Wednesday, December 23, 2009

பயணிகள் கவனத்திற்கு...!




வாரக்கடைசி நாள் விடுமுறைக்கு வீட்டுக்கு போயிட்டு வரலாம்னு நெனச்சி கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள்ள நுழைஞ்சதும் போர்க்களத்துல நுழைஞ்சது மாதிரி இருந்தது.

உள்ள நுழையிற ஒவ்வொரு பேருந்தையும் துரத்திகிட்டு ஓடுது ஒரு கும்பல். பேருந்து நின்னுதும் ஓடிப்போயி இருக்கிற ஒரேயெரு வாசலையும் அடைச்சிடுது. பேருந்தில இருந்து இறங்கறவங்க அந்த மக்கள் வெள்ளத்துமேல நீச்சல் அடிச்சித்தான் கரையை கடக்க முடியும்.

வாரம் 5 நாளும் 'வாங்க! வாங்க! டிக்கெட் கம்மிதான்.' ன்னு வழியனுப்ப வர்றவனையெல்லாம் கூட வாய்நிறைவா சொந்தக்காரன் மாதிரி பாசமா கூப்புடுற நடத்துனருங்க சனி ஞாயிறு மட்டும் 'சீட் இல்ல. அந்தாண்ட போ!' ன்னு பிச்சைக்காரனை தொரத்துரது மாதிரி தொரத்தியடிக்கிறானுங்க.

அப்படியும் படாதபாடுபட்டு ஒரு பேருந்துக்குள்ள ஏறி உட்கார்ந்ததும் பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கிற மனுசனோட பனிப்போர் ஆரம்பிச்சிடுச்சி.

ரெண்டு சீட்டுக்கும் இடையில இருக்கிற கை வைக்கிற கட்டைக்கு ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிச்சிடுச்சி ரெண்டு பேருக்கும்.

அந்த ஆக்கிரமிப்புப்போர் வெட்டுகுத்துல முடிஞ்சதும் உண்டுன்னு என் நண்பன் எப்பவோ சொன்னது என் நினைவுக்கு வந்ததால சரி போய்த்தொலையட்டும் னு ஒருதலைப்பட்சமா போர்நிறுத்தம் அறிவிச்சு விட்டுக்கொடுத்துட்டேன்.

அடுத்தது அந்த மனுசன் 'பப்பரக்கா' ன்னு நல்லா காலை நீட்டி படுத்துகிட்டு குறட்டை விட ஆரம்பிச்சிட்டாரு. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு கைக்குழந்தை மாதிரி என்னோட தோள்ல சாய ஆரம்பிச்சிட்டாரு. பல தடவை தூக்கி நிறுத்தியும் திரும்பத் திரும்ப சாய்ஞ்சுகிட்டே இருந்துச்சி அந்த சாய்ந்த கோபுரம். வேற வழியில்லாம நானும் அந்தாளு தலையில என்னோட தலைய முட்டுக்கொடுத்து தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

பேருந்து போய்க்கிட்டே இருந்துச்சு. திடீர்னு பயங்கரமான 'ங்கப்பு' மூக்கைத் துளைச்சி என்னோட தூக்கத்தை கலைச்சிடுச்சி.

என்னடான்னு கண்முழுச்சிப் பார்த்தா பேருந்து நடுக்காட்டுல ஓரமா நின்னுகிட்டு இருக்குது.

'பஸ்சு பத்து நிமிசம் நிக்கும். சாப்பிடுறவங்க சாப்புடுலாம்' ன்னு கொரலு கேட்குது.

வெளியில தலையை நீட்டி எட்டிப்பார்த்தா நடுக்காட்டுல நாலஞ்சு பேருந்து நிக்கிது ஒரு தகரகொட்டகை முன்னாடி.

கொட்டகையோட தலையில ஆளும் கட்சியோட கொடி பறக்குது. நாலு வருசத்துக்கு முன்னாடி அதே இடத்தில அப்ப ஆளும்கட்சியா இருந்து இப்ப எதிர்க்கட்சியா உள்ள கட்சியோட கொடி பறந்ததா எனக்கு ஞாபகம்.

ரொம்ப நேரமா ஆத்திரத்தோட 'அதை'யும் அடக்கிகிட்டு வந்த அப்பாவிப் பயணிங்க, பேருந்து நின்னதும் தன்னோட புலனடக்கத்தை கைவிட்டுட்டு திக்குக்கு நாலு பேரா பிரிஞ்சி ஒதுக்குப்புறம் தேடி ஓட ஆரம்பிச்சாங்க. அப்படி ஓடிப்போயி இறக்குமதிக்கு தயாரான பயணிகளை, நீளமான குச்சியை வெச்சிகிட்டு பயங்கரமான உருவத்தோட இருந்த ஒருத்தன்,

'யோவ் இங்க போவாதீங்கய்யா. ஓட்டல் பின்னாடி பாத்ரூம் இருக்கு. அங்க போங்கய்யா' ன்னு விரட்ட ஆரம்பிச்சான். இப்படி நாள்தோறும் அவசரத்துக்கு ஒதுங்கும் அப்பாவி சனங்களை விரட்டுறதுக்காகவே அவனுக்கு சம்பளம் போட்டு அங்க நிறுத்தி வெச்சிருக்கானுங்க போலிருக்கு.

பயணிகள் பல பேரு அவனோட அதட்டலுக்கு பயந்து பாரத்தை இறக்கி வைக்கும் முயற்சியை பாதியிலேயே கைவிட்டு உலகின் மிகவும் பயங்கரமான அந்த கழிவறையை நோக்கி ஓட ஆரம்பிச்சாங்க. விவரமான ஆசாமிங்க சில பேரு அந்த பிரதேசத்திலிருந்து தலைமறைவாகி பலமைல் தூரத்துக்கு நடைபயணம் செஞ்சு வெட்டவெளியில பாரத்தை இறக்கி வெச்சிட்டு திருப்தியோட திரும்பிவந்தாங்க.

ரொம்பநேரம் பக்கத்து சீட்டுக்காரனோட மண்டையிடிச்சண்டை போட்டு பாடி ரொம்ப டயர்டாயிடுச்சி. ரெண்டு தோசை தின்னுவெப்போம்னு அந்த ஓட்டல்ல நுழைஞ்சு நாற்காலியில குந்துனேன்.

சிக்குப்புடிச்ச தலைய சொறிஞ்சிகிட்டு என்கிட்ட வந்த ஒருத்தன், 'என்ன சார் சாப்புடிறீங்க?' ன்னு கேட்டுகிட்டே சட்டைக்குள்ள கைய விட்டான். மெனு கார்டு எடுக்கிறானோன்னு நெனைச்சேன். உள்ள கைய விட்டவன் அக்குளை சரட் புரட் டுன்னு சொறிய ஆரம்பிச்சிட்டான். பசி வந்தா பத்தும் பறந்து போகும்ங்கற பழமொழிக்கு மரியாதை கொடுத்து அவனோட சேட்டைகளை பொறுத்துகிட்டு 'ஒரு மசால் தோசை எடுத்திட்டு வாங்க' ன்னு சொல்லி அனுப்புனேன்.

இவனும் 'ஸ்பெஷல் மசால் தோச ஒண்ணு' ன்னு கத்திகிட்டே அடுப்பங்கரைக்கு போனான்.

கொஞ்சம் நேரம் கழிச்சு நசுங்கிப்போன ஒரு தட்டுல வெந்தும் வேகாம இருந்த ஒரு மசால் தோசைய எடுத்துகிட்டு வந்து எனக்கு போட்டு வெச்ச இலையில 'பொத்' துன்னு தூக்கி போட்டான். அப்புறம் சட்னி,சாம்பாருங்கிற பேருல சில ரசாயனக் கலவைகளை தோசை மீது ஊத்தினான். இருந்த பசிக்கு அதை தோசையோட குழப்பியடிச்சி சாப்பிட்ட உடனே என்னோட அடிவயித்தில சில ரசாயன மாற்றங்கள் நிகழ ஆரம்பிச்சிடுச்சி.

'சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல' ங்கற வாசகம் ஓட்டல் வாசலிலேயே எழுதியிருந்ததால, ஊருக்குப்போயி தீர்வுகாணலாம்னு முடிவு பண்ணி சாப்பிட்டு முடிச்சிட்டு,சர்வரை பில் எடுத்திட்டு வரச்சொன்னேன்.

சர்வர் ஒரு சில்வர் கிண்ணத்துல கசங்கின ஒரு சின்னத்தாளை வெச்சி எடுத்திட்டு வந்தான். சரி டிப்ஸ் எதிர்பார்க்கிறான் போலிருக்குன்னு முடிவு பண்ணி அதை எடுத்து தோசை விலையை பார்த்தவுடனே தலைசுத்த ஆரம்பிச்சிடுச்சி.

'என்னய்யா? ஒரு தோசை முப்பத்தி ஆறு ரூவாயா?'

'ஆமா சார். விலை கம்மிதான்' ன்னு சொல்லிட்டு கேவலமா இளிச்சான்.

ஐம்பது ரூபாய் தாளை எடுத்து அந்த கிண்ணத்துல வெச்சேன்.

போய் கல்லாவில உட்கார்ந்து இருந்த முதலாளி கிட்ட கொடுத்திட்டு அவருகிட்டேயே நின்னு ரொம்ப நேரமா பேசிகிட்டு இருந்தான்.

மீதி சில்லரை பதினாலு ரூபாயில நாலு ரூபாய் சில்லரையை அவனுக்கு டிப்ஸ் கொடுத்துட்டு மீதி பத்து ரூபாயில தோசை செரிக்கிறதுக்கு ஒரு கோக் சாப்பிடலாம்னு திட்டம் போட்டுகிட்டு நான் குந்தியிருந்தேன்.

அவன் முதலாளியோட ரொம்பநேரம் பேச்சுவார்த்தை நடத்திகிட்டேயிருந்ததால மறந்திட்டான் போலிருக்குன்னு நெனச்சி நானே நேரா கல்லாகிட்ட போய் நின்னு சர்வரை உத்துப் பார்த்தேன்.அவன் என்னை கண்டுக்கவே இல்லை. அப்புறம் தொண்டையைச் செருமி அவனோட கவனத்தை கவர நினைச்சேன். அந்த முயற்சியும் தோல்வியில முடிஞ்சது.அப்புறம் லொக்கு லொக்குன்னு இருமிப் பார்த்தேன். என்னை ஓரக்கண்ணால பார்த்தவன் திரும்பி நின்னுகிட்டு பேச்சை தொடர்ந்தான்.

வேற வழியில்லாம அவனோட தோளை தொட்டு,

'சர்வர். மீதி சில்லரை தர்றீங்களா?' ன்னு கேட்டவுடனே

'அதான் மீதி சில்லரை எல்லாத்தையும் டிப்ஸா எனக்கு குடுத்தியே சார்?' ன்னு என்னை முறைச்சான்.

'நியாயமா உங்க ஓட்டல் தோசையைத் தின்னதுக்காக நீங்கதாண்டா எனக்கு நிவாரணத்தொகையா டிப்ஸ் கொடுக்கணும்' னு ஆவேசமா கத்தினேன்(மனசுக்குள்ள.)

பரிமாறுனப்ப குழந்தை மாதிரி பிஞ்சு மூஞ்சியோட இருந்த அவனோட முகம் மீதி சில்லரை கேட்டவுடனே கொடூர குரங்கா கிராபிக்ஸ் உதவியில்லாமயே மாறினதைக் கண்டு மிரண்டுபோய் சத்தம்போடாம அந்த தகர கொட்டகையை விட்டு வெளியில வந்தேன்.

திரும்பிப் பார்க்காம பேருந்துக்குள்ள ஏறி உட்கார்ந்து கும்பகோணம் எப்படா வந்து சேரும்ங்கிற ஏக்கத்தோட ஒரு குட்டித் தூக்கம் போட ஆரம்பிச்சேன்.

பெருமூளை தூக்கத்தில இருக்கும்போது என்னோட சிறுமூளை சில சிந்தனைகளை சிதற விட்டிச்சு.

அதாகப்பட்டது,

நீண்டதூரம் பயணம் போகும்போது இடையில் சாப்பிடுவதற்கான உணவை கையோட எடுத்துகிட்டு போகணும்.

நடத்துனருகிட்ட ஏமாறாம இருக்க, சில்லரைகள் மாத்திவெச்சுக்கணும்.

ஐம்புலன்களையும் அடக்கத் தெரிஞ்சவங்க மட்டும் அந்தமாதிரி நடுக்காட்டில வழிப்பறி பண்ணும் இடங்கள்ல நிக்கும் பேருந்துல ஏறணும். மத்தவங்க இடைநில்லாப் பேருந்துல ஏறி பயணம் செய்து தன்னோட உயிரையும் உடைமைகளையும் காப்பாத்திக்கணும்.

இவைதான்ங்க தூக்க கலக்கத்தோட நான் கண்டுபிடிச்ச அந்த துக்ககரமான உண்மைகள்.

சரி நான் தூக்கத்தை கண்டினியூ பண்ணி மேலும் பல உண்மைகளை கண்டுபிடிச்சி உங்ககிட்ட அப்புறமா உளறுறேன்.இப்ப நான் தூங்கறேன்.கைப்புள்ள! இன்னும் ஏண்டா முழிச்சிகிட்டு இருக்க? தூங்ங்ங்......

கொர்ர்ர்ர்ர்ர்ர்........................................



.....