Tuesday, April 5, 2011

போடுங்கய்யா ஓட்டு!

தேர்தலைத் திருவிழா ன்னு சொல்லுவாங்க.

ஆனா அந்த திருவிழாவில் வெட்டப்படும் பலியாடுகள் யாருன்னா நம்ம அப்பாவி வாக்காளன்தாங்க.

தேர்தலிலே நிற்கிற வேட்பாளர் கஞ்சக் கருமிப் பயலா இருந்தாலும் தேர்தல் நேரத்தில மட்டும் கொடை வள்ளலா மாறிடுவாரு.

நேத்து வரைக்கும் நடுரோட்டுல வாந்திபேதி எடுத்து வயித்தால போயி மயங்கி கிடந்த வக்கத்துப் போன வாக்காளனை கண்டுகொள்ளாமல் போன நம்ம கட்சி வேட்பாளரு இப்ப வேலை வெட்டிக்கு போகாம வீட்டுக்குள்ள ஒரு ரூவா அரிசியை பொங்கி தின்னுபுட்டு ஒய்யாரமா குந்திகிடக்கிற அவனை போயி சுகம் விசாரிச்சு சுக்குகாபி போட்டு கொடுப்பாரு.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் ஒரு மாத காலத்துக்கு ரெண்டு கைகளையும் பெவிகால் போட்டு ஒட்டுனது மாதிரி கும்பிட்டுகிட்டே திரிவாரு. குடும்பத்தோட தூங்கும்போது கூட கும்பிட்டுகிட்டே குறட்டைவிடுவாரு.

தேர்தல் நேரத்தில கட்சிக்காரனுங்க கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்டாலே தலையைச்சுத்துது.

"ஓசி மக்கள் கழகம்" ங்கற கட்சிகாரனுங்க தேர்தல் வாக்குறுதி அச்சடிச்சு வர்றவன் போறவனுக்கெல்லாம் வலுக்கட்டாயமா கொடுத்துகிட்டு இருந்தானுங்க. படிச்சுப் பார்த்தா இப்புடி இருந்துச்சி......


'நாங்கள் ஆடசிக்கு வந்தால் அரசாங்க செலவில் எல்லா ஊர்களிலும் அன்ன சத்திரம் கட்டி அனைத்து குடும்பங்களையும் தங்கவைத்து மூன்று வேளையும் ஓசியில் உணவு வழங்குவோம்.

காலை எழுந்தவுடன் கடுங்காபியுடன் காரமும் வழங்கப்படும்.

காலை சிற்றுண்டியாக குண்டான் நிறைய குழம்பு சோறும் குஷ்பு இட்லியும் வழங்கப்படும்.

மதிய உணவாக மாங்காய் வடவத்துடன் மணமணக்கும் சாம்பார் சாதமும்,

மாலையில் மக்காச்சோளமும் அவித்துக்கொடுக்கப்படும்.

அத்துடன் பிரமாதமான பில்டர் காபி வரிசையில் நிற்க வைத்து வாயில் ஊற்றப்படும்.

இரவு உணவாக இருட்டுக்கடை அல்வாவும் இடியாப்பமும் வழங்கப்படும்.

ஓசியில் தின்னு விட்டு ஒய்யாரமாக ஓய்வெடுப்பதற்கு ஓலைப்பாய் பின்னித்தரப்படும்.

டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு வாந்தியெடுத்து, வயலில் உருண்டு கிடப்பவர்களுக்கு 'சிறந்த குடிமகன்' விருதாக கோப்பையுடன் கோழி சப்பையும் குவார்ட்டரும் வழங்கப்படும்.

போதையில் பொண்டாட்டியை புரட்டியெடுப்பவர்களுக்கு 'உத்தமபுருசன்' பட்டத்துடன் ஊறுகாயும் வழங்கப்படும்.

வருடத்தில் அதிகமாக வாங்கி குடித்து, அரசுக்கு வருமானத்தை பெருக்கித் தரும் பொறுக்கிப்பயல்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பட்டம் வழங்கப்படும்.


குடிபழக்கம் இல்லாத தேசதுரோகிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

திருடர்கள் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் திருடர்களுக்கு ஆண்டொன்றுக்கு 420 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு அரசு மானியத்துடன் தங்கத்தில் திருவோடு வழங்கப்படும்.

வேலையற்ற இளைஞர்கள் வெட்டிப்பேச்சு பேசி காலைத்தைப் போக்க குட்டிச்சுவர்கள் கட்டிக்கொடுக்கப்படும்.

கச்சத்தீவை கயிறுகட்டி இழுத்துவந்து இந்தியாவோடு இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.'

இப்படியெல்லாம் வாகனத்தில் நின்றபடி வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளரை நம்ம மக்கள் வாயைப்பொளந்து கேட்பாங்க.

அதே ஆச்சரியத்தோட போயி பட்டனைக் குத்தி அவனுக்கு பதவியை கொடுத்துபுட்டு பாழாய்ப்போயிடுவாங்க.

நேத்துவரைக்கும் மணல்கொள்ளையடிச்சு,சாராயம் வித்து போலீஸ்காரன் கிட்ட செறுப்படி வாங்கின,மூணாம் கிளாஸ் பெயிலான நம்ம வேட்பாளர் தேர்தல் நேரத்திலே கஞ்சி போட்ட வெள்ளைச்சட்டையும் வேட்டியும் கட்டிகிட்டு மைக்கைப் பிடிச்சு பொளந்து கட்டுவாரு.

'நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.... அதாவது இதன் மூலம் உங்களுக்கெல்லாம் ஒன்று கூறிக்கொள்ள நான் விரும்புவது என்னவென்றால்... இதைப்பற்றி திருவள்ளுவர் என்ன சொன்னார் என்றால்.. அதாவது இதை நான் ஏன் உங்களுக்கெல்லாம் கூறுகிறேன் என்றால்... ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ரெண்டிலே... சுமார் ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்றால்.... இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு நான் ஒன்றும் சொல்லத்தேவையில்லை. ஏனென்றால் நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்பதாலும் அனைத்தும் உங்களுக்கு தெரியும் என்பதாலும் மேற்கொண்டு அதைப்பற்றி உங்களுக்கு நான் கூறவேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.'

கடைசி வரைக்கும் என்னத்தை சொல்ல வந்தார்னு அவருக்கும் தெரியாது. கேட்டவனுக்கும் புரியாது.

தேர்தல் நாள் அன்னைக்கு கட்சிக்காரனுங்க ரொம்ப பாசத்தைப் பொழிவானுங்க.

குத்தவெச்சி உட்கார்ந்து வெத்தலையை குதப்பிகிட்டு கிட்டு இருக்கிற கிழவிகளை குண்டுகட்டா தூக்கிகிட்டு போற நம்ம கட்சிக்கார பயலுங்க, எலக்சன் பூத்துக்குள்ள கொண்டுபோயி கிழவி கையைப்பிடிச்சி 'இந்த பட்டன்ல குத்து ஆத்தா' ன்னு சொல்லி இவனுங்களே பட்டனை குத்திபுட்டு கிழவியை வெளியில தூக்கி கடாசிட்டு போயிடுவானுங்க.

சுள்ளுன்னு அடிக்கிற வெயிலிலே வீட்டுக்கு திரும்பி வரும் கிழவிகள் சுருண்டு விழுந்து சுடுகாட்டுக்கு கொண்டுபோற நிலைமைக்கு ஆளாயிடுவாங்க.

தேர்தல் முடிவு அறிவிக்கபட்டதும் வெற்றிபெற்ற கட்சிக்காரனுங்க வெடியை வெடிச்சு எதிர்க்கட்சிக்காரனோட வேதனையைக் கிளப்புவானுங்க.

தோற்றுப்போன கட்சிக்காரனுங்க தோளில் கிடக்கிற துண்டை எடுத்து தலைமேல போட்டுகிட்டு அடையாளம் தெரியாம ஊருக்குள்ள நடமாடுவானுங்க.

தேர்தலிலே தோற்றுப்போன கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணின நடிகர்கள் பீதியில் பேதிபோயி நாதியத்துப் போயிடுவானுங்க.

யாரு வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் பட்டனைக் குத்தின பாவிமக்கள் தன்னோட பழைய சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட காசில்லாம பஞ்சத்துல அடிபட்ட பரதேசி ஆயிடுவாங்க.


இதன் மூலம் உங்களுக்கெல்லாம் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால்..

தயவுசெய்து தேர்தலிலே ஓட்டுப்போடுங்க...!

'போடுங்கய்யா ஓட்டு! எந்த கண்றாவி சின்னத்தையாவது பார்த்து!'

என்று கூறி இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!.......