Tuesday, August 11, 2015

குடி கெடுப்போம்!
மாபெரும் கூட்டத்திற்கு வந்திருக்கும் மது விலக்கு மன்னர்களே!
மடாகுடிகாரர்களே!

எனது கட்சிக்காரர்கள் பெரும் குடி மக்கள்தான் என்பதில் கட்டிங் அளவும்  சந்தேகம் இல்லை.

ஏன் குடித்தார்கள் எனது கட்சிக்காரர்கள்?

இத்தனை ஆண்டுகளாய் எனது கழகக் கண்மணிகள் மூத்திர சந்துகளில் முட்டு முட்டாக நின்று கொண்டு மதுவை குடித்தே ஒழித்தார்கள்.

அந்த வீராதி வீரர்களை வீம்புக்கு இழுக்கவேண்டாம் என்று வீராப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எதிர்க்கட்சிக்காரர்களுக்கு சவால் விடுகிறேன்!

இதோ இந்த கூட்டம் நடக்கும் இடத்தை சுத்தி இருவது சொச்சம் டாஸ்மாக் கடைகளிலே எந்தக்கடையிலாவது ஒரு கட்டிங் சரக்கு மிச்சம் கண்ணால் பார்க்க முடியுமா?

அத்தனை பாட்டில்களையும் அடித்து ஒழித்தால் அராசகம் செய்கிறார்கள் என்று அவப்பெயர் உண்டாக்கிவிடுவார்கள் என்பதால் காசுக்கு வாங்கி அத்தனை சரக்குகளையும் குடித்தே அழித்து விட்டார்கள் எவ்வளவு குடித்தாலும் தாங்கும் எஃகு குடல் கொண்ட எனது கழகக் கண்மணிகள்.


ஒரு கீரைக்கட்டு வாங்க கிழக்கும் மேற்குமாக யோசிக்கும் எனது கட்சிக்காரன் அரைபாட்டில் சாராயத்திற்காக அடிவயிற்றில் அநாவசியமாக இருக்கும்  கிட்னியையே அடகு வைக்கக்கூட தயங்கமாட்டான் என்பதை ஆணித்தரமாய் அடித்துக் கூறுகிறேன்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னோம் என்பதற்காக உண்மையிலேயே இந்த அரசு இறுமாப்புடன் பூரண மதுவிலக்கை கொண்டுவந்து தொலைக்குமேயானால் அதற்காக சோர்ந்துபோய் சோடை போகமாட்டான் எனது சொந்தக்கட்சிக்காரன்.

பஸ் ஏறிப்போய் பாண்டிச்சேரி சென்று பார்களிலே படுத்து உருண்டு கிடப்பான்.

அல்லது கால்நடையாகவே காரைக்கால் சென்று கடலில் காத்து வாங்கியபடியே கட்டிங் அடிக்கத் தயங்க மாட்டான் என்பதை கடுமையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை படித்து பொதுமக்களுக்கு வேண்டுமானால் புல்லரிக்கலாம். ஆனால் குடித்து குடித்து குடல் செல்லரித்துப்போன எனது கட்சிக்காரன் அந்த கொடுஞ்சொல்லைக் கேட்ட அதிர்ச்சியிலே ஆயே போய்விடும் ஆபத்தும் உண்டு என்பதை அரசுக்கு அமைதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அதனால்தான் ஒருவேளை அடுத்த தேர்தலில் அசம்பாவிதமாக நாங்கள் ஆட்சிக்கு வர நேர்ந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லி குடிகாரர்களின் குடல் குளிரச்செய்யும் வேலையை குத்துமதிப்பாய் செய்து வருகிறேன்.

சந்தனக் காடுகளிலே சாராயம் காய்ச்சி  சந்து பொந்துகளில் எல்லாம் விற்று சந்தோசமாய் வாழ்ந்த எனது சாதிக்கார சரித்திர நாயகர்களின் சல்லாப வாழ்க்கையை தரித்திரமாய் வந்த டாஸ்மாக் கடைகள் பீஸ் பீஸாய் கிழித்து போட்டதால்தான் அவர்கள் தார்ச்சாலை ஓரங்களிலே தயிர் விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கே தயக்கத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்திலே....

புகை பிடிப்பதால் ஒருவன் புத்துணர்ச்சி பெறுகிறான் என்பதையும் காசநோய் வந்து  'லொக்கு லொக்கு' என்று இருமிக் கொண்டிருக்கும் ஒருவன் அருகில் தூங்குபவருக்கு அலாரமாகப் பயன்படுகிறான் என்பதையும் அரசியல் அநாதைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

புகை பிடித்தால் புற்று நோய் வருமே? என்று சில புண்ணாக்குகள் புலம்பினாலும், சிகரெட் குடித்தால் சீக்கு வருமே? என்று சில சில்வண்டுகள் சிணுங்கினாலும்,காசநோய் வந்து பலபேர் கல்லறைக்குப் போவார்களே? என்று  எனது மனசாட்சி மப்ளரைப் பிடித்து உலுக்கினாலும், காசு நோய்ப் பிடித்த எனது கஸின் பிரதர் சில்லரைக்கு விற்கும் சிகரெட்டுக்காக வாய் வலிக்க வக்காலத்து வாங்க வேண்டிய வலுக்கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்று சொல்லுவார்கள்.ஆனால் ஆறு நிறைய சாராயம் போனால் அதனை மள மளவென அள்ளிக் குடித்து மணல் தெரிய வைத்து விடுவார்கள் மானத்தை துச்சமென மதிக்கும் மந்தைக்கூட்டமாகிய எனது  கட்சிக் காரர்கள்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

எத்தனை தடைகள் வந்தாலும் மதுவை ஒழித்தே தீருவோம் என்று நான் குடித்த குவார்ட்டர் மீது சத்தியம் செய்து இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

 நன்றி !வணக்கம்!!மக்கழே!!!

.....