Wednesday, May 10, 2017

மதில் மேல் மந்தி(ரி)கள்



 
சித்தி சகலகலா மற்றும் T.DVD மாமா  க்கு.....

கடைக்கோடித் தொண்டன் போட்ட ஓட்டுக்களைப் பொறுக்கி பதவிக்கு வந்து, கூவத்து பாரிலே நீங்கள் வீசிய கோடிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்ட ஒரு ............  எழுதும் கடுதாசி.

நாய் விற்ற காசு குறைக்காது என்பார்கள். நான் உங்களிடம் வாங்கிய காசுக்கு மேலேயே உங்கள் குடும்பத்தைப் புகழ்ந்து ஆயா டிவியில் அளவுக்கு மீறி குரைத்து விட்டேன்.

எடுபுடிச்சாமிக்கு நம்பிக்கை வாக்களிக்க சொன்னீர்கள். கூவத்து பார் குதூகலத்துடனே சட்டசபைக்குள் நுழைந்து சட்டென கையை உயர்த்தி விட்டேன்.

அதன் பின்விளைவுகள் என்ன தெரியுமா?

அதைக் கேட்டால் அம்மா இறந்த போது ஆனந்தக் கண்ணீர் வடித்த உங்கள் கண்களிலேயே ரத்தக் கண்ணீர் வரும்.

சொல்கிறேன் கேளுங்கள்...

தொகுதிப்பக்கம் எட்டிப்பார்த்தாலே துடைப்பக்கட்டைகள் என் முகரைக்கட்டையை நோக்கி முன்னேறி வருகின்றன.

கார் கண்ணாடியை இறக்கினாலே காரித் துப்பி கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.

அழுகிய முட்டையை வீசி எனது மூங்சியிலே ஆம்லெட் போடுகிறார்கள்.

எனது சொந்த வீட்டிற்கே பிக்பாக்கெட் திருடன் போல பின்வாசல் வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது.

கரை வேட்டி கட்ட ஆரம்பித்தபோதே கௌரவம் எனும் கால்சட்டையை கழற்றி வீசி எறிந்து விட்டுத்தான் கட்சிப்பணி ஆற்ற வந்தேன். 

எனவேதான் மக்கள் மாட்டுசாணத்தை முகத்திலே வீசினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

சகலகலா, தின கரன்சி, சுதா கரன்சி, திவா கரன்சி, பாஸ் கரன்சி மட்டுமல்ல ஒரு கழுதைக்கு வாக்களிக்க சொன்னால் கூட கரன்சி வாங்கிக் கொண்டு கையை உயர்த்த காத்திருக்கிறேன்.

ஆனால்...

கூவத்து பாரிலே குடித்து விட்டு குத்தாட்டம் போட்டவனுக்கும் மூட்டுவலியாலே அங்கே ஓர் மூலையிலே முடங்கிக் கிடந்த எனக்கும் ஒரே பேமெண்ட் கொடுத்தால் கூட எனது மனது ஏற்றுக்கொள்ளும்.

 அதேநேரம்,

பேரம் பேசிய பேமெண்ட் ஒத்தை ருபாய் குறைந்தாலும் எனது கால்கள் ஓபிஎஸ் இல்லம் நோக்கி மூவ்மெண்ட் ஆகும் என எச்சரித்து...

 இக்கடித்தை தங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

சிறைக்கம்பிகளோடு நான் சொல்வதையும் சிறிது எண்ணிப் பாருங்கள்!

நன்றி! வணக்கம்!!

இப்படிக்கு எந்த அணிக்கு தாவுவது எனத்தெரியாமல் தவிக்கும் ஆயி அம்மா கட்சி சமஉ. க்களில் ஒருவன்!