Monday, November 23, 2009

2012 பேரழிவு : அரசியல் தலைவர்கள் அறிக்கைமாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்டஉலகின் கடைசி நாள்விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதைஜட்ஜ்மெண்ட் டேஎன்று பலரும் அஞ்சுகிறார்கள்.

(நன்றி : விக்கிபீடியா)

2012 திரைப்படம் மாயன் நாட்காட்டியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும் உலக வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் பேரழிவினை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

சரி. உண்மையிலேயே 2012 ல் உலகம் அழியப்போவது உறுதியானால் நம்ம ஊரு அரசியல்வாதிகள் எப்படி அறிக்கை விடுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.கருணாநிதி

அய்யகோ! இந்த பூமிப்பந்து அழியப்போவதுகண்டு நான் மனதுக்குள் புழுங்கியழுவது யாருக்காவது தெரிகிறதா? குறளோவியம் படைப்புகள் குப்பைமேட்டில் வீழ்வதா? பொன்னர் சங்கர் காவியங்கள் மண்அரித்துப்போவதா? கண்ணகிக்கு கடற்கரையில் நான் வைத்த சிலை விண்ணுயர முட்டும் அலைகளில் கண்மறைந்து போவதா? கழுத்தினிலே நான் அணியும் மஞ்சள் துண்டு அந்த பொழுதுனிலே நஞ்சிப்போக விடலாமோ உடன்பிறப்பே? என் செல்லக்குழந்தை அழகிரிக்கு மந்திரிப் பதவி கேட்டு தலைநகர் செல்வதற்கு உதவிய அந்த தள்ளுவண்டி வெள்ளக்காட்டிலே அடித்துக்கொண்டு செல்ல விடுவதா? தமிழினமே எழுந்து வா! கைகோர்த்து நிற்போம் கடற்கரைச்சாலையிலே மனிதச்சங்கிலியாய்! கோடானுகோடி தந்திகள் அடிப்போம் கொந்தளிக்கும் கடல்அலைக்கு கண்டனம் தெரிவித்து! மூட்டை மூட்டையாக கடிதங்கள் வரைவோம் உலகம் மூழ்கிப்போவதை தடுப்பதற்கு! தளபதி பின்னாலே அணிதிரள்வீர் தமிழர்களே!

ஜெயலலிதா

இந்தப் பேரழிவிற்கு காரணமான கருணாநிதியையும் தி.மு. மைனாரிடி அரசையும் வண்மையாகக் கண்டித்து நமது கழகத்தோழர்கள் எல்லா ஊர்களிலும் சந்துபொந்துகளிலும் வெயில் மழை பாராது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட உத்தரவிடுகிறேன். நான் மீண்டும் கொடநாடு எஸ்டேட் சென்று மேலும் ஆறு மாதங்கள் ஓய்வெடுத்து கருணாநிதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு செய்வது என்று சிந்திக்க இருக்கிறேன் என்பதனையும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாசு

இந்த சந்தர்ப்பத்திலாவது எங்களது வன்னியர் சாதியினர் வாழும் ஊர்களை தனியாகப் பிரித்து தனி தமிழ்நாடு உருவாக்கினால் நான் அந்த மாநில முதல்வராகவும் எனது மகன் அன்புமணி துணைமுதல்வராகவும் வரும் வேளையில் நாங்கள் காடுமரங்களை வெட்டித்தள்ளி நிலங்களை மேடாக்கி அதன்மேல் அமர்ந்து எங்கள் சாதியினர் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வார்கள். வாழ்க சாதிவெறி. வாழ்க தமிழ். வாழ்க இந்தியா. ஒழிக தமிழ்நாடு.

திருமாவளவன்

எரிமலைக்கு அடங்க மறுப்போம். சுனாமி அலைகளை அத்துமீறுவோம். மண்சரிவுகளிலிருந்து திமிறி எழுவோம். புயலடித்தால் திருப்பியடிப்போம். தலித்துகளுக்கென தனியான தீவு உருவாக்குவோம். வாழ்க தமிழ். ஒழிக ராஜபக்சே.

சுப்பிரமணியசாமி

2012 லே நடக்கப்போற இன்சிடென்டுக்கு எல்.டி.டி தான் காரணம். அவ்ங்களோட இந்த திட்டத்துக்கு ஹெல்ப் பண்றதா சோனியா காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா ஒபாமா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. இது சம்பந்தமா நான் அடுத்தவாரம் சீனா அதிபரையும் ரஷ்யா பிரதமரையும் சந்திக்க இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்கோ. நான் பார்த்துக்கறேன். எல்லாரும் நன்னா வாழணும்ங்கிறதுக்காக எனது கட்சிக்காரா எட்டு கோடி பேரும் கருணாநிதிக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுவா. அதுக்காக நான் பி.ஜே.பி கூட கூட்டணி சம்பந்தமா பேசிண்டு இருக்கேன். காங்கிரசு சென்ட்ரல் கவர்மெண்டை அடுத்தவாரம் கலைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

....