Tuesday, April 28, 2015

சுட்டிப்பெண் சுண்டு - லூட்டி No:3.


                                          


சுண்டுவுக்கு பிடிக்காத பலகாரம் என்றால் பக்கத்தில் இருப்பவருக்கு அதை பாசமாக ஊட்டி விடுவாள்.

ஆனால் பிடித்த பலகாரம் என்றால்...........

அம்மா மண்டு  பணியாரம் சுட்டு அதில் நான்கைந்து எடுத்து தட்டில் வைத்து சுண்டுவிடம்  கொடுத்தாள்.

"பாப்பா! இதை தாத்தா கிட்ட கொடுத்துட்டு வா.  அப்புறம் நீ சாப்பிடலாம்'" 

தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் சுண்டு.

அங்கே வாசலில் நின்றுகொண்டு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார் தாத்தா.பணியாரம் வாசனை அவரது நாசியில் புகுந்து நாக்கில் எச்சிலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

திரும்பிப் பார்த்தார்.

சுண்டு பணியாரத் தட்டுடன் நின்றுகொண்டிருந்தாள்.

"தாத்தா! உனக்கு பணியாரம் புடிக்காதா? ஏன் தாத்தா? சுகர் இருக்குன்னு சாப்பிட மாட்டியா?   சரி சரி நானே தின்னுக்கிறேன்"

 என்று சொல்லிவிட்டு....


தாத்தாவிடமிருந்து எந்தப்பதிலையும் எதிர்பார்க்காமல் தட்டில் இருந்த எல்லா பணியாரங்களையும் 'லபக்'  'லபக்' என்று நொடியில் விழுங்கினாள் சுண்டு.

தாத்தா வாயில் ஊறிய சலுவாய் வழிந்து  தரையை நனைத்துக் கொண்டிருந்தது.

.......

Sunday, April 26, 2015

சுட்டிப் பெண் சுண்டு!..... லூட்டி - No: 2


குண்டு சன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.

அவனுக்கு கடன் கொடுத்த கைலாசம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 உடனே சுண்டுவை அழைத்து, தான் வீட்டில் இல்லை என கைலாசத்திடம் சொல்ல சொல்லிவிட்டு ஒரு அறையில் ஒளிந்து கொண்டான்.

சுண்டு வீட்டு வாசலுக்கு வந்தாள்.

"பாப்பா! அப்பாவை கூப்பிடும்மா"

"அப்பா வீட்ல இல்ல. வெளியில போயிருக்காங்க."

"எப்பம்மா வருவாரு?"

"அதெல்லாம் என்கிட்ட சொல்லல. 'அந்த கடன்கார நாயி கைலாசத்துகிட்ட அப்பா வீட்ல இல்லன்னு சொல்லு' ன்னு மட்டும் தான் சொன்னாரு அப்பா. இருங்க கேட்டு சொல்றேன்"  
 என்று ....

குண்டு ஒளிந்திருந்த அறையை நோக்கி,

" அப்பா நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்கன்னு கேட்கறாங்க இந்த மாமா. என்ன சொல்லணும்?"

 என்று கேட்டு,..

 கடன் காரன் கைலாசத்தின் கையில் குண்டுவின் காதை ஒப்படைத்தாள் சுண்டு.

...

சுட்டிப் பெண் சுண்டு!



குண்டோதரன்  அதாவது குண்டுவுக்கும், மண்டோதரி   அதாவது மண்டுவுக்கும் பிறந்த 3 வயது சுட்டிப்பெண் சுண்டு. 

சுண்டுவின் லூட்டிகளை கண்டு பல் விழுந்த பாட்டிகளும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்பதற்காக இந்த தொடர்.......



                                                                        .......................

லூட்டி-1


இரவு 12 மணி.

முகத்தில் ஓங்கி அடி விழுந்தது குண்டோதரனுக்கு.

வாரிச்சுருட்டி எழுந்தான்.

சுண்டு நின்று கொண்டிருந்தாள்.

"அப்பா! எனக்கு இப்பவே பந்து வாங்கிக் குடுங்க. நான் விளையாடணும்"

"இப்ப ஒரு கடையும் இருக்காதும்மா. எல்லாம் கடையச் சாத்திட்டு தூங்கப் போயிட்டாங்க."

"எனக்கு இப்பவே வேணும் ஙேஙே..........."  என்று அழ ஆரம்பித்தாள்.

மண்டு எழுந்து,

 "ஏங்க! உங்க செல்போன்லதான் பந்து விளையாடற மாதிரி கேம் இருக்கே. அதை எடுத்துக் குடுங்க "  என்றாள்.

குண்டுவும் பந்து விளையாட்டை செல்போனில் காண்பித்து, 

"இந்தா செல்லம்! பந்து விளையாடு" என்று கொடுத்தான்.

"இதை எப்படி விளையாடணும் தெரியுமா உனக்கு?"  என்று கேட்டான் குண்டு.

"எனக்கு நல்லாத் தெரியும். இப்ப பாருங்க எப்படி  விளையாடறேன்னு" என்று சொல்லிவிட்டு ,..............

செல்போனை 'சுட்டேர்'  என்று சுவற்றில் அடித்தாள்.

....