Monday, February 16, 2009

மணிப்பயலும் சில மத்தாப்புகளும்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.
மணிப்பயலும் குண்டுசவுரியும் வழக்கம் போல கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.
கணக்கு வாத்தியார் அணிகள் பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த குண்டுசவுரி திடீரென தன் புத்த பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்கை கையில் எடுத்தான்.அதில் இருந்த ஒரு முறுக்கை எடுத்து மணிப்பயலிடம் கொடுத்தான்.
"டேய் மணி! இந்தாடா முறுக்கு. சத்தம் போடாம சாப்பிடு. “
மணிப்பயல் அந்த முறுக்கை எடுத்து கடித்தான். உண்மையிலேயே கடித்து சாப்பிடும் சத்தம் வாயிலிருந்து வரவேயில்லை. காரணம் அது போன வருடம் தீபாவளிக்கு சுட்ட நமுத்துப்போன முறுக்கு.

மணிப்பயலுக்கு அந்த முறுக்கை தின்றவுடன் வயிற்றுக்குள் கிரைண்டர் ஓடுவது போல தோன்றியது. தலை லேசாக கிறுகிறுத்தது.
"டேய் குண்டு! என்ன எழவுடா திங்க குடுத்த? எனக்கு மயக்கம் வர்றது போல இருக்குடா “
"டேய் மணி! நான் நல்ல முறுக்குதாண்;டா குடுத்தேன். முறுக்கு சுட்டு கொஞ்சம் லேட்டாயிடுச்சிடா. அதான் லேசா நமுத்துப்போச்சி. போசாம சாப்பிடு கணக்கு வாத்தியான் நம்மளை பாக்குறான் “
குண்டுசவுரி ரொம்ப நல்லவன். மணிப்பயல் மேல் ரொம்பவும் பாசமாக இருப்பான். அதே நேரத்தில் எந்த பொருளையும் வீணாக்கக்கூடாது என்ற கொள்கையுடையவன். அதனாலேயே போன வருடம் சுட்டு மீந்துப்போன முறுக்கை வீட்டில் உள்ள அவனது கிழவி எலிகளைக் கொல்வதற்காக மொட்டை மாடியில் வீசியெறிந்ததை கொண்டு வந்து மணிப்பயலிடம் கொடுத்தான்.

“ பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பழைய முறுக்கை மணிப்பயலிடம் கொடுத்து (அதனை மணிப்பயல் தின்றதனால் நான்கு நாட்களாக கலிந்து கொண்டிருந்த விசயம் அவைக்குறிப்பிலுருந்து நீக்கப்படுகிறது) புத்தகப்பையில் வைத்திருந்த இன்னொரு பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த நேற்று சுட்ட நல்ல மொறு மொறு முறுக்கை எடுத்து தனது வாயில் புகுத்தினான்.
முறுக்கு மிகவும் சுவையாக இருந்ததால் குண்டுசவுரி தன்னை மறந்து நறநறவென கடித்து திங்க ஆரம்பித்தான்.
போர்டில் எழுதிக்கொண்டிருந்த கணக்கு வாத்தியார் எழுதுவதை திடீரென நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தார். வகுப்பறை அமைதியானது. வாத்தியார் மெல்ல நடந்து கடைசி பெஞ்ச் அருகே வந்தார்.

‘ ஏதோ திங்கற மாதிரி சத்தம் வந்ததே.'
என்றபடி அனைவரது முகங்களையும் பார்த்தார்.

தான் முறுக்கை கடித்து தின்றது வாத்தியார் காதில் விழுந்துவிட்டதை நினைத்து குண்டுசவுரி அதிர்ச்சியில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான்.

‘இப்ப சத்தம் வரலியே. ஒருவேளை மனப்பிராந்தியா இருக்குமோ.?'
என்று குழம்பியபடி வாத்தியார் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

முறுக்கு சுவையின் கிறக்கத்தில் லயித்திருந்த குண்டுசவுரி முறுக்கை மீண்டும் நறநறவென மெல்ல ஆரம்பித்தான்.சடாரென திரும்பிய கணக்கு வாத்தியார் குண்டுசவுரியின் உச்சி முடியைப்பிடித்து தூக்கினார்.

"என்னடா பண்ணிகிட்டு இருக்கே?.”

"சார்! பாடத்தை கவனிச்சிகிட்டு இருக்கேன் சார்!.”

"அப்ப நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. அணிகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?”

"அது வந்து சார்.. வந்து… வந்து.. இரண்டு வகைப்படும் சார். “

"சொல்லு.பார்ப்போம்”

"இளைஞரணி சார் இன்னொன்னு மகளிரணி சார்.”

"அப்படியா?. சரி. கோணத்தை அளப்பது எப்படி?”

"எனக்குத் தெரிஞ்சி கும்பகோணத்தை சர்வேயர்தான் சார் அளந்தாரு”

கோபமடைந்தார் வாத்தியார்.

"ஏண்டா பொறுக்கிப்பயலே. நானே ரொம்ப குழம்பிப்போய் பாடம் நடத்திகிட்டு இருக்கேன். உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா முறுக்கு தின்னுகிட்டு இருப்பே?”என்றபடி முடியைப்பிடித்து குனிய வைத்து முதுகில் ‘சொட்டீர்” என அடித்தார்.
குண்டுசவுரியின் தண்டுவடத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல ‘அய்யோ!” என்று அலறினான்.

அப்போது மிக்ஸியில் பாதி அரைபட்ட தேங்காய் சட்னியை கொட்டியது போல அவன் வாயிலிருந்து முறுக்குத்துகள்கள் கொட்டின.

பள்ளி முடிந்தது. மணிப்பயலும் குண்டுசவுரியும் சோகமாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
"டேய் குண்டு! வலிக்குதாடா?”

"டேய் மணி! நக்கலா? அடி வாங்குனதை பார்த்திட்டு கேட்கறியா கேள்வி? அந்த வாத்திப்பய டெய்லி காலையில நாப்பது பச்சை முட்டையை குடிச்சிட்டு தண்டால் எடுப்பார்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்குதாண்டா நம்பினேன். என்னா அடீ. எப்பப்பா! ஒரு நிமிசம் கண்ணே தெரியலடா. டேய் அந்தாளு என்னை கவனிக்கிறார்னு என்கிட்டே ஏண்டா சொல்லல நீ? “

"டேய் குண்டு! அந்தாளு ஒன்றரை கண்ணான்னு உனக்கு தெரியாதா? அந்த ஆளு உன்னை பார்த்தப்ப அவர் மேல ஃபேன் ஓடுறதை பார்க்கிறார்னு நெனைச்சிட்டு இருந்திட்டேன்டா.சரி விடுடா. அடி வாங்குறதெல்லாம் நமக்கு சகஜம்தானே. டேய் குண்டு! நம்ம கோவிந்தன் மவன் சிங்காரம் இருக்கானே அவன் பட்டாசு கடை போட்டு இருக்கானாம். வா போய் பார்ப்போம்.”

இருவரும் சிங்காரம் கடையை நெருங்கினார்கள். கடையில் மிகவும் கூட்டம் அலைமோதியது.
குண்டுசவுரி கூட்டத்தை விலக்கி விட்டு சிங்காரம் அருகே நெருங்கினான்.

"யோவ் சிங்காரம்! பாம்பு மாத்திரை இருக்குதா? “
"இருக்குது. எத்தனைடா வேணும்? “

"நூறு குடு “

"எதுக்குடா அவ்ளோ மாத்திரை கேட்கிறே?”

"ம்..? ஒப்பன் கோவிந்தனுக்கு வயித்தால போகுதாம். அவனுக்கு வைத்தியம் பாக்குறதுக்கு. கேட்கிறதை குடுய்யா “
"அடி செருப்பால. அவ்ளோ திமிர் வந்துடுச்சா உனக்கு?”
என்றபடி சிங்காரம் குண்டுசவுரியை துரத்த ஆரம்பித்தான்.
குண்டுசவுரி வேகமாக ஓட ஆரம்பித்தான். உடனே சிங்காரம் ஒரு வெங்காய வெடியை எடுத்து குண்டுசவுரியை நோக்கி வீசினான்.
வெங்காய வெடி பறந்து வந்து புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த குண்டுசவுரியின் டவுசரில் பட்டு வெடித்தது.
வெடித்த வேகத்தில் டவுசரின் பின்புறம் கிழிந்து உடனடி தபால் பெட்டி உருவானது.
ஓடிக்கொண்டிருந்த குண்டுசவுரி குளிர்ந்த காற்றானது தனது பின்புறம் வீசுவதை உணர்ந்து கையால் தடவிப்பார்த்தான். டவுசர் கிழிந்திருப்பதை அறிந்து மிகவும் கோபமுற்றான்.

"யோவ் சிங்காரம்! என்னையா அவமானப்படுத்துறே? உன்னை பழி வாங்காம விடமாட்டேன்டா.”

என்று சவால் விட்டபடி கிழிந்த பகுதியை தனது கைகளால் மறைத்தபடி ஓடி வந்து வீடு வந்து சேர்ந்தான்.வீட்டில் தனியாக அமர்ந்து சிங்காரத்தை பழி வாங்குவதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தான் குண்டுசவுரி. அப்போது அங்கு மணிப்பயல் வந்தான்.

"டேய் குண்டு! என்னடா யோசிக்கிறே?”

"டேய் மணி! அந்த வாத்திப்பயலை அப்புறம் கவனிச்சிக்கிறேன். முதல்ல சிங்காரம் பயலை பழி வாங்கனும் அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லுடா.”

"டேய்! என்கிட்ட ஒரு அருமையான ஐடியா இருக்கு. காதை கிட்ட கொண்டு வா சொல்றேன்”

குண்டுசவுரி தனது காதை மணிப்பயலின் வாயருகே நீட்டினான். மணிப்பயல் தனது சதித்திட்டத்தை சொல்ல ஆரம்பித்தான்.

அன்று இரவு சிங்காரம் கடை எதிரே உள்ள சந்தினுள் இருட்டில் மணிப்பயலும் குண்டுசவுரியும் பதுங்கினர்.
எதிரே சிங்காரம் கடையில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிங்காரம் கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்தான்.
மணிப்பயல் தனது கையிலிருந்த மஞ்சள் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். அந்த பாட்டிலில் ஒரு ராக்கெட் வெடியை சொருகி சிங்காரம் கடையை நோக்கி பிடித்துக்கொண்டான்.உடனே குண்டுசவுரி தீப்பெட்டியை எடுத்து ராக்கெட் வெடியை பற்றவைத்தான்.
ராக்கெட் வெடியானது புகையை கக்கிய படி பறந்து சென்று தனது இலக்கான சிங்காரம் கடையை துல்லியமாக தாக்கியது.
உடனே பட்டாசுகள் பாம்புமாத்திரைகள் ராக்கெட் வெடிகள் சங்குசக்கரங்கள் புஸ்வானங்கள் ஆகியவை வெடிக்க ஆரம்பித்தது.
கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த சிங்காரத்தின் வாயில் ஒரு யானை வெடி விழுந்து வெடித்தது.
தலைமேல் ஒரு சங்கு சக்கரம் சுற்றியது.
காலடியில் பாம்பு மாத்திரைகள் படமெடுத்தன.
தப்பிப்பதற்காக சிங்காரம் கடையை விட்டு ஓட ஆரம்பித்தான்.
அப்போது கும்பலாய் துரத்தி வந்த ராக்கெட் வெடிகள் அவனது வேட்டியில் புகுந்து பறித்துக்கொண்டு வானம் நோக்கி வேட்டியுடன் பறக்க ஆரம்பித்தன.
வேட்டியுடன் சேர்ந்து அவனது மானமும் காற்றில் பறந்தது.

அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த கோவிந்தன் நீண்ட நாட்களாய் காணாமல் போன தனது அண்டர்வேரை தனது மகன் சிங்காரம் அணிந்து கொண்டு ஓடுவதை கண்டு கோபமுற்று கையில் தடியுடன் சிங்காரத்தை துரத்திக்கொண்டு பின்னால் ஓடினார்.

எதிரியை பழி வாங்கிய மகிழ்ச்சியில் மணிப்பயலும் சிங்காரமும் வீடு திரும்பினர்.
இவ்வாறாக குண்டு சவுரி மற்றும் மணிப்பயலின் அந்த வருட தீபாவளி இனிதாய் கழிந்தது.