Sunday, February 28, 2010

வில் துளைக்கும் அம்புகள்





.....

பிஸ்டலை எடுத்து மேஜை மீது வைத்தான் ராஜா.

எதிரில் அமர்ந்திருந்த மார்ட்டின், மூர்த்தி மற்றும் பாபு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'நான் உங்களுக்காக எவ்வளவோ கொலை,கொள்ளைகளை பண்ணியிருக்கேன். பிரியாவை நான் சந்திச்சதுக்கப்புறம் எனக்கும் வாழ்க்கையோட இன்னொரு அழகான பக்கம் தெரிய ஆரம்பிச்சது.
நான் அந்த நிம்மதியான உலகத்தை தேடி போகப்போறேன். இனிமே என்னை தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்.'

'இதப்பாரு ராஜா. இதுவரைக்கும் நீ எங்களுக்கு பண்ணின உதவிகளுக்கு நன்றி. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறப்போ அதை நாங்க கெடுக்க விரும்பல. ஒரு நிமிசம் இரு.'

மூர்த்தி எழுந்துபோய் அருகிலிருந்த அலமாரியை திறந்து பணப்பெட்டியை எடுத்து ராஜாவிடம் நீட்டினார்.

'வாங்கிக்கப்பா. இதுல கொஞ்சம் பணம் இருக்கு. நீ உன்னோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க. போய்ட்டு வா.'

ராஜா பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு விருவிருவென அங்கிருந்து வெளியேறினான்.

......

குளிர்காற்று வேகமாக வீசியது. மேகம் கருக்கத் தொடங்கியது. ஓரிரு மழைத்துளிகள் முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கத் தொடங்கியதும் பல்சர் வேகத்தை அதிகரித்தான் ராஜா.

இடுப்பிலிருந்த செல்போன் அழைத்தது.

பிரியா பேசினாள்.

'என்னப்பா. நான் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு தயாரா இருக்கேன். சீக்கிரமா வர்றதா சொல்லிட்டு எங்க போய்ட்ட? சீக்கிரம் வாடா'

'வந்துகிட்டே இருக்கேன் செல்லம். இன்னும் அரைமணி நேரத்திலே வந்துடறேன்.'

இணைப்பை துண்டித்துவிட்டு செல்போனை சட்டைப்பையில் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது எதிரில் சாலை நடுவில் புதிதாய் முளைத்திருந்த சோதனைச் சாவடியை மிக அருகில் நெருங்கியிருந்தான்.

......

ஜீப் அந்த நள்ளிரவின் இருளை கிழித்துக்கொண்டு காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் ரமணன் ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னால் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த இரு போலீசாருக்கு மத்தியில் கைவிலங்குடன் ராஜா அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரிலும் இரண்டு போலீசார் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தனர்.

ரமணன் கேட்டார்.

' என்ன தம்பி. அமைதியா வர்ற? உன்னை எங்க கூட்டிகிட்டு போறோம்னு தெரியுமா?'

'தெரியும். என்கவுன்டர்ல போட்டுத் தள்றதுக்கு.'

'ஆகா. புத்திசாலி பையன்தான் நீ. அதனாலதான் மார்ட்டின் ஐயா உன்னை இவ்வளவு நாளா வேலைக்கு வெச்சிருந்திருக்காரு. ஆனா நீ அவரை விட்டு விலகிப்போறதுல அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஏன்னா அவங்க மூணு பேரோட அத்தனை ரகசியங்களும் தெரிஞ்சவன் நீ. பிற்காலத்துல அவங்களுக்கு ஆப்பு வெச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அவங்களே உன்னை போட்டுத் தள்ளியிருப்பாங்க. ஆனா நீ ரொம்ப நாள் அவங்களுக்கு விசுவாசமா இருந்ததால அவங்களுக்கு மனசு வரலை. அதனாலதான் அந்த பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சி இருக்காங்க.'

ஜீப் பாதையிலிருந்து விலகி புதர்களுக்கிடையில் பயணித்து மரங்களடர்ந்த ஒரு பகுதியில் கிரீச்சிட்டு நின்றது.

ஜீப்பிலிருந்து குதித்தார் ரமணன். இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவி உள்ளங்கையில் வைத்துக்கொண்டார்.

'கான்ஸ்டபிள் அவனை இழுத்துகிட்டு வாங்கய்யா.'

ராஜா கைவிலங்குடன் கீழே இறக்கப்பட்டான்.ஜீப் விளக்குகள் அணைக்கப்பட்டன.

'கான்ஸ்டபிள் ரெண்டு பேரு ஜீப் பக்கத்தில நில்லுங்க. ரெண்டுபேரு என்னோட வாங்க.' என்றபடி ராஜாவின் சட்டைக்காலரை பிடித்து தள்ளியபடி ஒரு அடர்ந்த புதருக்கு அருகில் அவனை இழுத்துச்சென்றார் ரமணன்.

நிலவு தேய்ந்துபோய் மிகக்குறைவான வெளிச்சத்தினை பூமியின் மீது பொழிந்துகொண்டிருந்தது.

'கான்ஸ்டபிள் அவன் கைவிலங்கை அவிழ்த்துவிடுய்யா. பாவம் சாகப்போறப்ப சுதந்திரமா சாகட்டும்.'

கை விலங்கு அவிழ்க்கப்பட்டது.

'நீங்க ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க.'

அங்கேயே இரு கான்ஸ்டபிள்களையும் தடுத்து நிறுத்திய ரமணன் ராஜாவின் பின்னந்தலையில் கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தியபடி அவனை அடர்ந்த இருளில் தள்ளிக்கொண்டு சென்றார்.

.....


ஜீப் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிள் சந்தானம் அருகிலிருந்த கான்ஸ்டபிள் முருகனிடம் தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டை பற்றவைத்தபோது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

'யோவ் முருகா. நம்ம இன்ஸ்பெக்டர் அந்தப் பையனோட கதையை முடிச்சிட்டார் போலிருக்கு. கிளம்பவேண்டியதுதான் ஜீப்ல ஏறு.' என்றபடி பற்றவைத்த சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு நிமிர்ந்தபோது துப்பாக்கிகள் மீண்டும் வெடித்தன. சிறிது நேரத்தில் காட்டுப்பகுதியிலிருந்து சிலபேர் ஜீப் நின்ற திசை நோக்கி சருகுகளை மிதித்துக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது.

சந்தானமும் முருகனும் பதட்டமாகி துப்பாக்கியை எடுத்து சத்தம் வரும் திசை நோக்கி திருப்பினார்கள்.

இன்ஸ்பெக்டர் காலில் ரத்தம் வழிய, அவருடன் சென்ற இரு கான்ஸ்டபிள்களும் அவரை தூக்கிக்கொண்டு ஜீப் நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர்.



'யோவ் சந்தானம் ஜீப்பை சீக்கிரமா எடுத்து ஆஸ்பத்திரிக்கு போ. இன்ஸ்பெக்டர் சார் காலில கீழ கிடந்த மரக்கட்டையால அடிச்சிட்டு அவன் தப்பிச்சிப்போயிட்டான்.'

ஜீப் ரமணனை ஏற்றிக்கொண்டு வேகமாக பறந்தது.

.......

(தொடரும்)

3 comments:

  1. எப்படியோ ராஜா தப்பிச்சுட்டான் ..
    அடுத்த எபிசொட்ல என்ன சோதனையோ ?

    ReplyDelete
  2. தலைப்பு நல்லாயிருக்கு... கதையும். :)

    ReplyDelete
  3. mani how r u iam really exciting abt u r growth

    ReplyDelete