Wednesday, February 24, 2010

அமெரிக்காவிலிருந்து ஓர் அழைப்பு!


.

22-06-2010 திங்கட்கிழமை இரவு 9.30 க்கு எனது அலைபேசிக்கு அமெரிக்காவிலிருந்து மென்பொருள் துறையில் பணியாற்றும் பழமைபேசியிடமிருந்து அழைப்பு வந்தது.

'மணிப்பயல்! நல்லாத்தானே எழுதறீங்க. ஆனா தொடர்ந்து எழுதறது இல்லையே ஏன்?' ன்னு கேட்டார்.

வலைப்பதிவுகளில் நமது எண்ணங்களையும் படைப்புகளையும் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற இணைய உலகில் உலவ விடுவதிலும், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் அதனை படித்து பின்னூட்டம் மூலமாக பாராட்டுவதிலும் பெறுமகிழ்ச்சி ஏற்படவே செய்கிறது.

பின்னர் சில படைப்புகளை விகடன்.காம் க்கிற்கு அனுப்பி வைத்தபோது அவர்களும் தனது வலைத்தளத்தில் அவற்றை வெளியிட்டு மின்னஞ்சல் மூலமாக நன்றி (மட்டுமே) தெரிவித்தனர்.

ஆனாலும் பொருளீட்டல் மட்டுமே வாழ்க்கை என்ற ஒற்றை அச்சில் சுழன்று கொண்டிருக்கும் தற்கால உலகில் பதிவுகள் எழுதுவதில் நேரம் செலவழிப்பது வீண்வேலையாக சில சமயங்களில் எண்ண வைத்துவிடுகிறது.

பழமைபேசியினுடைய பதிவுகளின் தூய தமிழ்நடை கண்டு நான் அவரை ஈழத்தமிழராகவே இதுவரை நினைத்திருந்தேன்.

அவருடைய சமீபத்திய பதிவான யாழினி யிலும் இலங்கைத்தமிழை பயன்படுத்தியிருந்தார்.

'நீங்க ஈழத்தமிழரா?' என்று அவரிடமே கேட்டேன்.

'இல்லை. நான் கோயம்புத்தூர்க்காரன். இங்க ஈழத்துச் சகோதரர்கள் நிறைய பேர் என்னோட நண்பர்களா இருக்கிறதால எனக்கும் அந்த மொழி நடை பழக்கமாயிடுச்சு' என்றார்.

புலம் பெயர்ந்தாலும் அவருடை பேச்சில் இன்னும் கொங்கு நாட்டு மொழிவாடை அடித்தது.

தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவம் இருந்தாலும் தாய்நாட்டில் வாழவே விரும்புவதாகவும் கூறினார்.

நானும் ' கோடி ரூபாய் சம்பாதித்தாலும் பிறந்த ஊரில் வாழும் நிம்மதி கிடைக்காதுங்க.' என்று மேலும் அவரை குழப்பிவிட்டேன்.

அதன் தாக்கம் காரணமாகவே அவருடைய தற்போதைய பதிவான சகுந்தலா எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

நான் கும்பகோணத்தை சேர்ந்தவன் எனக்கூறியதும்,

'கும்பகோணம் பக்கமெல்லாம் வந்து சுற்றிப்பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை' என்று கூறினார்.

'கண்டிப்பா வாங்க' என்று அழைப்பு விடுத்தேன்.

கும்பகோணம் மற்றும் அதனைச்சுற்றிய பகுதிகளிலும் வரலாற்றுச்சிறப்புமிக்க பல கோயில்களும் நினைவிடங்களும் உள்ளன.

எந்தக்கோணத்திலிருந்து பார்த்தாலும் ஏதாவதொரு கோயிலின் கும்பம் கண் பார்வைக்கு தட்டுப்படுவதாலேயே கும்பகோணம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள்.

அதனால் கும்பகோணத்தை கோயில்களின் நகரம் என்றும் அழைப்பதுண்டு.

ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில்

சாரங்கபாணி திருக்கோவில்

சக்கரபாணி திருக்கோவில்

நாகேஸ்வரன் திருக்கோவில்

ஆகிய சில முக்கிய திருக்கோயில்களும், வரலாற்று சிறப்புமிக்க மகாமகக்குளம் மற்றும் ஏராளமான மற்ற கோயில்களும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளன.

கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள,இரண்டாம் ராசராச சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோவில் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கும்பகோணம் வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில் இது.

கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை திருக்கோவில்.

பட்டீச்சுரம் மற்றும் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறு என்ற ஊரில் அமைந்துள்ள ராசராசசோழனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் ஆகியவை பார்க்க வேண்டிய பகுதிகள்.

இந்துக்களின் நம்பிக்கையான நவகிரகங்களின் தலங்களும் கும்பகோணத்தைச் சுற்றியே அமைந்துள்ளன.

கும்பகோணத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பது மற்றொரு சுற்றுலாத்தலமான தஞ்சாவூர்.

தமிழ் விக்கிபீடியாவில் கும்பகோணம் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன.

அப்படியே கூகிள் மேப் பிலும் கும்பகோணத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுற்றுலாவிற்கான மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பிக்கலாம்.

தாயகம் வந்தா இந்தப்பக்கம் வந்திட்டுப்போங்க பழமைபேசி!

...