Tuesday, March 2, 2010

வில் துளைக்கும் அம்புகள் -3

பகுதி -1

பகுதி -2

பகுதி -3இரண்டு நாட்கள் கழித்து.....

காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தார் ரமணன்.

செல்போன் அழைத்தது.

'ரமணன். நான் மார்ட்டின் பேசறேன். உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசணும்.'

'சொல்லுங்க சார்.'

'ராஜா இறந்துட்டதா இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் எனக்கு போன் பண்ணி சொன்னார். அடுத்த நிமிசம் இன்னொரு போன் வந்தது. என்னைக் கொல்லப்போறதா ஒருத்தன் பேசறான். குரல் அப்படியே ராஜாவோடது மாதிரியே இருந்தது. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நீ கிளம்பி இங்க நேரா வா.'

சற்று யோசித்த ரமணன்,

'சார். நான் இன்னைக்கு ராத்திரி 11 மணிக்குமேல உங்க வீட்டுக்கு வர்றேன். நீங்க மட்டும் தனியா இருங்க. நான் வர்ற விசயம் யாருக்கும் தெரியக்கூடாது. என் கிட்ட ஒரு திட்டம் இருக்கு'

'என்ன திட்டம் தம்பி?'

'அதை நான் நேர்ல வந்து சொல்றேன்.'

.........

ரவு 11 மணி.

நீலாங்கரை மார்ட்டின் பங்களா.

'என்ன தம்பி? வந்து ரொம்ப நேரமாச்சு. எதையோ யோசிச்சி கிட்டு இருக்கீங்க?'

'சார் மேலிடத்திலே பேசி என்னோட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து பண்ணி திரும்பவும் என்னை வேலையில அமர வெச்சதுக்கு நன்றி சார்.'

'இப்ப இருக்கிற சூழ்நிலையில நீ இந்த கேஸை கையாள்றதுதான் எனக்கு பாதுகாப்பு. அதனாலதான் உனக்காக பேசி வேலையில அமர வெச்சேன்.'

'சார். உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி.'

'கேளுங்க தம்பி'

'எதுக்கு சார் பாபுவை கொலை பண்ணுனீங்க?'

அதிர்ச்சியுடன் எழுந்தார் மார்ட்டின்.

'என்ன தம்பி உன்னோட போலிஸ் புத்தியை என்கிட்டேயே காட்டறியா?'

'ஒரு நிமிசம் அமைதியா உட்காருங்க சார். உங்களை எல்லாப்பிரச்சினையிலேயிருந்தும் விடுவிக்கத்தான் நான் இப்ப வந்தேன். நீங்க எந்த விசயத்தையும் மறைக்காம சொன்னாத்தான் நான் உங்களை காப்பாத்த முடியும்.'

'நான் எதுக்கு கொலை பண்ணனும் என்னோட நண்பனை?'

'சார்! பாபு கடைசியா உங்களுக்குத்தான் போன் பண்ணியிருக்கார். அதுக்கப்புறம் இரண்டு மணி நேரம் மட்டுமே அவரோட சிம் கார்டு வேலை செய்திருக்கு.'

'அதனால நான்தான் அவனை கொலை செய்தேன்னு எப்படி சொல்லலாம்?'

'சார். அதை வெச்சு மட்டும் சொல்லவில்லை. ஒரு நிமிசம் என்னோட வாங்க.'

இருவரும் வெளியே வந்தனர்.

வெளியே வராண்டாவில் நின்றிருந்த மார்ட்டின் காரின் டிக்கியின் கதவை திறந்தார் ரமணன்.

'இதோ பாருங்க. உங்க காரோட டிக்கியில அந்த கம்பியில ஒரு பிசிறு துணி தொங்குதே. அந்த துணி பாபு கடைசியா போட்டிருந்த சட்டையில் கம்பி மாட்டி கிழிஞ்ச துணி. நான் உங்க வீட்டுக்குள்ளே வர்றப்ப ஒரு சந்தேகத்துக்காக இந்த காரோட டிக்கியை தூக்கிப் பார்த்தப்ப இந்த விசயம் தெரிஞ்சது. சரி வாங்க உள்ளே போய் உட்கார்ந்து பேசலாம்.'

உள்ளே சென்றதும் அமைதியாக சோபாவின் மீது அமர்ந்தார் மார்ட்டின்.

'மார்ட்டின் சார். உங்களை ஜெயில்ல தள்றதுக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை. நீங்கதான் கொலை பண்ணியிருக்கீங்கன்னு தெரியும். ஆனா எப்படின்னு தெரிஞ்சாத்தான் நான் உங்களை காப்பாத்த முடியும். தயவு செய்து எதையும் மறைக்காம என் கிட்ட சொல்லுங்க.'

மேஜை மீதிருந்த தண்ணீர் டம்ளர் வாயில் கவிழ்த்துவிட்டு பேச ஆரம்பித்தார் மார்ட்டின்.

'ஆமாம். ரமணன். நான் உங்க கிட்ட இப்ப சொல்லப்போற விசயத்தை வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நீங்க என்னை இந்த சிக்கலில் இருந்து காப்பாத்துவீங்கன்னு நம்பித்தான் இதை சொல்றேன்.

நீங்க பாபுவை பெசன்ட் நகர் பீச்ல சந்திச்சு கொஞ்சம் நேரம் கழிச்சு பாபு எனக்கு போன் பண்ணினான். சொத்துக்காக என்னையும் பாபுவையும் கொல்றதுக்கு மூர்த்தி திட்டம் போட்டிருந்த தகவலை நீங்க சொன்னதா சொன்னான். அவன் பேசி முடிச்ச அப்புறம் கொஞ்சம் நேரத்திலே நான் இருந்த இந்த நீலாங்கரை பங்களாவுக்குள்ள என்னை கொலை பண்றதுக்காக ராஜா வந்துட்டான்.'

'என்ன சார் சொல்றீங்க? ராஜா இங்க வந்தானா?'

'ஆமாம் ரமணன். அவன் கத்தியோட என்னை நோக்கிப் பாய்ஞ்சப்ப நான் காவலுக்காக நிறுத்தி வெச்சிருந்த என்னோட ஆட்கள் அவனைப் பிடிச்சு அமுக்கிட்டாங்க. அப்புறம் அவனை கழுத்தை நெறிச்சு கொலை பண்ணினேன். அவனோட உடலை எங்க பசங்க காரில எடுத்துகிட்டு போய் தாம்பரத்திலே வீசிட்டு வந்துட்டானுங்க.'

'சார்! அப்ப ராஜாவை கொலை பண்ணினதும் நீங்கதானா?'

'ஆமாம். கொலை பண்ணி முடிச்ச கையோட எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. சொத்துக்காக பார்ட்னர்களை கொலை பண்ண மூர்த்தி போட்ட திட்டத்தை நாமே செய்தா என்னன்னு யோசிச்சுப் பார்த்தேன். மூர்த்தி ஏற்கனவே செத்துட்டான். அதனால மீதி இருக்கிற பாபுவையும் தீர்த்துக் கட்டிட்டு அவனை ராஜா கொலை பண்ணினதா செட்டப் பண்ணிடலாம்னு திட்டம் போட்டேன். ராஜா இறந்து போன விசயத்தை பாபு கிட்டே சொல்லாம அவனுக்கு போன் பண்ணி இங்கே வரவழைச்சேன். அவனை இங்கேயே துப்பாக்கியால சுட்டு சாகடிச்சேன். அப்புறம் நம்ம பசங்க அவனோட உடம்புல கல்லைக் கட்டி மெரினா கடல் பக்கமா படகுல கொண்டுபோய் கடல்ல தூக்கி வீசிட்டாங்க. ஆனா கயிறு எப்படியோ அவிழ்த்து கிட்டு பிரேதம் கரை ஒதுங்கிடுச்சு. ஆனா கொலை செய்யப்பட்ட நேரத்தை உடல் பரிசோதனையில கண்டுபிடிக்கலாம் என்கிற விசயத்தை நான் மறந்திட்டேன்.'

'நல்லவேளை நீங்க என்கிட்டே சொன்னீங்க. இந்த விசயத்தை வெளியில் தெரியாம அமுக்கிட வேண்டியது என்னோட பொறுப்பு.'

'அது சரி. போன்ல என்னை மிரட்டினவன் யாருன்னு தெரியலையே. அவனால எனக்கு திரும்பவும் ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு.'

'அவன் யாருன்னு கண்டுபிடிக்க ஒரு வாரம் அவகாசம் கொடுங்க. ஆனா அதுக்கு நீங்க ஒரு காரியம் செய்யணும்.'

'என்ன செய்யணும் தம்பி?'

'நீங்க தற்கொலை பண்ணிகிட்டதா ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு தலைமறைவாயிடுங்க. உங்களுக்கு போன் பண்ணி மிரட்டினவன் குழம்பிப்போய் அது நிஜமான்னு தெரிஞ்சிக்கிறக்கு முயற்சி பண்ணுவான். அதுக்குள்ள அவன் யார்னு கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிறலாம்'

சற்று யோசித்த மார்ட்டின் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

'மார்ட்டினாகிய நான் வாழ்க்கையில் என்னுடைய அருமை நண்பர்களை இழந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு நானே முழுமுதல் பொறுப்பு. - இப்படிக்கு , மார்ட்டின்.'

எழுதிய காகிதத்தை ரமணனிடம் நீட்டினார் மார்ட்டின்.

படித்துப்பார்த்த ரமணன், நிமிர்ந்து பார்த்து மார்ட்டினை நோக்கி புன்னகைத்தார்.

'அதான் லெட்டர் எழுதிட்டியே. அப்புறம் இன்னும் ஏன் சாகாம இருக்கே மார்ட்டின்.'

இடுப்பிலிருந்து உருவிய சைலன்சர் பொறுத்திய பிஸ்டலை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மார்ட்டினின் நெற்றிப்பொட்டில் சுட்டார் ரமணன்.

அதிர்ச்சியுடன் சடலமாக கீழே சாய்ந்தார் மார்ட்டின்.

மார்ட்டின் எழுதிய தற்கொலைக் கடிதத்தை அவரது உடல் அருகில் வீசிவிட்டு, பிஸ்டலை இறந்துபோன மார்ட்டினின் உள்ளங்கையில் திணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் ரமணன்.


..................

மிஷனர் அலுவலகம்.

கமிஷனர் சசிகுமார் முக்கிய கோப்புகளை புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

'சார். நாங்க உள்ளே வரலாமா?'

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் சசிகுமார்.

வாசலில் ரமணனும் பிரேம்நாத்தும் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர்.

'உள்ளே வாங்க'

அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் கமிஷனர் எழுந்து சென்று அறையின் கதவை சாத்திவிட்டு வந்தார்.

இருவரையும் கைகுலுக்கினார்.

'அருமையா திட்டத்தை செஞ்சு முடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.'

'சார். நம்மோட ரகசிய திட்டமான 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கை பற்றி எனக்கே குழப்பமா இருக்கு. கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா?' சந்தேகத்துடன் கமிஷனரை பார்த்துக் கேட்டார் பிரேம்நாத்.

'சொல்றேன். நாம இதுவரைக்கும் கொலை கொள்ளைகளை செய்துகிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலா இருந்த நூற்றுக்கணக்கான ரவுடிகளை என்கவுண்டர்ல போட்டுத்தள்ளியிருக்கோம். ஆனா ரவுடிகளோ ரவுடியிசமோ குறையவே இல்லை.

அதாவது நாம அம்புகளைத்தான் உடைத்தெறியறோமே தவிர அதை செலுத்திய வில்லை நாம மறந்திடறோம். வில்லை உடைச்சுப் போட்டுட்டா அம்புகள் செயலிழந்து போய் விடும்.'

'அதாவது ரவுடிகளை காலி பண்ணினாலும் அவர்களை உருவாக்குற பணக்கார அதிகார வர்க்கத்தை நாம நெருங்க முடியவில்லை. அதனால அவர்கள் உருவாக்குற ரவுடிகளை வெச்சே அவர்களை காலி பண்றதுதான் 'வில் துளைக்கும் அம்புகள்' என்கிற ரகசிய நடவடிக்கையோட நோக்கம்.

'இதை நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்கிற நம்பிக்கையான சிலரை மட்டுமே தேர்வு பண்ணி இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திகிட்டு வர்றோம். நம்ம டிபார்ட்மென்ட்ல உள்ள மற்ற ஆட்களுக்கு கூட தெரியாமத்தான் இந்த ரகசிய நடவடிக்கைகள் நடந்துகிட்டு இருக்கு.'

'அது சரி சார். மார்ட்டின் கும்பலை ஒழித்துக்கட்டிய நடவடிக்கையில என்னென்ன நடந்தது?'

ரமணன் இடைமறித்தார்.

'அதை நான் சொல்றேன். மார்ட்டின்,பாபு, மூர்த்தி மூணு பேரும் மதுரைக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவங்க. சுமார் முப்பது வருசத்துக்கு முன்னாடி அவங்க இளைஞர்களா இருந்த காலத்தில மூணுபேரும் சேர்ந்து அங்கேயிருந்த ஒரு கோயில் சிலையை திருட முயற்சி பண்ணி பொதுமக்கள் கிட்ட மாட்டிகிட்டாங்க. பொதுமக்கள் அவங்க மூணு பேரையும் அடிச்சு ஊரை விட்டே துரத்தி விட்டுடுச்சு.

அவனுங்க மூணு பேரும் சென்னைக்கு ஓடி வந்துட்டானுங்க. இங்க கள்ளக்கடத்தல் மாதிரியான சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதிச்சிட்டானுங்க.

அவனுங்க மூணு பேரும் கல்யாணம் ஏதும் செஞ்சுக்காம சம்பாதிப்பதிலேயே குறியா இருந்து தனிமரமாகவே வாழ்ந்துகிட்டு வந்தாலும் பணம் சேர்க்கிறதுல இருந்த வெறி அடங்காம பல சட்டவிரோத நடவடிக்கைகள்ல ஈடுபட்டு வந்தானுங்க. அரசியலில் அவுனுங்களுக்கு செல்வாக்கு அதிகரிச்சதால அவனுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாம இருந்துச்சு.

பிற்காலத்துல அவனுங்க கிட்ட வேலைக்குச் சேர்ந்த ராஜா
அவனுங்க செய்த பல குற்றச்செயல்களுக்கு உதவியா இருந்து வந்தான்.

அந்த நேரத்திலேதான் மார்ட்டின் கும்பலுக்கு நாம வலை விரிச்சோம். அந்தக் கும்பலை கூண்டோட ஒழிக்கிறதுக்காக 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கையை துவங்கினோம்.

மார்ட்டின் கும்பலிலேயிருந்து கழண்டு போகப்பார்த்த ராஜாவை கொல்றதுக்காக அவங்க மூணு பேரும் திட்டம் போட்டாங்க. அதுக்காக என்னை அணுகினானுங்க.

ராஜா கிட்டே இந்த விசயத்தை சொல்லி அவனை உசுப்பேத்தி விட்டு என்கவுண்டர் செய்யப்போறது போல அவனை கூட்டிகிட்டுப் போய் வேண்டுமென்றே அவனை தப்பிக்க வெச்சேன்.'

'வெறி பிடிச்சவன் போல மாறின ராஜா முதல்ல மூர்த்தியை தீர்த்துக் கட்டிட்டான். ஆனா அடுத்ததா மார்ட்டினைக் கொல்ல முயற்சி பண்ணினப்போ அவர் கிட்டே மாட்டி அவர் கையாலேயே கொலை செய்யப்பட்டான்.ஆனா அவன் கொலை செய்யப்பட்ட விசயம் அப்ப நமக்கே தெரியாது'

'அந்த நேரத்திலே பாபுவை வெச்சு மார்ட்டினை கொல்றதுக்கும் நான் திட்டம் போட்டேன். சொத்தை அடையறதுக்காக மூர்த்தி மற்ற ரெண்டுபேரையும் கொலை பண்ண திட்டம் தீட்டியிருந்ததா ஒரு பொய்யைச்சொல்லி அதுபோன்ற காரியத்தை பாபு செய்யும்படி அவர் மனசில் ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சி பண்ணினேன். ஆனா பாபு என்னோட வலையில் சிக்காம, துரோகம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சாரு. ஆனா அந்த வலையில மார்ட்டின் விழுந்துட்டார். சொத்துக்காக பாபுவை கொலை பண்ணினார். கடைசியா இருந்த மார்ட்டினையும் காலி பண்றதுக்காக நானே ராஜா மாதிரி பேசி போன்ல அவரை கொலை செய்யப்போறதா மிரட்டினேன். அவரும் ராஜாவைத்தான் கொலை பண்ணிட்டோமே. இது என்ன புது பிரச்சினைன்னு குழம்பிப்போய் என்னை கூப்பிட்டாரு. நானும் அவர்கிட்டே தற்கொலை கடிதம் நாடகம் எழுதச்சொல்லி அவரை சுட்டுத்தள்ளிட்டு அவரே தற்கொலை பண்ணிகிட்டதா செட்டப் பண்ணிட்டேன். ஒருவழியா நம்மோட 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கை முடிஞ்சிடுச்சி.

சொல்லி முடித்துவிட்டு சோம்பல் முறித்தார் ரமணன்.

கமிசனர் அலமாரியிலிருந்து ஒரு கோப்பினை எடுத்து மேஜை மீது போட்டார்.

'நம்மோட 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கையில அடுத்த கட்டமா நாம ஒழிச்சுக்கட்டப்போற கும்பல் பற்றின விவரம் இதுல இருக்கு. நாம இப்ப...'

'சார். அதுக்கு முன்னாடி சூடா ஒரு கப் காபி குடிக்கலாமா?'

(தொடர் நிறைவடைந்தது.)