Saturday, November 14, 2009

எங்க ஊரு அதிசய மனிதர்கள் - பாகம்2

புகழேந்திப்பயல்

புகழேந்திக்கு சொந்த ஊரு திருவையாறு பக்கத்தில இருக்கிற திருப்பூந்துருத்தி. கி.பி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி சொச்ச வருசத்துல அவன் எட்டாவது படிச்சிகிட்டு இருந்தப்ப அந்த ஊர்ல தாதாவா இருந்த காமராசு ங்கறவனுக்குப் பயந்து கிட்டு எங்க ஊருக்கு குடும்பத்தோட அகதியா வந்து சேர்ந்தான்.

நான் படிச்சிகிட்டு இருந்த பள்ளிக்கூடத்தில என்னோட வகுப்புல வந்து சேர்ந்தான்.

வந்த புதுசுல அந்தப்பய அமுக்குனியாட்டம் ரொம்ப சாதுவாத்தான் இருந்தான்.

ஒரு வாரம் கழிச்சு தன்னோட சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்கால லட்சியம் இருக்கும்.

அவனோட எதிர்கால லட்சியம் தமிழ் வாத்தியார் கபிலருக்கு பைத்தியம் பிடிக்க வெக்கணும் ங்கிறதுதான்.

" தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே காமெடி பீஸ் தான் " னு எப்பவும் அவன் சொல்லிகிட்டு இருப்பான்.

அதனால தன்னோட இலக்கா தமிழ் வாத்தியார் கபிலரை தேர்ந்தெடுத்தான்.

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி கபிலருக்கு டவுசர் போட்டுகிட்டு நிக்கிற குஷ்பு படம் போட்ட பொங்கல் வாழ்த்து அட்டையை தபால்ல அனுப்பி வெச்சிட்டான்.

கொதிச்சிப்போன தமிழ் வாத்தியாரு மறுநாள் காலையில நடந்த Prayer தன்னோட கடும் கண்டனத்தை தெரிவிச்சாரு.

" எந்த ராஸ்கல் தறுதலை முட்டாப்பயலோ எனக்கு இந்த பொங்கல் வாழ்த்தை அனுப்பி வெச்சிருக்கான் பாருங்க."

ன்னு சொல்லி அந்தப்பொங்கல் வாழ்த்து அட்டைய, உலகக்கோப்பை போட்டியில ஜெயிச்ச கபில்தேவ் கோப்பையத்தூக்கி காண்பிச்சது மாதிரி எல்லாருக்கும் காண்பிச்சாரு.

அதப்பார்த்த பசங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

" இவனுக்கெல்லாம் எப்படி படிப்பு வரும். வாழ்க்கையில உருப்படறதுக்கு வாய்ப்பே இல்ல. இதப்பத்தி திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்காருன்னா......" ன்னு பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாரு.

ஒருநாளு தமிழ் இலக்கணம் பத்தி பாடம் நடத்திகிட்டு இருந்தாரு.

" 'பலப்பல' , 'சிலசில' மாதிரி பிரிஞ்சா பொருள் தர்ற வார்த்தைகள் அடுக்குத்தொடர். 'வழவழ' 'கொழகொழ' ன்னு பிரிச்சா பொருள்தராத வார்த்தைகள் இரட்டைக்கிளவிகள் ஆகும். டேய் புகழேந்தி! இரட்டைக்கிளவிகளுக்கு ஒரு உதாரணம் சொல்லு " ன்னு கேட்டாரு.

புகழேந்திப்பய பவ்யமா எழுந்திருச்சி கையை கட்டிக்கிட்டு,

" நீங்க பேசறது எல்லாமே இரட்டைக்கிளவிங்கதான் சார்."

" எப்படி சொல்ற? "

" நீங்க எப்பவுமே 'வளவள' ன்னு தேவையில்லாமத்தானே சார் பேசிகிட்டு இருக்கீங்க? "

இப்படி அவன் பதில் சொன்னதும் பசங்க எல்லாரும் 'கடகட' ன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

வாத்தியாருக்கு 'பொசபொச' ன்னு கோவம் வந்துடிச்சி.

உடனே குச்சிய எடுத்து புகழேந்திய 'படபட'ன்னு போட்டு வெளுத்து எடுத்துட்டாரு.

அடிதாங்க முடியாம அவன் 'பொலபொல' ன்னு கண்ணீர் விட ஆரம்பிச்சிட்டான்.

இப்படியா அவருக்கு பலப்பல சேட்டைகள் செஞ்சி அவரை தெனாலி படத்துல கமல் ஜெயராமை படுத்தி வெக்கிறது மாதிரி படாத பாடு படுத்தி வெச்சிகிட்டு இருந்தான்...

கொண்டு வந்து மனைப்புகுந்து
குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடை
வைத்தருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்திலாறு
சுவைத்திறத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்ய அளித்துளார்.

பெரியபுராணத்துலயோ எதுலயோ வர்ற இந்த மாதிரி வாயில நுழையாத பாட்டையெல்லாம் கூட எளிமையா மனப்பாடம் பண்ணிடுவான். ஆனா கணக்குப் பாடம் னாலே இவனுக்கு ஒவ்வாமை.

"கணக்கு எனக்குப் பிணக்கு. நினைத்தாலே கசக்கும் ஆமணக்கு" ன்னு தத்துவம் பேசுவான். ஒண்ணும் மூணும் கூட்டினா ஏழு வரும்னு சொல்லுவான். அந்த அளவுக்கு கணக்குல ரொம்ப பலவீனமானவன்.

அதனால கணக்கு வாத்தியார் வகுப்புக்கு வரும்போது மட்டும் தலைமறைவாயிடுவான்.


தொடரும்....

....

1 comment:

  1. சூடாயிருக்காங்க உங்க ஊரு மக்கள்!
    //" நீங்க பேசறது எல்லாமே இரட்டைக்கிளவிங்கதான் சார்."

    " எப்படி சொல்ற? "

    " நீங்க எப்பவுமே 'வளவள' ன்னு தேவையில்லாமத்தானே சார் பேசிகிட்டு இருக்கீங்க? "

    //
    அடி ஆத்தி!?

    ReplyDelete