Saturday, April 28, 2007

மாண்புமிகு முதல்வர் மணிப்பயல்

பின்னங்கால் பிடரியில் பட ஆட்டோவின் பின்னால் மணிப்பயல் ஓடிகொண்டிருந்தான்.

பின்னால் குண்டுசவுரி தொந்தி குலுங்க ஓடி வந்து கொண்டிருந்தான்.

சட்டி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு ஆட்டோவில் போய்க்கொண்டு சிலர் நோட்டீசு விநியோகித்தனர்.
தேர்தல் முடிவதற்குள் யார் அதிகம் நோட்டீசு சேகரிப்பது என்பதில் மணிப்பயல் அண்டு குண்டுசவுரியின் முற்போக்கு டவுசர் அணிவோர் கூட்டணிக்கும் ஆறாம் வகுப்பில் படிக்கும் பக்கத்து தெரு ரவுடி ஒரப்படை செந்திலின் தலைமையிலான (ரவுடி என்றால் பட்டப்பெயர் இல்லாமலா) பிற்போக்கு பேண்ட் அணிவோர் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

ஒரப்படை செந்தில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம் ஒரு நாள் அம்மா சுட்ட ஒரப்படையை டவுசர் பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்திருந்தான்.
புதிதாக அந்தப் பள்ளிக்கு வந்திருந்த தமிழ் வாத்தியார் பண்டைய தமிழர்களின் விருந்தோம்பல் குணத்தைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது அவரது உண்மையான குணத்தை அறியாத செந்தில் டவுசர் பையிலிருந்த தின்பண்டமான ஒரப்படையை தின்னும்போது அதைக்கண்ட தமிழ் வாத்தியார் குஸ்தி வாத்தியாராகி அவனது தொந்தியில் பல குத்துக்களை விட்டு பஞ்சர் ஆக்கினார்.
அன்று முதல் அவன் ஒரப்படை செந்தில் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டான். இதுவே அவனது பெயர் காரணமாகும்.

ஒரப்படை செந்தில் சண்டை வந்தால் எதிரியின் தொடையில் டவுசரை விலக்கி கையில் வைத்திருக்கும் பேனாவினால் ஓங்கி குத்தி விடுவான். குத்திய வேகத்தில் அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து விடுவான். அதன் பிறகு பள்ளிகூடத்திற்கு நான்கு நாட்கள் கழித்துதான் வருவான்.

தொடையினில் குத்திய புண் நான்கு நாளில் ஆறுமே

அதற்கு முன் அகப்பட்டால் நம் கதை நாறுமே.

என்ற புதுக்குறள் அவன் எழுதிய திருக்குறள்.

அவன் பேனா மற்றும் பென்சில்களை இது போன்ற அதிரடி தாக்குதல்களுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்தான். தப்பி தவறி அவற்றை பரிட்சை போன்ற வீணான செயல்களுக்கு பயன்படுத்துவதில்லை என்பதை தனது அயலுறவு கொள்கையாக வைத்திருந்தான். எனவே அவனுக்கு பேனா பக்கிரி என்ற பட்டமும் அவனால் பாதிக்கப்பட்ட தொடை கிழிந்தோர் மறுவாழ்வு கழகத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.

மணிப்பயலும் குண்டுசவுரியும் போட்டியில் வெற்றி பெற்றால் நூற்றியெட்டு மாங்காய் உடைப்பதாக (ஒண்டித்தோப்பு கிழவனின் மாந்தோப்பில் திருடி) தொந்திப்பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டனர்.
உடைத்து முடித்ததும் அவற்றை பொறுக்கியெடுத்து மாங்காய் ஊறுகாய் போட்டு தரும்படி வீட்டில் உள்ள கிழவியிடம் வேண்டிக்கொண்டனர்.

ஒரு நாள் ஒரப்படை செந்தில் ஆட்டோவில் நோட்டீசு விநியோகிப்பவருக்கு எலந்தப்பழம் லஞ்சமாக கொடுத்து பத்து நோட்டீசு வாங்கியதாக முற்போக்கு கூட்டணியின் ஒற்றர் படை தளபதி பத்துகாசு பரமசிவன் குண்டு சவுரியிடம் சொல்லிவிட்டான்.
கோபமடைந்த குண்டுசவுரி போட்டியில் ஊழல் நடைபெற்றதை கண்டித்து மறியல் போராட்டம் அறிவித்தான்.
இதனால் தெருவில் பம்பரம் மற்றும் கோலிக்குண்டு விளையாடிய சிறுவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ரவுடி ஒரப்படை மறியல் போராட்டத்தை கண்டித்து உண்னும் விரதம் அறிவித்தான்அதன்படி வழக்கமாக வீட்டில் ஐந்து தட்டு சோறு தின்பவன் அன்று எட்டு தட்டு சோறும் சாம்பார் குண்டானையும் காலி செய்தான்.
சாப்பாடு தீர்ந்து போன ஆத்திரத்தில் ஒரப்படை செந்திலின் அப்பா அவனது முதுகில் நான்கு கும்மாங்குத்துகளை விட்டு உண்னும் விரதத்தை முடித்து வைத்தார்.
இப்படியாக கலவரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள்….

மணிப்பயல் ஒரு மூத்திர சந்தின் வழியாக முறுக்கு தின்று கொண்டு வந்துகொண்டு இருந்தான். அப்போது திடீரென ஒரப்படை செந்தில் எதிரில் வந்து நின்றான். அவன் கையில் ஏதோ ஆயுதம் போன்று மறைத்து வைத்திருந்தான்.

அவனது கையில் வைத்திருந்த அந்த ஆயுதம் ஒரு பொட்டலத்தில் இருந்தது.

படாரென அந்த பொட்டலத்தைப்பிரித்தான் ஒரப்படை.
அதில் ஓட்டல் மரணபவனில் கி.மு வில் சுட்ட நான்கு போண்டாக்கள் இருந்தன.

‘என்னடா பாக்குற மணி? டேய்! உனக்குத்தான் திங்க தெரியுமா? நான் இப்ப எப்படி திங்கிறேன்னு பாருடா.’ என்று சவால் விட்டபடி ஒரு போண்டாவை எடுத்து தரையில் மண்ணில் போட்டு புரட்டி எடுத்து தின்றான்.

‘டேய் ஒரப்படை! நீ திங்கறதுல வேணுமின்னா என்னோட ஜெயிக்கலாம். தைரியம் இருந்தா எலக்ஷன்ல என்னோட போட்டி போட்டு ஜெயிச்சிக்காட்டுடா பாக்கலாம்.’

இருவரும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தனர்.

அதன்படி ‘அகில இந்திய நாதியற்றோர் மற்றும் பின்தங்கியோர் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை மணிப்பயல் ஆரம்பித்தான். அதில் தேர்வில் காப்பி அடிக்கவும் பிட் அடிக்கவும் உதவி கிடைக்காத நாதியற்றோரும் மற்றும் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கிடக்கும் பின்தங்கியோரும் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்; ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்கும் பொறுப்பாளராக உருண்டை உப்புளி நியமிக்கப்பட்டிருந்தான்.அதன்படி குச்சிமிட்டாய் மற்றும் குருவிரொட்டி வாங்கித்தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிலரை கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

அங்கிருந்த குட்டிச்சுவற்றில் ஏறி நின்றுகொண்டு மணிப்பயல் பேச ஆரம்பித்தான்.

‘அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே மற்றும் டாஸ்மாக் சிறுகுடி மக்களே! தாய்மார்களே மற்றும் கணவனை கொடுமைப்படுத்தும் பேய்மார்களே! பல்செட்டை மாட்டிக்கொண்டு பலகாரம் தின்னும் கிழவிகளே! மற்றும் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்கும் தாத்தாக்களே! உங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் அதாவது நான் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அகில இந்திய நா.பி.கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன்.அதில் நாதியற்ற,சோற்றுக்கு வக்கற்ற,கொட்டாவி விடக்கூட அலுப்பு படும் சோம்பேறிகள் ஆகியோரை நம்பி இந்த கட்சியை ஆரம்பித்துள்ளேன்.

நான் ஆட்சிக்கு வந்தால் பள்ளிக்கூடங்கள் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற 364 நாட்களும் விடுமுறை அறிவித்து சட்டம் இயற்றப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் ஒரே வகுப்பில் மூன்று வருடங்களுக்கு மேல் பெயிலாகி அஸ்திவாரத்தை ஆழமாக தோண்டி அமர்ந்திருக்கும் மாணவர்களின் மன உறுதியைப்பாராட்டி அவர்கள் அனைவருக்கும் எனது கையால் ஊக்கப்பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது அ.இ.நா.பி கழகத்தினை எதிர்க்கட்சியினர் சிலர் ஆயி நாய்ப்பீ கழகம் என தவறாக உச்சரித்து ஏளனம் செய்வதை வண்மையாகக்கண்டிக்கிறேன்.

மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுனும் சிரித்த முகத்துடனும் வாழ்வதற்கு ‘சிரிப்பு மருந்து’ என்ற ஒரு சிறப்புத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

எனவே அன்பார்ந்த வாக்காளர்களே! நீங்கள் அனைவரும் வரும் தேர்தலில் நமது அ.இ.நா.பி கழகத்தின் சின்னமான சொம்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’

தேர்தலில் மணிப்பயலின் நா.பி கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

குண்டுசவுரி மாடியில் காய்ந்து கொண்டிருந்த தனது தாத்தாவின் கோவணத்தை உருவிக்கொண்டு வந்து மணிப்பயலுக்கு போர்த்தி விட்டு
‘மாண்புமிகு முதல்வர் மணிப்பயலுக்கு இந்த பொன்னாடையை அணிவிக்கிறேன்’ என வாழ்த்தினான்.

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ‘சிரிப்பு மருந்து’ தயாரிக்க விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டான் மணிப்பயல்.

அதன்படி விஞ்ஞானிகள் பல நாட்கள் போராடி மைதா மாவு போன்றதொரு சிரிப்பு பவுடரை கண்டுபிடித்தனர்.

சிரிப்பு பவுடர் விஞ்ஞானிகளால் மூட்டை மூட்டையாக உற்பத்தி செய்யப்பட்டது.

பின்னர் ஒருநாள் விமானம் மூலமாக தரையில் நடமாடிய மக்கள் மீது அந்த சிரிப்பு பவுடர் தூவப்பட்டது.

அந்ந மாவு மேலே பட்டவுடன் மக்கள் அனைவரும் வாய்விட்டுச்சிரிக்க ஆரம்பித்தனர். பவுடர் அதிகமாக பட்ட சிலர் தரையில் உருண்டு புரண்டு சிரித்தனர்.

டி.வி சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கிழவிகள் சோகக்காட்சி ஓடினாலும் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டே மூக்கை சிந்தியபடி அழுதனர்.

ரவுடி ஒருவனை என்கவுண்டரில் சிரித்துக்கொண்டே போலீசார் சுட்டனர் அந்த ரவுடியும் சிரித்துக்கொண்டே ‘அய்யோ!’ என்று அலறியபடி செத்துபோனான்.

இப்படியாக முதல்வர் மணிப்பயல் அவர்கள் நாட்டுமக்களுக்காக பல சாதனைகள் செய்து சிறப்பான ஆட்சி செய்ததாக கி.பி 3009 ல் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.