Monday, March 1, 2010

வில் துளைக்கும் அம்புகள் - 2

..

பகுதி -1

பகுதி -2

'ன்ஸ்பெக்டர் தம்பி நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அவன் தப்பிச்சுப் போயிட்டான்னு என்கிட்டயே வந்து வெட்கமில்லாம சொல்லிகிட்டு இருக்கே. நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல அவன் செத்துட்டான்னு எனக்கு சேதி வரணும். இல்லைன்னா உன் வேலை போயிடுச்சுன்னு உனக்கு சேதி வரும்.' எதிரில் நின்றிருந்த ரமணனிடம் கோபமாக கத்தினார் மூர்த்தி.

'ரெண்டு நாள் அவகாசம் கொடுங்கய்யா. அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிடறேன். நான் போய்ட்டு வர்றேன்'

வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ரமணன்.


'கொஞ்சம் நில்லு தம்பி.'

ரமணன் திரும்பிப் பார்த்தார்.

'என்னங்கய்யா'

'நாங்கதான் அவனை போலீஸ்ல மாட்டிவிட்டு போட்டுத்தள்ள சொன்னோம்னு ஏதாவது அவன் கிட்ட உளறிட்டியா?'

'அ...அது வந்து.. அப்படியெல்லாம் அவன்கிட்ட எதுவும் சொல்லலீங்க. நீங்க தைரியமா இருங்க. ஏன் உங்களுக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் வெச்சிருப்பீங்களே? இங்க ஏன் ஒருத்தரையும் காணோம்?':

'எல்லா பசங்களுமே அந்த ராஜா பயலோட நல்லா பழகினவனுங்க. அதனால நான் அவனுங்க யாரையும் இந்த சூழ்நிலையில நம்பலை. எல்லாரையும் வெளியில அனுப்பிட்டேன். என்கிட்ட பிஸ்டல் இருக்கு. நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்.'

ரமணன் மூர்த்தியினுடைய வீட்டிலிருந்து வெளியேறினார்.

வாசலில் நின்றிருந்த ஜீப்பினை கிளப்பி பிரதான சாலையில் திரும்பி இருளில் கரைந்து போனார்.

......


வீட்டின் கதவை உட்புறமாக தாழிட்டுச் சாத்திய மூர்த்தியின் நெற்றியில் குழப்ப ரேகைகள் பரவ ஆரம்பித்தன.

'ஒருவேளை இந்த இன்ஸ்பெக்டர் ராஜா கிட்ட ஏதாவது உளறி வெச்சிருப்பானோ? எதுக்கும் நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது' என எண்ணியபடி தனது கைத்துப்பாக்கி இருக்கும் அறைக்குள் அதை எடுப்பதற்காக நுழைந்தார்.

உள்ளே..

கைத்துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த மேஜை மீது கையில் கத்தியுடன் அமர்ந்தவாறு புன்னகைத்தான் ராஜா.

.............


மணன் ஜீப்பை காவல் நிலையம் நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார்.

செல்போன் ஒலித்தது.

'மிஸ்டர் ரமணன். டி.எஸ்.பி ஆபிசில இருந்து பேசறோம். கைதியை தப்ப விட்டதுக்காக உங்களை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. நீங்க நாளைக்கு காலையில இங்க நேரா வாங்க.'

'நான் எதிர்பார்த்ததுதான். நன்றி சார்'

ரமணன் ஜீப்பினை திருப்பி காவலர் குடியிருப்பு நோக்கி செலுத்தினார்.

ஜீப் இருளை கிழித்துக்கொண்டு ஒரு வளைவில் திரும்பிய போது சாலையோரம் இருந்த புளியமரத்தின் பின்புறத்தில் மறைந்திருந்த ராஜா ஆவேசமாக சாலையை நோக்கிப் பாய்ந்தான்.


..........

மூர்த்தியின் உடல் அவருடைய வீட்டில் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது.

உறவினர்கள் என்று யாரும் அவருக்கு இல்லாததால் அங்கு அவருக்காக அழுவதற்கு யாரும் இல்லை.

அவரிடம் வேலை செய்த ஆட்கள் சுற்றிலும் சோகமாக நின்றுகொண்டிருந்தனர்.

அருகில் மார்ட்டினும் பாபுவும் நின்றிருந்தனர்.

எதிரில் நின்றிருந்த ரமணன் பாபுவிடம் நெருங்கி அவரை தனியே அழைத்துக்கொண்டு போனார்.

'பாபு சார். உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும். இன்னைக்கு ராத்திரி பெசன்ட் நகர் கடற்கரையில உங்களை சந்திக்கிறேன்.'

கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார் ரமணன்.

........

பெசனட் நகர் கடற்கரை.

இரவு 7 மணி.

கடல் அலைகள் வழக்கத்தைவிட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

பாபு கடற்கரையின் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் நின்றபடி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் காரின் அருகில் ஸ்ப்ளெண்டரை நிறுத்திவிட்டு கீழிறங்கினார் ரமணன்.

'வாங்க பாபு சார். மணல்ல உட்கார்ந்து பேசுவோம்'

இருவரும் கடலை நோக்கி நடந்தனர்.

கடலோரம் கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் படகின் அருகில் இருவரும் அமர்ந்தனர்.

'பாபு சார்! நீங்க, மார்ட்டின் அப்புறம் இறந்துபோன மூர்த்தி மூணு பேரும் பார்ட்னரா சேர்ந்து பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் பண்றீங்களே. அதோட மதிப்பு எவ்வளவு இருக்கும்?'

'சுமாரா நானூறு கோடி இருக்கும். எதுக்கு தம்பி கேட்கறீங்க?'

'சார் நான் இப்ப சொல்லப்போற விசயம் உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கலாம். ராஜாவை கைதுபண்ணி கஸ்டடியில வெச்சிருந்தப்ப அவன் என்கிட்ட ஒரு விசயம் சொன்னான்.'

'என்ன சொன்னான்?'


'இறந்துபோன மூர்த்தி ஐயா அந்த நானூறு கோடி சொத்துக்களையும் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள உங்களையும் மார்ட்டின் சாரையும் கொலை பண்ணச் சொல்லி ராஜா கிட்ட சொல்லியிருக்காரு.'

'கண்டிப்பா அவர் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. ராஜா உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கான்.'

'நடக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு சார். இந்த காலத்திலே பணம்தானே எல்லாம் செய்யுது. நீங்க மூணு பேரும் எனக்கு பணம் கொடுத்ததாலதானே ராஜாவை போட்டுத்தள்ள ஒத்துகிட்டேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்.'

'என்ன தம்பி?'

'நேத்து ராத்திரி நான் ராஜாவை பார்த்தேன்.'

' என்னது அவனை பார்த்தியா?'

'ஆமா சார். நான் வீட்டுக்கு போறதுக்காக ஜீப்ல போய்க்கிட்டு இருந்தப்ப எதிர்பாராவிதமா அவன் சாலையில குறுக்கே ஓடினான்.நான் அந்த நேரத்திலே அங்க வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டான். என்னை பார்த்ததும் அதிர்ச்சியாயிட்டான்'

'அவனை அங்கேயே சுட்டுக்கொல்ல வேண்டியதுதானே''

'நானும் அதற்கு முயற்சி பண்ணினேன். ஆனா அவன் இருட்டில ஓடி மறைஞ்சிட்டான். துப்பாக்கியையும் பயன்படுத்த முடியாது. ஏன்னா என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அதனால என்னால் அந்த நேரத்தில ஒன்னும் செய்ய முடியாம போயிருச்சு.மூர்த்தி சாருக்கு அடுத்தபடியா அவனோட அடுத்த குறி உங்க மேல இருக்கலாம். எதுக்கும் எச்சரிக்கையா இருங்க சார்.'

'அதை நான் பார்த்துக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க ரமணன்.'

'சார். கடைசியா நான் உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கணும்.நீங்க தப்பா எடுத்துக்கூடாது.'

'கேளுங்க. என்ன விசயம்?'

'மூர்த்தி சாரை நீங்க கொலை பண்ணியிருப்பீங்களோன்னு எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.'

'இன்ஸ்பெக்டர் தம்பி என்ன விளையாடறீங்களா?'

'தப்பா எடுத்துக்காதீங்க சார். உங்களுக்கு உதவி பண்ணத்தான் கேட்கிறேன். ஒருவேளை மூர்த்தி சார் நினைச்சது போல நீங்களும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொலை பண்ணியிருந்தா தயங்காம என்கிட்ட சொல்லுங்க. அப்பத்தான் இந்தப் பிரச்சினையிலேயிருந்து நான் உங்களை காப்பாத்த முடியும். ஏன்னா இப்ப இந்த கொலை கேஸை விசாரிச்சிகிட்டு இருக்கிற இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் ரொம்ப நேர்மையானவர்னு எங்க டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க.'

'நான் இதுவரைக்கும் அப்படி நினைச்சது இல்லை. இனிமேலும் நானும் மார்ட்டினும் எப்போதும் போல சேர்ந்துதான் பிசினஸ் பண்ணப்போறோம். நாங்க செய்யிற தொழில்கள் தப்பானதா இருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள எப்போதும் துரோகம் இருக்காது.'

'சரி சார். நான் உங்க ஆள். அதனாலதான் கேட்டேன். நீங்க எந்த தப்பு பண்ணினாலும் உங்களை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. நான் கிளம்பறேன்.'

அங்கிருந்து கிளம்பினார் ரமணன்.

குழப்பத்துடன் காரை நோக்கி நடந்த பாபுவின் செல்போன் ஒலித்தது.

எடுத்தார்.

'டேய் பாபு. நான்தான்டா ராஜா பேசறேன். என்னோட அடுத்த குறி நீதான்டா'

மறுமுனையில் தொடர்பு அறுந்துபோனது.

.....................

ள்ளிரவு.

நீலாங்கரையின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்த தனது பங்களாவில் காரை நிறுத்திவிட்டு இறங்கினார் மார்ட்டின்.

செல்போன் ஒலித்தது.

'மார்ட்டின் நான்தான் மூர்த்தி பேசறேன்.'

'என்ன பாபு இப்பத்தான் போன் பண்ணி ரமணன் உன்கிட்ட சொன்ன விசயத்தையெல்லாம் என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தே. அதுக்குள்ள திரும்பவும் போன் பண்றியே. என்ன விசயம்.?'

'மார்ட்டின். இப்ப கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ராஜா எனக்கு போன் பண்ணினான். என்னை கொலை செய்யப்போறதா மிரட்டினான்.'

'நீ பயப்படாம இரு பாபு. அவனை போலீஸ் தீவிரமா தேடிக்கிட்டு இருக்காங்க. அவனை கூடிய சீக்கிரத்திலே கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிடுவாங்க. நீ கவலைப்படாதே. அதான் உன்கிட்டே துப்பாக்கி இருக்கே. அப்புறம் நீ ஏன் பயப்படுறே?. நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்.'

இணைப்பைத் துண்டித்தார் மார்ட்டின்.

தூரத்தில்...

சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது.

..........

காலை 10 மணி.

காவல் நிலையம்.

புதிதாய் பொறுப்பேற்றிருந்த இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் மூர்த்தி கொலை வழக்கு சம்பந்தமான கோப்புகளை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒருவன் மூச்சிறைக்க உள்ளே ஓடி வந்தான்.

'யாருய்யா நீ. உனக்கு என்ன வேணும்?'

'அய்யா. நான் பாபு ஐயா வீட்டு வாட்ச்மேனுங்க. கொஞ்சம் நேரத்திலே வந்திடறேன்னு சொல்லிட்டு நேத்து ராத்திரி காரை எடுத்துகிட்டு போனவரு இன்னும் வீட்டுக்கு திரும்பி வரலைங்க.'

'யோவ். பெரிய மனுசங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.
திரும்பி வந்துடுவார். நீ வீட்டுக்குப் போ.'

அப்போது தொலைபேசி ஒலித்தது.

'சார். நான் தாம்பரம் ஏரியா இன்ஸ்பெக்டர் பேசறேன். இங்க தாம்பரம் மேம்பாலத்துக் கீழே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சிதைந்து போன ஒரு உடல் கிடக்குது. உங்க கேஸ் சம்பந்தப்பட்டவரா இருக்கலாம். கொஞ்சம் இங்க வர்றீங்களா?'

............


ன்ஸ்பெக்டர் பிரேம்நாத் தாம்பரம் போய்ச்சேர்ந்தபோது தண்டவாளத்தின் அருகே வெள்ளைத்துணியால் உடல் மூடி வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துணியை விலக்கி முகத்தைப் பார்த்தார்.

கோரமாக இறந்துபோய்க் கிடந்தான் ராஜா.

......

நெற்றியை கீறியபடி அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத்.

கான்ஸ்டபிள் சந்தானம் அருகில் வந்தார்.

'சார். ராஜா ரயிலில் அடிபட்டு இறந்துபோயிட்டான். அப்படின்னா அவன் கடத்திட்டுப்போன பாபுவோட கதி என்னன்னு தெரியலையே சார்?'

'நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டு இருக்கேன் சந்தானம்.'

கான்ஸ்டபிள் முருகன் அப்போது உள்ளே வந்தார்.

'சார். நான் சொல்ல மறந்திட்டேன். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி மெரினா கடற்கரை போலீஸ் ஸ்டேஷன்லேயிருந்து பேசினாங்க. கரையில் ஒரு பிரேதம் ஒதுங்கி கிடக்குதாம்.'

.....


அவசரமாக மெரினா கடற்கரையில் உடல் ஒதுங்கியிருந்த இடத்தினை வந்தடைந்தார் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத்.

அங்கே...

பாபுவின் பிரேதம் தண்ணீரில் உப்பிப்போய் மீன்களால் கடித்து குதறப்பட்டு கிடந்தது.

.....

மார்ட்டின் தனது வீட்டில் சிந்தனையில் அமர்ந்திருந்தார்.

செல்போன் அடித்தது.

'சார். நான் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் பேசறேன். பாபு சாரை கடத்திட்டுப்போய் கொன்னு கடல்ல போட்டுட்டு போன ராஜா எதிர்பாராவிதமா ரயிலில் அடிபட்டு செத்துப்போயிட்டான். இந்தப் பிரச்சினை இதோட முடிஞ்சது. இனிமே நீங்க கவலைப்படாம இருங்க.'

'ரொம்ப நன்றி தம்பி. நண்பர்களை இழந்த எனக்கு உங்க பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. வணக்கம்.'

தொடர்பை துண்டித்தார் மார்ட்டின்.

செல்போன் மீண்டும் கத்தியது.

எடுத்தார்.

மறுமுனையிலிருந்து குரல் ஒலித்தது.

'உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா.'

.........


'டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?'

'ஆமாம் இன்ஸ்பெக்டர். ராஜா ரயிலில் அடிபட்டு சாகவில்லை. யாரோ அவனை கழுத்தை நெறிச்சி கொன்னு, இறந்துபோன உடலை தண்டவாளத்திலே வீசிட்டுப்போயிருக்காங்க.'

'அப்படின்னா அவன் கொல்லப்பட்டது என்னைக்கு?'

'உடல் பரிசோதனைப்படி பார்த்தா அவன் உயிர் பிரிஞ்ச நேரம் செவ்வாய்கிழமை இரவு 11 மணிக்கு.'

'சரி. பாபு உடலையும் நீங்கதானே பிரேதபரிசோதனை பண்ணினீங்க. அவர் எப்படி இறந்திருக்கார். அவரை எப்போது ராஜா கொலை பண்ணியிக்கான்?'

'இன்ஸ்பெக்டர் சார்! பாபு துப்பாக்கியால சுடப்பட்டு இறந்திருக்கார். ஆனா பாபுவை ராஜா கொலை பண்ண வாய்ப்பே இல்லை. ஏன்னா பாபு இறந்தது ராஜா இறந்து ஆறு மணி நேரம் கழிச்சு. அதாவது புதன்கிழமை விடியற்காலை 5 மணிக்கு.'

அதிர்ச்சியுடன் எழுந்தார் பிரேம்நாத்.

.............