்தில் அஷ்டகோணலாக மாற்றி உணவுடன் காற்றினையும் சேர்த்து, 'ஊவ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்' என்ற நாராசமான சத்தத்துடன் உள்ளிழுத்துக்கொள்ளும்.

கைவிரல் நகம் வரைமட்டுமே உணவு படும்படி நாசூக்காக சாப்பிடுபவர்களும் உண்டு.
உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை சாம்பார்,காரக்குழம்பு,ரசம்,பாயசம்,மோர் ஆகிய ஐந்தருவிகளும் வழிந்து ஓடும்படி சாப்பிடுபவர்களும் உண்டு.

திருமணம்,ஓட்டல் போன்ற பொது இடங்களில் சாப்பிடும்போது ஒருசிலர்,

'எனக்கு ரெண்டு நாளா வயிறு சரியில்ல. கடமுடான்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. வாந்தி வர்றது மாதிரியும் இருக்கு.வாய்வுத்தொந்தரவும் இருக்கு' என்று பேசி அருகில் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை வாந்தியெடுக்க வைத்துவிடுவார்கள்.

இன்னும்சிலர் எதுவும் பேசாமல் செய்கைகளாலேயே, அதாவது சாப்பிடும்போது காது குடைவது,மூக்கு குடைவது தலையை வரட், வரட்டென்று சொறிவது, 'ஏவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்;....'என்று மிக நீளமாக பக்கத்து ஊருக்கு கேட்கும் வகையில் ஏப்பம் விடுவது போன்ற செயல்களை செய்து பக்கத்தில் சாப்பிடுபவரை பாதியில் பதறியோட வைப்பர்.

ஒரு சிலர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டு, சாப்பிட்ட இலையினை சுத்தம் செய்யும் பணியினை நிதானமாக தொடங்குவர். தனது ஆட்காட்டி விரலினால் அங்குலம் அங்குலமாக வழித்து, விரலை நக்கி நக்கி சுத்தம் செய்து, பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் ஒரு பிசிறு கூட உணவுத்துகள் கண்ணில் சிக்காத அளவிற்கு இலை சுத்தமான திருப்தியுடன் அரைமணி நேரம் கழித்தே இலையினை அடக்கம் செய்வர்.

இன்னும் சிலர், நுனிப்புல் மேயும் மாடுபோல எல்லா உணவு வகைகளிலும் பாதி மிச்சம் வைத்து விட்டு இலையினை மூடி வைக்காமலே எழுந்து சென்று விடுவர். போர்க்களம் போல் காட்சியளிக்கும் அந்த இலையினை தப்பித்தவறி பக்கத்திலிருப்பவர் பார்த்து விட்டால் அருவருப்பில் தனது இலையினையும் மூடி வைத்துவிட்டு ஓடி விடுவார்.

திருமண வீட்டில் சாப்பிடுபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகையினர், நிதானமாக ஆட்டத்தினை சாம்பாரில் தொடங்கி, அதிரடியாக பாயசம் வரை வந்து ரன் குவித்து விட்டு, மேற்கொண்டு சாப்பிட முடியாமல் வயிறாகிய கம்பெனியானது 'No Vacancy' போர்டினை வாசலில் தொங்கவிட்டு விடுவதால் 99 ரன்னில் அவுட்டாகும் டெண்டுல்கர் போல, மோர் சாதம் சாப்பிட முடியாமல் பந்தியினை விட்டு சோகமாக வெளியேறுவர்.

இரண்டாவது வகையினர் டிராவிட் ரகம். பந்தியினை தொடங்கியதும் கொஞ்சம் சாம்பார்சாதம், கொஞ்சம் ரசம் சாதம் என்று நிதானமாக ஆட்டத்தினை தொடங்கி, வெற்றிகரமாக மோர் சாதம் வரை வந்துவிடுவார்கள். நேரம்தான் வீணாகுமே தவிர கொஞ்சமாக மட்டுமே சாப்பிட்டு இருப்பதால் பசி அடங்காது. எனவே அடுத்த பந்தியாகிய ஓவரிலும் தனது ஆட்டத்தினை சாம்பார் சாதமாகிய முதல் பந்திலிருந்து மீண்டும் தொடங்குவர். இப்படியாக பரிமாறுபவராகிய நடுவர் பந்தியாகிய மைதானத்திலிருந்து விரட்டிவிடும்வரை தனது ஆட்டத்தினை அவுட் ஆகாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பர்.


எனவே, இதைப்படித்துக்கொண்டிருக்கும் எனது அருமை தமிழ்மக்களே! எனது இந்த கட்டுரையை நகல் எடுத்து இனி உங்கள் வீட்டில் நடக்கும் வீட்டு விசேஷங்களுக்கு சாப்பிட வரும் நபர்களுக்கு இலவசமாக விநியோகிக்கவும்.அதைப்படித்து முடித்தவுடன் வந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து இந்த கட்டுரையிலிருந்து சில கேள்விகள் கேளுங்கள். அந்த பரிட்சையில் வெற்றிபெறும் நபர்களை மட்டும் பந்தியில் சாப்பிட அனுமதியுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் எதிர்கால நாகரீக சாப்பாட்டு ராமன்களை உருவாக்கிய பெருமை உங்களைச் சேரும்.

இன்னும் நிறைய உங்களிடம் சொல்லணும்னு தோணுது. ஆனா லேசா பசிக்கிற மாதிரி இருக்குது. இருங்க. சாப்பிட்டுட்டு வந்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.அப்ப நான் வர்ட்ட்டா.... வணக்கம்.

5 comments:

  1. இதில் நீங்க எந்த ரகம்.
    நான் டிராவிட் மாதிரி :(

    ReplyDelete
  2. ரொம்ப

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

    நல்லா

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

    சொன்னீங்க

    ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

    தல !

    ReplyDelete
  3. நல்ல இருக்குதுங்க உங்க இடுகை எல்லாம். நான் சேவாக் மாதிரிங்க... ரசம் சோறு சாப்பிடும் போதே வயிறு ஹவுஸ்புல் ஆகிடும்.

    ReplyDelete
  4. அருமையாக இருக்கு இந்த பதிவு!

    ReplyDelete