Thursday, July 2, 2009

இன்றைய செய்திகள் (02-01-2009)

செய்தி 1

***************************


செய்தி 2

நிஜம் :

'அரசியலுக்கு வந்துவிட்ட பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்ய முடியாது' என பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

நிழல் :

சிரஞ்சீவியின் இந்த கருத்து தவறானது என்றும், முயற்சி செய்தால் கதாநாயகியுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்ட கையோடு, மேக்கப் கலையாமல் சட்டமன்றத்திற்கும் சென்று வரமுடியும் என்றும் நடிகர்களும் கட்சித்தலைவர்களுமான விஜயகாந்தும்,சரத்குமாரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
செய்தி 3

நிஜம்:

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்ப சம்பந்தப்பட்டதாக உள்ளது. எனவே இத்திட்டம் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் குறைவு என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் பேட்டி அளித்தார்.

நிழல் :

அதாவது இத்திட்டம் இலங்கை நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும் அதனாலேயே இலங்கையை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தினை கிடப்பில் போட்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி 4

நிஜம்:

சிங்களர்களுக்கு கோபம் ஏற்படும் செயல்களில் ஈடுபடாமல் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளவேண்டும் என சட்டசபையில் கருணாநிதி தெரிவித்தார்.

நிழல்:

முடிந்தால், சிங்களர்கள் அசதியாக இருக்கும் சமயத்தில் அவர்களது கால்களை அமுக்கி விடுவது, அவர்களுக்கு வியர்த்தால் விசிறியால் விசிறி விடுவது போன்ற பணிவிடைகள் செய்து சிங்களர்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளுக்குள் வணங்காமண் கப்பல் நிவாரண பொருட்களை ஈழத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்க மத்திய அரசு விரைவாக செயல்பட்டு வருவதாகவும் அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தாம் ஒரு சாக்கு மூட்டை நிறைய பல கடிதங்களை எழுதி ஆ.ராசா மூலம் கொடுத்து அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி 5

நிஜம்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ருபாயும், டீசல் விலை இரண்டு ருபாயும் உயர்த்தப்பட்டது.

நிழல் :

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, கடந்த பாராளுமன்ற தேர்தல் செலவுகளுக்காக தமது கட்சிக்கு நிதி வழங்கிய ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்றிக் கடனாக இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டிய கடமை காங்கிரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.செய்தி 6

நிஜம் :

சென்னையில் தேசிய பாதுகாப்புப் படை மையத்தை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

நிழல் :

நிகழ்ச்சியில் பேசிய ப.சி, அடுத்ததாக தமிழக மீனவ பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கை கடற்படை அப்பாவி வீரர்களைப் பாதுகாப்பதற்காக கடல் நடுவில் 'இலங்கை பாதுகாப்பு படை மையம்' ஒன்று விரைவில் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.
செய்தி 7

நிஜம் :

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தாம் முழுப்பொறுப்பு ஏற்பதாகவும் அதற்காக தூக்குமேடை ஏறவும் தயாராக இருப்பதாகவும் பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவர் உமாபாரதி அறிவித்தார்.

நிழல் :

மேலும், இனி எங்காவது கட்டிடங்கள் இடிக்கும் பணி இருந்தால் கான்ட்ராக்ட் முறையில் விரைவாகவும்,குறைந்த செலவிலும் தமது கட்சியினரால் இடித்துத் தரப்படும் என்றும் அவர் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்.


.