Tuesday, July 14, 2009

நில்..கவனி..சாப்பிடு!



காலையில் அலுவலகம் புறப்படுவதற்காக அவசர அவசரமாக சாப்பிட அமரும்போதுதான்,

'உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கா? சீதபேதியா? காலராவாக இருக்கலாம். உடனே ஒரு தேக்கரண்டி உப்புடன் ஆறு தேக்கரண்டி சர்க்கரையை கரைத்துக்கொடுங்கள்.'என்று தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பாகும்.

மதியம் சாப்பிட அமரும் நேரத்தில்,

'உங்களுக்கு இருமலா? சளியுடன் ரத்தமும் வருகிறதா? தொடர்ந்து காய்ச்சலா? காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனே அருகிலுள்ள சுகாதார மையத்தினை அணுகுவீர்!' என பாசமுடன் ஆலோசனை வழங்குவார்கள்.

இரவு நேரம் டின்னராவது நிம்மதியாக சாப்பிடலாம் என்றால் அப்போதுதான் விளம்பரத்தில்,குளோசப் காட்சிகளில் டாய்லெட்டை காண்பித்தபடி டாய்லெட் கழுவும் பாட்டிலை எப்படி உபயோகிப்பது என்று செய்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இப்படியாக எது எதற்கோ காசு செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்.


இந்த மக்களுக்கு 'பொது இடங்களில் நாகரீகமாக சாப்பிடுவது எப்படி?' என்று விளம்பரம் செய்தால் நல்லாயிருக்கும்.


'பந்திக்கு முந்திக்கொள்' என்று நம் முன்னோர்கள் பழமொழி கூறினார்களே தவிர 'பந்தியில் நாகரீகமாக சாப்பிடு' என்று ஏனோ கூற மறந்து விட்டனர்.

சாப்பிடுவதில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

ஒரு சிலர் சாதத்தினை கொத்தாக கையெறிகுண்டு போல உருட்டி அண்டைநாட்டின் மீது வீசுவது போல கோபமாக தொண்டைக்குழியை நோக்கி வீசி தாக்குதல் நடத்துவார்கள். வீசப்பட்ட கொத்துக்குண்டானது வாயின் பக்கவாட்டுச்சுவற்றில் மோதி சிதறி தொண்டைக்குழிக்குள் விழுந்து காணாமல் போகும்.உடனே அடுத்த கொத்துகுண்டினை தன் கைப்பட உருவாக்கி அடுத்த தாக்குதலை தொடங்குவார்கள்.

பாசமிகுதியால் சிலர் தனது குழந்தையை பள்ளியின் வாசல் வரை வந்து விட்டுவிட்டு திருப்தியுடன் வீட்டிற்கு திரும்பிச்செல்வார்கள்.

அதுபோல ஒரு சிலர், சாதத்தினை உள்ளங்கையில் அள்ளி அதனை தனது அய்ந்து விரல்களையும் உள்நாக்கு வரை உள்ளே விட்டு வழியனுப்பிவிட்டு திருப்தியுடன் கைவிரல்களை வாய்ச்சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள்.

ஒரு சிலர் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் சாதத்தினை எடுத்து வாயின் வாயிலாகிய உதட்டிலேயே வைத்து கூரியர் அனுப்பி விட்டு அவசரமாக திரும்பி விடுவர். வாயானது அந்த உணவினை உள்ளே அனுப்புவதற்காக இரண்டு உதடுகளையும் முத்தம் கொடுப்பது போல குவித்து, மூஞ்சியினை கூம்பு வடிவத்தில் அஷ்டகோணலாக மாற்றி உணவுடன் காற்றினையும் சேர்த்து, 'ஊவ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்' என்ற நாராசமான சத்தத்துடன் உள்ளிழுத்துக்கொள்ளும்.

கைவிரல் நகம் வரைமட்டுமே உணவு படும்படி நாசூக்காக சாப்பிடுபவர்களும் உண்டு.
உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை சாம்பார்,காரக்குழம்பு,ரசம்,பாயசம்,மோர் ஆகிய ஐந்தருவிகளும் வழிந்து ஓடும்படி சாப்பிடுபவர்களும் உண்டு.

திருமணம்,ஓட்டல் போன்ற பொது இடங்களில் சாப்பிடும்போது ஒருசிலர்,

'எனக்கு ரெண்டு நாளா வயிறு சரியில்ல. கடமுடான்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. வாந்தி வர்றது மாதிரியும் இருக்கு.வாய்வுத்தொந்தரவும் இருக்கு' என்று பேசி அருகில் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை வாந்தியெடுக்க வைத்துவிடுவார்கள்.

இன்னும்சிலர் எதுவும் பேசாமல் செய்கைகளாலேயே, அதாவது சாப்பிடும்போது காது குடைவது,மூக்கு குடைவது தலையை வரட், வரட்டென்று சொறிவது, 'ஏவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்;....'என்று மிக நீளமாக பக்கத்து ஊருக்கு கேட்கும் வகையில் ஏப்பம் விடுவது போன்ற செயல்களை செய்து பக்கத்தில் சாப்பிடுபவரை பாதியில் பதறியோட வைப்பர்.

ஒரு சிலர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டு, சாப்பிட்ட இலையினை சுத்தம் செய்யும் பணியினை நிதானமாக தொடங்குவர். தனது ஆட்காட்டி விரலினால் அங்குலம் அங்குலமாக வழித்து, விரலை நக்கி நக்கி சுத்தம் செய்து, பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் ஒரு பிசிறு கூட உணவுத்துகள் கண்ணில் சிக்காத அளவிற்கு இலை சுத்தமான திருப்தியுடன் அரைமணி நேரம் கழித்தே இலையினை அடக்கம் செய்வர்.

இன்னும் சிலர், நுனிப்புல் மேயும் மாடுபோல எல்லா உணவு வகைகளிலும் பாதி மிச்சம் வைத்து விட்டு இலையினை மூடி வைக்காமலே எழுந்து சென்று விடுவர். போர்க்களம் போல் காட்சியளிக்கும் அந்த இலையினை தப்பித்தவறி பக்கத்திலிருப்பவர் பார்த்து விட்டால் அருவருப்பில் தனது இலையினையும் மூடி வைத்துவிட்டு ஓடி விடுவார்.

திருமண வீட்டில் சாப்பிடுபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகையினர், நிதானமாக ஆட்டத்தினை சாம்பாரில் தொடங்கி, அதிரடியாக பாயசம் வரை வந்து ரன் குவித்து விட்டு, மேற்கொண்டு சாப்பிட முடியாமல் வயிறாகிய கம்பெனியானது 'No Vacancy' போர்டினை வாசலில் தொங்கவிட்டு விடுவதால் 99 ரன்னில் அவுட்டாகும் டெண்டுல்கர் போல, மோர் சாதம் சாப்பிட முடியாமல் பந்தியினை விட்டு சோகமாக வெளியேறுவர்.

இரண்டாவது வகையினர் டிராவிட் ரகம். பந்தியினை தொடங்கியதும் கொஞ்சம் சாம்பார்சாதம், கொஞ்சம் ரசம் சாதம் என்று நிதானமாக ஆட்டத்தினை தொடங்கி, வெற்றிகரமாக மோர் சாதம் வரை வந்துவிடுவார்கள். நேரம்தான் வீணாகுமே தவிர கொஞ்சமாக மட்டுமே சாப்பிட்டு இருப்பதால் பசி அடங்காது. எனவே அடுத்த பந்தியாகிய ஓவரிலும் தனது ஆட்டத்தினை சாம்பார் சாதமாகிய முதல் பந்திலிருந்து மீண்டும் தொடங்குவர். இப்படியாக பரிமாறுபவராகிய நடுவர் பந்தியாகிய மைதானத்திலிருந்து விரட்டிவிடும்வரை தனது ஆட்டத்தினை அவுட் ஆகாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பர்.


எனவே, இதைப்படித்துக்கொண்டிருக்கும் எனது அருமை தமிழ்மக்களே! எனது இந்த கட்டுரையை நகல் எடுத்து இனி உங்கள் வீட்டில் நடக்கும் வீட்டு விசேஷங்களுக்கு சாப்பிட வரும் நபர்களுக்கு இலவசமாக விநியோகிக்கவும்.அதைப்படித்து முடித்தவுடன் வந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து இந்த கட்டுரையிலிருந்து சில கேள்விகள் கேளுங்கள். அந்த பரிட்சையில் வெற்றிபெறும் நபர்களை மட்டும் பந்தியில் சாப்பிட அனுமதியுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் எதிர்கால நாகரீக சாப்பாட்டு ராமன்களை உருவாக்கிய பெருமை உங்களைச் சேரும்.

இன்னும் நிறைய உங்களிடம் சொல்லணும்னு தோணுது. ஆனா லேசா பசிக்கிற மாதிரி இருக்குது. இருங்க. சாப்பிட்டுட்டு வந்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.அப்ப நான் வர்ட்ட்டா.... வணக்கம்.

Friday, July 10, 2009

வாழ்க்கை




கரையிலிருந்து..

நீரில் விழுந்து..

நெடும் பயணம் தொடங்கியது. – மீண்டும்

கரை ஒதுங்கும் இடம்தேடி-

ஓர் ஒற்றை இலை.

.

நகரத்துச் சொர்க்கம் : நங்கநல்லூர்




நங்கநல்லூர்!

சென்னை என்ற பரந்து விரிந்த பாலைவனத்தில் ஓர் அதிசய அமைதிப்பூங்கா.

மொட்டைமாடியில் நின்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் தென்னை மரங்களின் பசுமை.

விடியற்காலையில் கேட்கும் பூஜை மணியோசைகள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளிவரும் சாம்பிராணி புகை மண்டலத்தில் கரைந்துபோகும் மனதின் அழுத்தங்கள்.

மாலை நேரங்களில் கேட்கும் மனதை மயக்கும் சங்கீத கீர்த்தனைகள்.

நேர்த்தியான சாலைகளில் நிதானமாக பயணிக்கும் வாகனங்கள்.

வறுமையின் எச்சத்தினைக்கூட காணாத வளம் மிக்க மனிதர்கள்.

32 அடி உயர ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயம், நங்கநல்லூரின் அடையாளச்சின்னம்.

தென்னைமர உயர ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்கள் பலர்; தொன்னையில் வைத்துக் கொடுக்கப்படும் சுவையான பிரசாதத்திற்காக வரும் பக்தர்கள் சிலர் என்று எப்போதும் கூட்டத்தினால் நிரம்பி வழியும் அந்த ஆலயம்.

கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளுமே அந்த ஊரில் குடிகொண்டுள்ளன.

நள்ளிரவின் அமைதியில் தெருக்களில் அச்சமின்றி நடைபயிலும் தம்பதிகளை அங்கே காண முடியும்.

இத்தனையும் மீறி,

'என் பையன் அமெரிக்காவிலே சாப்ட்வேர் இஞ்சினியரா ஒர்க் பண்றான். கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டான். மாசா மாசம் எங்க செலவுக்கு பணம் அனுப்பிடுவான். தினமும் சாட்டிங்ல என் பேரப்பிள்ளை கிட்ட பேசினாத்தான் எனக்கு தூக்கமே வரும்'

என்று பெருமையாகச் சொல்லும் சில வயதான பெற்றோரின் தனிமை வாழ்க்கை என் மனதை நெருடுகிறது.

.

விகடனில் எனது படைப்பு

'சாமி குத்தம்' -சிறுகதை

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 09-07-2009 வியாழக்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/manipayalstory09072009.asp

Wednesday, July 8, 2009

சாமி குத்தம் - சிறுகதை


கத்தியின் கூர்முனை அந்த நள்ளிரவின் கருமையிலும் மின்னியது.

அந்தக்கத்தியை தன்னுடைய இடுப்பில் எடுத்து செருகிக்கொண்டான் அறிவழகன்.


'நாளைக்கு இந்நேரம் நாம என்ன நிலையில் இருப்போம்னு யாருக்கும் தெரியாது. ஆனால் இத செஞ்சுத்தான் ஆகணும். வேற வழியில்லை' என்றான் கவியரசு.

'நாம எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கூட கேட்க மாட்டேனுட்டானுங்க.அவனுங்களுக்கு புத்தி புகட்டினாத்தான் நாம இந்த ஊர்ல இனிமே மனுசனா இருக்கலாம்' பற்களை நறநறவென கடித்தான் மேகநாதன்.

...........................................................................................................

அன்று மாலை ஊர் மத்தியில் நடந்த ஊர்ப்பொதுக்கூட்டத்தில் அறிவழகன் அமைதியாகத்தான் சொன்னான்.

'அய்யா! பெரியவங்க எல்லாரும் இங்க இருக்கீங்க. உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை. ஒவ்வொரு வருசமும் நடக்கிற அம்மன் தேரோட்டம் எல்லாத் தெருவுக்கும் போகுது. ஆனா பல வருசமா எங்க மேலத்தெருவுக்கு மட்டும் வர்றதில்ல. காரணம் கேட்டா அது அந்த காலத்திலேயிருந்து வர்ற நடைமுறைன்னு சொல்றீங்க. ஆனா அது உண்மையில்லைங்க. அந்த காலத்துல எங்க தெரு ரொம்ப குறுகலா இருந்துச்சு. அதனால தேர் உள்ள வரமுடியல. ஆனா இப்பத்தான் அரசாங்கத்துல நல்ல அகலமா சாலை போட்டு கொடுத்து இருக்காங்க. அதனால இந்த வருசம் அம்மன் தேரோட்டம் எங்க தெருவுக்கும் வரணும்னு எங்க தெரு சனங்க ஆசைப்படுறாங்க. நீங்க பெரியவங்கதான் நல்ல முடிவு சொல்லணும்'

உடனே தெட்சிணாமூர்த்தி கோபமாக எழுந்தார்

'என்னப்பா! புதுசா பிரச்சினையை கௌப்பலாம்ணு வந்திருக்கியா?. உங்க தெரு வழியா எந்த வருசமும் அம்மன் போனதில்லை. அப்படி வரச்சொல்லி உங்கத்தெருவுல இருக்கிற பெரியவங்க யாரும் இதுவரைக்கும் எங்க கிட்ட கேட்டதும் இல்ல. இப்ப நீ வந்து புதுசா இந்தப்பிரச்சினையை கிளப்பாதே. போகாத தெருவுக்கு அம்மன் போனா சாமி குத்தமாயிடும். அப்புறம் ஊருக்கு ஏதாவது கெடுதி நடந்தா என்ன பண்றது? கொஞ்சம் படிச்சிட்டாலே புத்தி கோணலாயிடும் போலிருக்கு.'

'அய்யா! சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்தானுங்களே. இந்தப்பூமியை படைச்ச சாமிக்கு அந்தப்பூமியில இருக்கிற எங்க தெரு மட்டும் எப்படிங்க பிடிக்காம போகும்?. நீங்க இப்படி பண்றதால எங்க தெரு சனங்கள மத்த தெரு சனங்க ஏதோ நாயைப் பார்க்கிறது மாதிரி கேவலமா பார்க்கிறாங்க.ரொம்ப அவமானமா இருக்குங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க.'

'இதப்பாரு தம்பி! நீ எங்களுக்கு அறிவுரை சொல்லாத. என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். நீ சொல்ற படியெல்லாம் நாங்க செய்ய முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க. முதல்ல கூட்டத்த விட்டு வெளியே போ.'

அவமானப்பட்டவனாக திரும்பினான் அறிவழகன்.

...........................................................................................................

'சரி. நாளைக்கு என்ன பண்ணனும்னு இன்னும் ஒரு தடவை சொல்றேன். எல்லாரும் கவனமா கேட்டுக்கங்க.
நாளைக்கு அந்தி நேரத்துலதான் அந்த அம்மன் தேர் நம்ம தெரு முனைக்கு பக்கத்தில வரும். அந்த நேரத்தில நாம ஆறு பேரும் திடீர்னு கத்தி அருவாளோட கூட்டத்துல நுழையணும். அங்க நின்னுகிட்டு இருக்கிற ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரம் கழுத்தில கத்தியை வெச்சிட்டு தேரை நம்ம தெருவுக்கு திருப்பச்சொல்லி மிரட்டணும். தேர் நல்லபடியா நம்ம தெருவை சுத்தி வந்ததும் நாம அங்கிருந்து போய் போலீசுல சரணடையனும். என்ன தண்டனை கிடைக்குதோ அதை நம்ம தெரு சனங்க நலனுக்காக நாம ஏத்துக்குவோம்.'

எல்லோரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர்.

...........................................................................................................

மறுநாள் அம்மன் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

ஊரில் அனைத்து தெருக்களையும் சுற்றிவந்தபின் மேலத்தெரு முனைக்கு அருகிலிருந்த புதுத்தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது.

திடீரென கூட்டத்தில் ஊடுறுவிய அறிவழகனும் அவனது நண்பர்களும் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்து தேர் முன்பாக நடந்து வந்துகொண்டிருந்த ஊர் நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் கழுத்தில் வைத்து அழுத்தினர்.

'டேய்! யாராவது கிட்ட வந்தீங்கன்னா உங்க நாட்டாமை பொணமாயிடுவாரு. மரியாதையா தேரை மேலத்தெரு பக்கம் திருப்புங்கடா!' என்று கோபமாக கத்தினான் அறிவழகன்.

தேர் மேலத்தெரு பக்கமாக திரும்ப ஆரம்பித்தது.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து நான்கைந்து போலிஸார் துப்பாக்கிகளுடன் அறிவழகனையும் அவனது நண்பர்களையும் சுற்றி வளைத்தனர்.

'டேய்! மரியாதையா நாட்டாமையை விட்டுட்டு சரண்டர் ஆயிடுங்க. இல்லைன்னா, நாயைச் சுடுறது மாதிரி சுட்டு சாகடிச்சிடுவேன்.'

அறிவழகனும் அவனது நண்பர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கைகளைத்தூக்கியபடி போலீசாரிடம் சரணடைந்தனர். உடனே ஊர்மக்கள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். உடம்பில் ரத்தம் வழிய அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச்சென்றனர்.

'நீங்க இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்கீங்கன்னு எனக்கு காலையிலேயே உங்க தெருக்காரன் ஒருத்தன் சொல்லிட்டான்டா. உங்களை இப்படி கையும் களவுமா பிடிக்கணும்னுதான் போலீஸ்ல புகார் கொடுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன். என் கழுத்திலயா கத்தி வெக்கறீங்க? ஜெயில்ல கிடந்து சாவுங்கடா!' என்று கோபமுடன் உருமினார் நாட்டாமை கல்யாணசுந்தரம்.

'நல்லவேளை! எங்க, அவனுங்க திட்டப்படி தேரு அந்தத்தெருவுக்குள்ள போயி சாமி குத்தத்துக்கு ஆளாயிமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். அந்த மாரியாத்தா நம்மளையெல்லாம் காப்பாத்திட்டா.'என்று பரவசமுடன் அம்மனை பார்த்து வணங்கினார் தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி கோபாலசாமி.

'சரி சரி! தேரை புதுத்தெருபக்கம் திருப்புங்கப்பா'என்று கூட்டத்தினை விரட்டினார் தெட்சிணாமூர்த்தி.

தேர் மேலத்தெரு முனையிலிருந்து புதுத்தெரு நோக்கி நகர ஆரம்பித்தது.

திடீரென பயங்கர சத்தத்துடன் தேரின் அச்சாணி முறிந்து தேர் ஒருபக்கமாக சாய்ந்தது. தேரின் மேல் அமர்ந்திருந்த பூசாரி,தேரிலிருந்து கீழேவிழுந்து தேருக்கு அடியில் நசுங்கினார். தேரிலிருந்து விடுபட்ட வேகத்தில் சக்கரமானது அருகில் நின்றுகொண்டிருந்து நாட்டாமை கல்யாணசுந்தரத்தின் மீது மோதி தூக்கி எறிந்துவிட்டு வேகமாக ஓடி, மேலத்தெருவுக்குள் நுழைந்து அறிவழகனின் குடிசை வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்து அடங்கியது.


சாய்ந்து கிடந்த தேரின் மேல் இருந்த அம்மன், முன்பைவிட மேலும் உக்கிரமாகக் காட்சியளித்தாள்.

..........................................................................................................

Thursday, July 2, 2009

இன்றைய செய்திகள் (02-01-2009)

செய்தி 1

***************************


செய்தி 2

நிஜம் :

'அரசியலுக்கு வந்துவிட்ட பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது' என பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

நிழல் :

சிரஞ்சீவியின் இந்த கருத்து தவறானது என்றும், முயற்சி செய்தால் கதாநாயகியுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்ட கையோடு, மேக்கப் கலையாமல் சட்டமன்றத்திற்கும் சென்று வரமுடியும் என்றும் நடிகர்களும் கட்சித்தலைவர்களுமான விஜயகாந்தும்,சரத்குமாரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.




செய்தி 3

நிஜம்:

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்ப சம்பந்தப்பட்டதாக உள்ளது. எனவே இத்திட்டம் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் குறைவு என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் பேட்டி அளித்தார்.

நிழல் :

அதாவது இத்திட்டம் இலங்கை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும் அதனாலேயே இலங்கையை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தினை கிடப்பில் போட்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி 4

நிஜம்:

சிங்களர்களுக்கு கோபம் ஏற்படும் செயல்களில் ஈடுபடாமல் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளவேண்டும் என சட்டசபையில் கருணாநிதி தெரிவித்தார்.

நிழல்:

முடிந்தால், சிங்களர்கள் அசதியாக இருக்கும் சமயத்தில் அவர்களது கால்களை அமுக்கி விடுவது, அவர்களுக்கு வியர்த்தால் விசிறியால் விசிறி விடுவது போன்ற பணிவிடைகள் செய்து சிங்களர்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் வணங்காமண் கப்பல் நிவாரண பொருட்களை ஈழத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசு விரைவாக செயல்பட்டு வருவதாகவும் அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தாம் ஒரு சாக்கு மூட்டை நிறைய பல கடிதங்களை எழுதி ஆ.ராசா மூலம் கொடுத்து அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.




செய்தி 5

நிஜம்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ருபாயும், டீசல் விலை இரண்டு ருபாயும் உயர்த்தப்பட்டது.

நிழல் :

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, கடந்த பாராளுமன்ற தேர்தல் செலவுகளுக்காக தமது கட்சிக்கு நிதி வழங்கிய ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்றிக் கடனாக இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.



செய்தி 6

நிஜம் :

சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை மையத்தை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

நிழல் :

நிகழ்ச்சியில் பேசிய ப.சி, அடுத்ததாக தமிழக மீனவ பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை கடற்படை அப்பாவி வீரர்களைப் பாதுகாப்பதற்காக கடல் நடுவில் 'இலங்கை பாதுகாப்பு படை மையம்' ஒன்று விரைவில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.




செய்தி 7

நிஜம் :

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தாம் முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் அதற்காக தூக்குமேடை ஏறவும் தயாராக இருப்பதாகவும் பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவர் உமாபாரதி அறிவித்தார்.

நிழல் :

மேலும், இனி எங்காவது கட்டிடங்கள் இடிக்கும் பணி இருந்தால் கான்ட்ராக்ட் முறையில் விரைவாகவும்,குறைந்த செலவிலும் தமது கட்சியினரால் இடித்துத் தரப்படும் என்றும் அவர் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்.


.

Wednesday, July 1, 2009

இன்றைய செய்திகள் (01-07-2009)

செய்தி 1:

நிஜம்:

'இலங்கைத் தமிழரைக் காப்பாற்று!' என சட்டசபையில் அ.தி.மு.க ச.ம.உ க்கள் கோஷமிட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

நிழல் :

'போர் நடந்தால் அப்பாவிப் பொதுமக்கள் சாவது சகஜம்தான்' என்று சகஜமாக அறிக்கை விட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கு 'பக்கபலமாக' இருந்த ஜெயலலிதாவை அவரது கட்சி ச.ம.உ க்கள் இவ்வாறு கோஷமிட்டு அவமானப் படுத்தி விட்டதாக காங்கிரஸ் ச.ம.உ க்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.



செய்தி 2:

நிஜம்:

மும்பை பாந்த்ரா – ஓர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார்.

நிழல் :

இனி வரும் காலங்களில் கடல் வழியாக ஊடுறும் போது, அந்தப்பாலத்தினை பயன்படுத்துவது பற்றி பரசீலிக்கப்படும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள் அறிவித்தனர்.



செய்தி 3:

நிஜம் :

போலீசாருக்கு வருமானம் தரும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கின்றன என்று அ.தி.முக ச.ம.உ எஸ்.வி.சேகர் சட்டசபையில் கூறினார்.

நிழல் :

இது பற்றி கருத்து தெரிவித்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், எஸ்.வி.சேகர் குறுகிய கண்ணோட்டத்துடன் இக்கருத்தினை கூறியுள்ளதாகவும், உண்மையில் அனைத்து இடங்களுமே தங்களுக்கு வருமானம் தரும் இடங்கள்தான் என்றும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம் :

தற்போது இந்திய வெளியுறவு செயலாளராக பதவி வகித்து வரும் சிவசங்கர் மேனனின் பதவி காலம் வருகிற 31 – ஆம் முடிவடைவதால், புதிய வெளியுறவு செயலாளராக நிருபமா ராவ் நியமிக்கப் பட்டுள்ளார்.

நிழல் :

இது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சிவசங்கர் மேனன் தனது பதவிக்காலத்திலேயே இலங்கையில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப்பேரின் வாழ்க்கைப் பிரச்சினையை 'முடித்து' விட்ட மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.



செய்தி 6:

நிஜம் :

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாநகர போலீசாருக்கு ஹெலிகாப்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

போலீசார் இனி விரைவாக மாமுல் வசூல் செய்ய வசதியாகவே இந்த வசதி செய்துதரப்பட இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


.