Friday, June 26, 2009

போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!






பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் கல்யாணம் ங்கற வார்த்தையைக் கேட்டாலே 'உவ்வே' ன்னு எதுக்கு குமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தார்னு ஒருநாள் மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து சிந்தனை பண்ணிப்பார்த்தேன்.

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு இந்த கெழங்கட்டையெல்லாம் அடிக்கடி சொல்லுதுங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மாதிரி கலகலப்பாய் போய்க்கிட்டு இருக்கிற பிரம்மச்சாரியோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் மெகாதொடர் சீரியல் மாதிரி ஒரே சோகமாயிடுதுங்க.

'வீட்டைக் கட்டிப்பாரு. கல்யாணம் பண்ணிப்பாரு.' ன்ற பழமொழியை அனுபவிச்சி முதல்ல சொன்னவன் என்ன பாடுபட்டிருப்பான்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை சடங்கு, சம்பிரதாயம்!

முதல்ல பொண்ணு தேடுற படலம்.

கேசரி,ஜாங்கிரி இப்படிப்பட்ட இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையான பசங்களை நண்பனா கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்கப்போறவன் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண முடியாது. பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சிப்போயி இருந்தாலும் பொண்ணு தேடுற படலம் முடிஞ்சு போயிடுச்சின்னா அப்புறம் திங்கிறதுக்கு சுவீட் கிடைக்காதேங்கற பதட்டத்துல ஏதாவது குறையைக் கிளப்பி விட்டுட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு 'அப்புறம் சொல்லி அனுப்புறோம்' னு கிளம்ப வெச்சிடுவானுங்க.

பொண்ணு நல்லா லட்சணமா இருந்தாலும் அடுத்தபடியா திங்கறதுக்கு பட்சணம் கிடைக்காதேங்கற எண்ணத்துல மாப்பிள்ளைக்காரப் பயல் கிட்ட 'டேய்! பொண்ணோட மூக்கு அருவா மாதிரி வளைஞ்சு இருக்குடா' ன்னு உசுப்பேத்தி விட்டுட்டு அந்த பொண்ணை பிடிக்கலன்னு சொல்ல வெச்சிடுவானுங்க.

சுவீட் முட்டை போடுற வாத்தை யாராவது கொல்ல நினைப்பாங்களா?.

இப்படி அடுத்தவனுக்குப் பொண்ணு பார்க்கப் போயே தன்னோட சுவீட் தாகத்தை தீர்த்துக்குவானுங்க.

ஒருவழியா நண்பர்களோட சதித்திட்டங்களையும் முறியடிச்சிட்டு பொண்ணு புடிச்சிப்போயிடுச்சின்னா அடுத்ததா நிச்சயதார்த்தம்னு ஒண்ணு பண்ணுவாங்க.

தட்டுல பழம், வெத்தலை பாக்கு இதெல்லாம் வெச்சி பொண்ணோட அப்பனும் மாப்பிளையோட அப்பனும் மாத்தி மாத்தி கொடுத்துக்குவானுங்க. என்னய்யா விளையாடறீங்களா?

அவங்க அவங்க வாங்குன ஆரஞ்சுப் பழத்தை அவனவன் உரிச்சித் தின்னுக்க வேண்டியதுதானே? எதுக்கு வாங்குன பழத்தை மாத்தி மாத்தி கொடுத்துக்கணும்?. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

நிச்சயதார்த்தமும் முடிஞ்சி அப்புறம் கண்ணாலம்.

கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி மாப்பிள்ளை நேரா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பியூட்டி பார்லருக்குப்போயி ஷேவ் பண்ணி முடி வெட்டிக்குவான். பியூட்டி பார்லர் காரன் மாப்பிள்ளை கிட்ட 'ஃபேசியல் பண்ணிக்குங்க. அப்பத்தான் நாளைக்கு மூஞ்சி பளபளன்னு இருக்கும்' னு சொல்லி உசுப்பேத்தி விடுவான். கருவாப் பயலாட்டம் இருக்கிற நம்ம மாப்பிள்ளைப் பயலோட மூஞ்சியில சேறு மாதிரி எதையோ குழப்பி அப்பிவிட்டு காய வைப்பான்.காய்ஞ்சுகிட்டு இருக்கிற அந்த கொஞ்ச நேரத்துல நம்ம மாப்பிள்ளைப்பய கண்ணை மூடிக்கிட்டு கற்பனையில காஷ்மீர் மாதிரி குளுகுளு பிரதேசத்துக்கு பறந்துபோயி அந்த பொண்ணு கூட ஒரு குத்தாட்டம் போட்டு முடிச்சிடுவான். அரை மணிநேரம் கழிச்சி மூஞ்சிய கழுவிப்பார்த்தா கரிச்சட்டியில சுண்ணாம்பு அடிச்சது மாதிரி மூஞ்சி வெள்ளையா இருக்கும்.

கல்யாணப்பொண்ணு என்ன பண்ணுவா தெரியுமா? அவளோட வீட்டுக்கொல்லைப்புறத்தில இருந்த மருதாணி மரத்துல உள்ள எல்லா இலையையும் உருவிப்போட்டு அம்மியில வெச்சி அரைச்சு கை கால் விரல்ல எல்லாம் சாணி அப்புன மாதிரி அப்பிகிட்டு 'அன்னக்கிளி உன்னத்தேடுது' ன்னு டூயட் பாடிக்கிட்டு தூங்காம விடிய விடிய உக்கார்ந்து கெடக்கும்.

மறுநாள் கல்யாணம்...

விடிஞ்சதும் கல்யாண மண்டபத்துக்கு சொந்தக்காரனுங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவானுங்க.

ரொம்ப தூரத்திலே இருந்து வந்த ஆளுங்க அதது ஒரு மூலையில உட்கார்ந்துகிட்டு தூங்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அந்த நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரும் வித்துவானுங்க வாயில நாதஸ்வரத்தை வெச்சி ஊதி, ரெண்டு கையாலயும் தவிலை அடிச்சி தூங்கிகிட்டு இருக்கிற கூட்டத்தையெல்லாம் எழுப்பி விட்ருவாய்ங்க. வாரிச்சுருட்டிகிட்டு எழுந்திருக்கிற சொந்தக்காரனுங்க வாயில வெத்தல சீவல் போட்டுகிட்டு கல்யாணத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய வரவழைச்சி இந்த அய்யரு அவங்க ரெண்டு பேரையும் செக்குமாடு மாதிரி மணமேடையை சுத்தி வரச்சொல்லி டயர்டாக்கிடுவாரு.அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய மணமேடையில உட்கார வைப்பாங்க. அய்யரு எதிரில இருக்கிற அடுப்பை பற்ற வெச்சி காய்ஞ்ச குச்சியெல்லாம் அதுல பொறுக்கிப்போட்டு புகைமூட்டத்தைக் கிளப்பி விடுவாரு.

அடுப்பு அனல் பட்டு வியர்வையில மாப்பிள்ளை பொண்ணோட மேக்கப் எல்லாம் கலைஞ்சி போய் ரெண்டுபேரும் வெயில் நேரத்துல மணல் திட்டுல சிக்குன அகதிகள் மாதிரி ஆயிடுவாங்க.

புகை மூட்டம் கிளம்பி அய்யரோட மூக்குக்குள்ள போயி தும்மலை கௌப்பி விடும். தும்மினா சுத்தி உட்கார்ந்து இருக்கிறவனுங்க கொந்தளிச்சிடுவானுங்கங்கற பதட்டத்துல அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு. வித்துவானுங்களும் தடார் புடார் னு அடிச்சி இன்னும் அதிகமா சத்தத்தை கௌப்புவாய்ங்க. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு அய்யரு வாய்க்குள்ள லாக் ஆன தும்மலை யாருக்கும் தெரியாம ரிலீஸ் பண்ணி விட்ருவாரு.

மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.

அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்.

உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க. தூக்கி எறிஞ்ச அரிசியில முக்கால்வாசி அந்த அய்யரோட உச்சந் தலையில போய் உட்கார்ந்துக்கும்.

ஆசிர்வாதம் பண்ணுன கையோட உடனே எழுந்திருச்சி ஜனங்கள் எல்லாம் பந்தி நடக்கிற இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுடும்.

மாப்பிள்ளையும் பொண்ணும் டயர்டாயி போய் 'உஷ். அப்பாடா' ன்னு மணமேடையில உட்காருவாங்க. அந்த நேரத்துலதான் நண்பனுங்க எல்லாம் அட்டைப்பெட்டி மேல கலர் பேப்பரை சுத்திகிட்டு வந்து 'மச்சி வாழ்த்துக்கள் டா' ன்னு சொல்லி, மாப்பிள்ளை பொண்ணை எழுப்பிவிட்டு, கையில கிப்ட் கொடுத்துட்டு 32 பல்லும் தெரியறமாதிரி சிரிச்சிகிட்டு குரூப் போட்டோ எடுத்துக்குவானுங்க.

கொஞ்சநேரத்துல சொந்தக்காரனுங்க எல்லாம் பந்தியில குந்தி தின்னு முடிச்சிட்டு மொய் எழுதிட்டு சொந்த ஊருக்குக் கௌம்பிடுவானுங்க.

தனியா உட்காரந்து கிடக்கிற பொண்ணு மாப்பிள்ளைக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடும். ரெண்டுபேரும் பந்தி நடக்குற இடத்தையே ஏக்கமா அடிக்கடி எட்டிப் பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கும்.

சாயங்காலம் நாலு மணிக்கு வந்து யாராவது ரெண்டுபேரையும் பந்திக்கு கூட்டிகிட்டுப்போய் மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க.

அப்புறம் எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாய்ங்க.

அப்புறம் கொஞ்சநாளு மாப்பிள்ளையும் பொண்ணும் குஜாலா கூத்தடிச்சி கொண்டாடுவாங்க.

மோகம் முப்பது நாளு. ஆசை அறுபது நாளு. மொத்தம் தொண்ணுறு நாளு கழிச்சி ரெண்டுபேரும் சம்பாதிச்சி குடும்பம் நடத்த திண்டாடுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை குட்டிகள். அப்புறம் அதை வளர்த்து... படிக்க வெச்சி... கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு வரன் தேடி அலைவாங்க..

முதல்ல பொண்ணு பார்க்கிற படலம்...

அய்யய்யோ. தேய்ஞ்சி போன சி.டி மாதிரி திரும்பவும் மொதல்லே இருந்தா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்........

12 comments:

  1. //மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க//

    பத்து வருஷம் முன்னாடி நடந்த / நடந்திட்டு இருக்கற கொடுமையை அப்படியே எழுதிருக்கீங்க மணி.

    அதனால சபை உங்களுக்கு "நாஸ்தா துன்னும் நவீன நாஸ்த்ராடாமுஸ்" என்ற பட்டத்தை மானம் பறக்க விடுகிறது...

    ReplyDelete
  2. //"நாஸ்தா துன்னும் நவீன நாஸ்த்ராடாமுஸ்"//

    இப்படி கெட்ட வார்த்தையில திட்டுனா அப்புறம் நான் அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  3. உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க.//

    அது ஆசிர்வாத அரிசி இல்லீங்..வாய்க்கரிசி தானுங்...

    ReplyDelete
  4. அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு.//

    அது கெட்டி மேளம் இல்லீங்...ஒத்தையடி சாவு மேளமுங்...

    ReplyDelete
  5. மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.//

    அது தாலி கட்டுரை சுருக்கு முடிச்சு இல்லீங்...சுருக்கு கயிறு தானுங்...

    ReplyDelete
  6. உங்க பதிவு செம சூப்பருங்...கலக்குரீங் போங்...

    ReplyDelete
  7. //அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்//

    புடிக்கல புடிக்கலன்னு எல்லாத்தையும் நல்லா நோட் பண்ணி இருக்கீங்களே... :-)

    ReplyDelete
  8. வோட்டும் போட்டசுங்..

    ReplyDelete
  9. ஏதோ விரக்தியில பேசுராப்புல இருக்கு....

    ReplyDelete
  10. ரொம்ப தமாஷா எழுதி இருக்கீங்க. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினக்கிறேன்! அதற்குள் இதுபோல் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.//

    ஐயோ தலைவா இது ரொம்ப ரொம்ப உண்மை... இதுல வலக்கமான செய்திகளை சொல்லிருக்கிங்க! ஆனா இப்போ நாட்ல கல்யாத்துக்கப்புறம் மாப்ள வீட்டுக்காறவங்க பூறா பயகலும் வரதட்சணை கொடுமை சட்டத்தில் குற்றவாளியக்கப்டுகிற செய்தியபத்தியும் நீங்க தெரிஞ்சிக்கனும்... வாய்பிருந்தா ஒரு தடவ இந்த http://tamil498a.blogspot.com வலைபூ பக்கத்திற்கு வந்திட்டுப்போங்க தலீவா!

    ReplyDelete
  12. சரளமான நகைச்சுவை மிகவும் ரசித்தேன்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து கலக்குங்கள்.
    ஜெயராஜன்.மதுரை.

    ReplyDelete