Wednesday, November 4, 2009

பொக்கிஷம் திருடின கந்தசாமி போல் ஒருவன்


என்னத்த எழுதறதுன்னு தெரியல. எழுதாம இருக்கவும் முடியல. கொஞ்ச நாளு எழுதாம விட்டுட்டா, இந்தப்பய எங்க போய்த்தொலைஞ்சான்னு யாரும் கவலைப்படறது இல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகவே கத்திக்கிட்டு இருந்த மத்த கட்சி மந்திரிகளையெல்லாம் கழட்டி விட்டுட்டு, பாசமிகு காங்கிரஸ் மந்திரிகளை மட்டும் கூட்டிக்கிட்டு இலங்கைக்கு ஜாலி டிரிப் அடிச்சிட்டு வந்த டி.ஆர்.பாலு அண்ணன், கனிமொழி அக்கா மாதிரிதான் இந்த பதிவுலக நண்பர்களும் போலிருக்கு. என்னத்தச் சொல்ல.

நான் என்ன பொக்கிஷம் படத்துல வர்ற சேரனா? இடைவெளியே இல்லாம இடைவேளை வரைக்கும் தொடர்ந்து எழுதிகிட்டு இருக்கிறதுக்கு.

அந்தப் படத்துலதான் நாற்பது வயசு இளம் கதாநாயகன் சேரன் தன்னோட காதலிக்கு மூணு மணி நேரமா மூச்சு விடாம காதல் கடிதம் எழுதித் தள்ளிகிட்டே இருந்து, கடைசியில மூச்சை விட்டுடுவாரு. ஆனா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த அப்பாவி மக்கள் படம் ஆரம்பிச்சு அரைமணி நேரத்திலேயே வாயால மூச்சு விட ஆரம்பிச்சிட்டாங்க. அதாகப்பட்டது, குறட்டை விட ஆரம்பிச்சிட்டாங்க.

கடல்ல மூழ்கும் கப்பலை கதையா வெச்சி வெளிவந்த டைட்டானிக் படத்தைப்போலவே ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு, தயாரிப்பாளரை கடன்ல மூழ்க வெச்சிட்டாரு பாவம்.

பணக்காரனுங்க கிட்ட இருக்கிற பணத்தைப் பிடுங்கி ஏழைமக்களுக்கு வாரி வழங்குற வள்ளல்கள் பத்தி ஏற்கனவே பலபேரு படமெடுத்து அவங்க பணக்காரங்களாயிட்டாங்க. பல படங்கள்ல பயன்படுத்தப்பட்டு கந்தையாகிப் போன அந்த கதையை வெச்சி 'கந்தசாமி' ன்னு விக்ரம் நடிச்ச ஒரு படம் வந்துச்சி.

படம் எடுக்க வீடியோ காமிரா பயன்படுத்தினாங்களா இல்ல ஸ்டில் காமிராவில போட்டோ புடிச்சி வரிசையா ஒட்டவெச்சிட்டாங்களான்னு தெரியல. ஓரு நிமிசத்துல ஓராயிரம் ஃபிரேம்கள் மாறுது. அதைப் பார்த்தா கண்ணுக்குக் கீழ கருவளையம் ஏறுது.

அந்தப் படத்தைக் காசு கொடுத்து பார்த்த ஏழை அப்பாவி மக்கள் தியேட்டரில் 'நொந்தசாமி' ஆனார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

அப்புறம் 'உன்னைப்போல் ஒருவன்'ன்னு ஒரு படம்.

இந்தியில 'A Wednesday' ங்கற பெயரில வெளிவந்து வெற்றிகரமா ஓடுன படத்தை தமிழ்ல இந்தப் பேருல எடுத்திருக்காங்க.

காலையில எழுந்திருச்சி காய்கறி வாங்கப்போறேன்னு வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லிட்டு வெளியில கிளம்பி போற கதாநாயகன் கமல், ஒரு மொட்டை மாடிமேல ஏறி குத்தவெச்சி குந்திகிட்டு, ஊருக்குள்ள பல இடங்களில் வெடிகுண்டு வெச்சி இருக்கிறதா கமிசனர் மோகன்லாலுக்கு போன் பண்ணி அவருக்கு வயித்தால போவ வெக்கிறாரு.

'யோவ் என்னய்யா இப்படி சின்னப்புள்ளத்தனமா பண்ணிபுட்ட. எங்கங்க வெச்சிருக்கன்னு சொல்லுயா ங்கொய்யால.' ன்னு கமிசனரு காட்டமா கத்துறாரு.

'அதச்சொல்லணும்னா ஜெயில்ல இருக்கிற என்னோட தோஸ்துங்க நாலு பேரை வெளியில வுடுய்யா' ன்னு கமல் மிரட்டுறாரு.

'சரி. எங்கன அந்த நாதாரிப் பயலுங்கலை இட்டாந்து வுடனும்?' ன்னு கமிசனரு கேட்குறாரு.

'ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பழைய விமான தளத்துக்கு இட்டாந்து வுடு. அங்க ஒரு ஜுப் நிக்கும். அதுல ஏறி அவனுங்களை உட்கார சொல்லிட்டு திரும்பிப்பார்க்காம நீ ஓடிப்போயிடு' ன்னு கமல் சொல்றாரு.

அவரு சொன்னமாதிரியே அந்த நாலு தடிப்பயலுங்களையும் ரெண்டு போலீசு காரனுங்க தறதறன்னு இழுத்துட்டுப்போயி அந்த விமான தளத்துக்குள்ள தொறத்தி விடறாங்க. அந்த கேடிப்பயலுங்க சந்தோசமா ஓடிப்போயி அந்த ஜுப் உள்ள ஏறி உட்கார்ந்துகிட்டு பாட்டு கேட்குறதுக்காக பிளேயரை ஆன் பண்ணுறானுங்க.

உடனே பிளேயரில ' துன்பம் தொலைந்தது இப்போ' ன்னு பாட்டு கேட்குது. அடுத்த நொடி படார்னு வெடிச்சி சிதறுது.

'என்னய்யா இப்படி பண்ணிபுட்ட?. உண்மையில நீ யாருய்யா?'ன்னு கமிசனரு கமல் கிட்ட கேட்க,

கமல்
'உன்ன மாதிரித்தான்யா நானும். நீ மட்டும் உனக்குப் பிடிக்காத ரவுடிங்களை எண்கவுண்டர்ல சுட்டுத்தள்ளுறயில்ல?. ஒரு அப்பாவி மனுசன் எனக்கு மட்டும் அந்த உரிமையில்லையா? நான் என்ன இளிச்சவாயனா. போங்கய்யா. போய் புள்ளகுட்டிங்களை படிக்க வையிங்கய்யா. சும்மா பிக்காரித்தனமா பேசிகிட்டு!'

ன்னு போனை கட் பண்ணிட்டு காய்கறி மூட்டையத் தூக்கி தலையில வெச்சிகிட்டு மொட்டைமாடியை விட்டு இறங்கி வீட்டுக்கு நடையக் கட்டுறாரு.

படம் பார்த்துட்டு வெளியில வர்ற சனங்களும் 'நல்ல யோசனையா இருக்கே. நாமளும் இப்படி எங்கயாவது குண்டு வெச்சிட்டு போலீசை மிரட்டலாமா' ன்னு சிந்திச்சபடியே வீட்டுக்கு நடையக் கட்டுறாங்க.

மூக்குப்பொடி வாங்குறமாதிரி வெடிமருந்தை எப்படி கமல் சர்வசாதாரணமா வாங்குறாருன்னு தெரியல. அப்புறம் அந்த வெடிமருந்து விக்கிற கேடிப்பயலை மட்டும் ஏன் மன்னிச்சி விடறாரு. அவனையும் எண்கவுண்டர் பண்ணச் சொல்லியிருக்கலாமே?

இத மாதிரி பல சந்தேகங்கள் உங்களைப்போலவே எனக்கும் வருது. ஏன்னா நானும் 'உங்களைப் போல் ஒருவன்' தானே!

.....