செவ்வாய், 1 நவம்பர், 2011

மூளை இருக்கா தலைவா?


சாவதானிகள் எனப்படுவோர் ஒரே நேரத்தில் 10 வேலைகள் செய்யும் திறமை பெற்றவர்கள் எனக் கூறுவார்கள்.உண்மையிலேயே அது சாத்தியமா?

கம்ப்யூட்டர் மொழியில் இதனை Multi Tasking என்று சொல்லப்படுகிறது.




அதாவது ஒரே நேரத்தில் பல செயல்கள் கம்ப்யூட்டரில் நடைபெறுவதை Multi Tasking எனக்கூறுகிறோம்.

இந்த Multi Tasking வசதி ஆரம்பகால Operting Systems - களில் கிடையாது. உதாரணமாக DOS-(Disk Operating System) எனும் Operting System ல் ஒரு நேரத்தில் ஒரு செயல் மட்டுமே நடைபெறும். அதாவது ஒரு Document டைப் செய்துகொணடிருக்கும்போது வேறு எந்த செயலும் நடைபெற முடியாது. இது போன்ற Operting System களை Single Tasking Operting System என்கிறோம்.

தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து Operting System (Windows XP, Linux etc..) - களிலும் Multi Tasking வசதி உள்ளது;. இவ்வகை Operting System களை Multi Tasking Operting System என்கிறோம்.

அதாவது Media Player ல் ஒரு பாடலை ஒலிக்கவிட்டுக்கொண்டே word ல் எதாவது டைப் செய்துகொண்டிருக்கலாம். அதே நேரத்தில் Virus களை தேடிக்கண்டுபிடித்து அழிக்கும்படி Antivirus Software ஐ முடுக்கி விடலாம். பின்னனியில் ஏதாவது ஒரு Document அச்சிடுவதற்காக Printer க்கு அனுப்பப்படலாம்.


இச்செயல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில்(Concurrently) நடைபெறுவதுபோலத் தோன்றினாலும் அவ்வாறு ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை என்பதே உண்மை. அதாவது அனைத்து செயல்களும் சிறிய கால இடைவெளிகளில் மாறி மாறி சிறிது சிறிதாக நிறைவேற்றப்படுகிறது.இச்செயலை Time Slicing என்கிறோம்.

உதாரணமாக ஓட்டலில் ஒரே சர்வர் அனைத்து டேபிளிலும் அமர்ந்திருப்பவர்களுக்கும் மாறி மாறி தேவையானவற்றை வழங்கி அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்கிறார்.அதே நேரத்தில் ஒரு டேபிளுக்கு சேவை செய்யும்போது மற்ற டேபிளில் அமர்ந்திருப்பவர்கள் சிறிது நேரம் காந்திருக்க நேரிடுகிறது.

கம்ப்யூட்டரிலும் அதே போன்ற செயலே நடைபெறுகிது. ஆனால் கம்ப்யூட்டர் வேகமாக இயங்குவதால் அனைத்து செயல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவது போலத் தோற்றமளிக்கிறது.இவை Single Core Processor பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் நடைபெறும் செயல்களாகும்.

ஆனால் தற்போது புதிதாக வந்திருக்கும் Dual Core processor களில் உண்மையிலேயே இரண்டு செயல்பாடுகள் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ஏனெனில் Dual Core processor கள் ஒரே Chip க்குள் இரண்டு processor களைக் கொண்டுள்ளன. அதனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட செயல்களை செய்யும் திறனை கம்ப்யூட்டர் பெறுகிறது.Intel தயாரித்துள்ள புதியவகை processor களான Core 2 Duo வகைகள் ஒரே Chip க்குள் இரண்டு processor களைக் கொண்டிருந்தாலும் Dual Core processor களை விட வேகம் மிகுந்த மேம்படுத்தப்பட்டprocessor களாகும்.
Quad Core வகை processor கள் Chip க்குள் நான்கு processor களைக் கொண்டுள்ளன. எனவே இவ்வகை processor கள் Single Core Processor களை விட நான்கு மடங்கு வேகமாகச் செயல்படும்.
மனித மூளையானது Single Core Processor போன்று செயல்படுகின்றன. அதாவது ஒரு மனிதனால் ஒரு நேரத்தில ஒரு செயலை மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 1.5 கிலோ கிராம் எடையும், சுமார் 149000 கிலோமீட்டர் முதல் 176000 கிலோ மீட்டர் நீளம் வரையிலான நரம்பிழைகளைக்கொண்ட மனித மூளையின் பெருமூளை(cerebral) மற்றும் சிறுமூளை(cerebellum) ஆகிய அத்தனை சமாச்சாரங்களும் வெறும் 12 Watts சக்தியில் இயங்குவதால் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்யமுடியாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

உதாரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் வாகனம் ஓட்டும் நபர் ஒரே நேரத்தில் வலப்புறமாக தன்னைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும், இடப்புறமாக தான் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையையும் மிகச்சரியாக கூறமுடியாது. ஏனெனில் அவர் தனது கவனம் முழுவதையும் தனது வாகனத்தைச் செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்.

மொபைல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டும்போது நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. அதனால் அந்நேரத்தில் கண்ணில் எதிர்ப்படும் வாகனங்கள் பற்றிய அறிவோ காதை வந்தடையும் வாகனங்களின் ஒலி பற்றிய விழிப்புணர்வோ மூளையைச் சென்றடைவதில்லை. அதனாலேயே பல விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே..

நமது மூளையானது Multi Tasking திறமை கொண்டது அல்ல என்பதை உணர்ந்து...




வாழ்க்கையில்..
சாலையில் பயணிக்கையில்..
உன் கையில் செல்...
தவிர்த்து விட்டுச் செல்!

......

வியாழன், 20 அக்டோபர், 2011

பலன் தரும் பாட்டி வைத்தியம் -2






50 கிராம் வெள்ளைப்பூண்டு மற்றும் இஞ்சி 50 கிராம் எடுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் பெரிய வெங்காயம் 25 கிராம், சிறிய வெங்காயம் 10 கிராம் சேர்த்து மிக்சியில் மாவுபோல அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் குதப்பிவிட்டு அப்படியே முழுங்கிவிடவும்.அத்துடன் சிறிது வேப்பெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி தலைமுடி மற்றும் கை,கால்களில் தடவிக்கொண்டு சென்றால்....



எவ்வளவு கூட்டத்திலும் நீங்கள் நசுங்காமல் தாராளமாக பயணம் செய்யலாம்.



.....

பலன் தரும் பாட்டி வைத்தியம் - 1



100 மில்லி லிட்டர் வேப்பெண்ணெயை வாணலியில் இட்டு சூடுபடுத்தி,கொதிநிலைக்கு வந்தவுடன் அத்துடன் 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் சூடுபடுத்தி அத்துடன் சிறிது பெருங்காயப் பவுடர் லேசாக தூவி வாணலியை இறக்கி வைத்து ஆற வைக்கவும்.இரவு உறங்குவதற்கு முன் வாணலியிலிருந்து இந்த கலவையை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால்..........


கொசு கடிக்காதுங்க!

.....

ஞாயிறு, 5 ஜூன், 2011

தே.மு.தே.பி








பின் குறிப்பு :

தே.மு -தேர்தலுக்கு முன்.

தே.பி - தேர்தலுக்குப் பின்.



.....

புதன், 18 மே, 2011

2G சுட்டதடா!





2G சுட்டதடா கை விட்டதடா!
2G சுட்டதடா கை விட்டதடா!

ஆய்வு கெட்டதடா ஓய்வு கிட்டுதடா!
ஆய்வு கெட்டதடா ஓய்வு கிட்டுதடா!

தேர்தல் முடிவு வந்த பின்னால்
திரு திருன்னு முழிக்குதடா!

(2G சுட்டதடா...)

ஆரவாரப்பேய்கள் 58 ம் ஓடி விட்டதடா!
5 மட்டும் மீண்டு வந்து மிரண்டு நிக்குதடா!

மாங்கனிகள் 27 ம் மட்கிப் போனதடா
3 மட்டும் கனிந்து வந்து முக்கி நிக்குதடா!

சிறுத்தை 10 ம் சீற்றத்துடன் கலைந்து போனதடா!
தேர்தல் காட்டில் அத்தனையும் தொலைந்து போனதடா!

கொள்ளுப் பேரன் பேத்தியெல்லாம் கோபம் கொள்ளுதடா!
பதவியின்றி அத்தனையும் பதறி நிக்குதடா!


மஞ்சள் துண்டு வெளுத்துப் போயி வெள்ளை வந்ததடா!
காங்கிரசால் கனிமொழிக்கு தொல்லை வந்ததடா!

போயஸ் கோட்டம் கனவில் வந்தால் பொறி கலங்குதடா!
விஜயகாந்து தம்பியை நினைச்சு விழி கலங்குதடா!

கடிதம் எழுதிய எந்தன் கைகள் ஓய்வு கொண்டதடா!
மனம் 2G 2G 2G என்று கடுப்பு கொள்ளுதடா!


.....

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

தத்து(பித்து)வம்!





அருகில் தூங்குபவர் விடும் குறட்டையிலிருந்து தப்பிக்க உங்கள் காதுகளைப் பொத்திக்கொள்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் குறட்டை விடுபவர் வாயையும் மூக்கையும் நீங்கள் பொத்தினால் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவரக்கூட உங்களுக்கு உரிமையில்லை.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

2ஜி..சோனியாஜி...கருணாஜி..கனிமொழிஜி...அடச்சீ!

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தங்கபாலுவின் காமெடி கலக்கல்!

திங்கள், 18 ஏப்ரல், 2011

யூத்ஃபுல் விகடனில் உங்கள் படைப்புகள்..!







ஹாய் யூத்ஸ்..!

இணையத்தின் சகல இடுக்குகளிலும் இளமை நிரம்பி வழிகின்ற காலமிது. உலகத் தமிழர்களின் முகவரியாக ஜொலிக்கிற விகடன் அமைத்துத் தந்திருக்கும் மேடைதான் இந்த 'யூத்ஃபுல் விகடன்' பல்கலைத் தளம். இது ஓர் இலவச தளம். உங்கள் படைப்புத் திறமைக்கான களம்.

வார வலையிதழான யூத்ஃபுல் விகடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புதுப்பிக்கப்படும்.

இதில் நீங்கள் எதைப் பற்றியும் எழுதலாம். எந்த எல்லையும் இல்லை. கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என இலக்கியப் படைப்புகளில் சடுகுடு ஆடலாம். உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை மலிந்து கிடக்கும் உன்னத படைப்புகளையும் அலசலாம்.

கல்வி, வேலைவாய்ப்புகள் சார்ந்த தகவல்களை அனுப்பலாம். உங்கள் பணி, தொழில், துறை சார்ந்த அனுபவத்தை பிறர் பயனுறும்படி கட்டுரைகள் தரலாம். உங்கள் பார்வையில் சமூக அக்கறை சார்ந்த கட்டுரைகளையோ ஆக்கங்களையோ அனுப்பலாம்.

படைப்புகளை அனுப்ப விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

* யூத்ஃபுல் விகடன் தளத்துக்கு படைப்புகளை youthful@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Wordpad அல்லது Notepad மூலம் இணைத்து அனுப்பலாம்.

* புதிய படைப்புகளுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும். அனுப்பப்படும் படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளியாகாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

* இளைய சமுதாயத்துக்கு பயன் தரக்கூடிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு www.vikatan.com முகப்பு பக்கத்தில் இணைக்கப்படும்.

* படைப்பாளிகள் தங்களது படைப்புகளுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பலாம். (ஒருமுறை மட்டும் அனுப்பினால் போதுமானது)

* இளம் படைப்பாளிகள் மட்டுமின்றி, இளைய சமுதயாத்துக்காக எந்த வயதினரும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம்.

* படைப்புகளை அனுப்புவோர் தங்களது பெயர், வயது, கல்வி, முகவரி, செல்பேசி எண்கள் முதலியன அடங்கிய சிறு சுய விவர குறிப்பை இணைக்க வேண்டியது அவசியம். (ஒரு முறை மட்டுமே அனுப்பினால் போதுமானது)

* புகைப்பட தொகுப்புகளை வெளியிட விரும்புவோர் மின்னஞ்சலில் இணைத்தோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பலாம்.

* குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன் ஆக்கங்களை சி.டி அல்லது டி.வி.டி. வடிவில் "யூத்ஃபுல் விகடன், விகடன் டாட் காம், 757, அண்ணா சாலை, சென்னை - 600002" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

* யூத்ஃபுல் விகடனில் வெளியாகும் படைப்புகளின் உரிமை முழுதும் அந்தந்த படைப்பாளிகளுக்கே உரியது.

* படைப்பு வெளியானவுடன், அதுபற்றி விவரம் மின்னஞ்சல் மூலம் ஓரிரு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.


....

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

போடுங்கய்யா ஓட்டு!





தேர்தலைத் திருவிழா ன்னு சொல்லுவாங்க.

ஆனா அந்த திருவிழாவில் வெட்டப்படும் பலியாடுகள் யாருன்னா நம்ம அப்பாவி வாக்காளன்தாங்க.

தேர்தலிலே நிற்கிற வேட்பாளர் கஞ்சக் கருமிப் பயலா இருந்தாலும் தேர்தல் நேரத்தில மட்டும் கொடை வள்ளலா மாறிடுவாரு.

நேத்து வரைக்கும் நடுரோட்டுல வாந்திபேதி எடுத்து வயித்தால போயி மயங்கி கிடந்த வக்கத்துப் போன வாக்காளனை கண்டுகொள்ளாமல் போன நம்ம கட்சி வேட்பாளரு இப்ப வேலை வெட்டிக்கு போகாம வீட்டுக்குள்ள ஒரு ரூவா அரிசியை பொங்கி தின்னுபுட்டு ஒய்யாரமா குந்திகிடக்கிற அவனை போயி சுகம் விசாரிச்சு சுக்குகாபி போட்டு கொடுப்பாரு.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் ஒரு மாத காலத்துக்கு ரெண்டு கைகளையும் பெவிகால் போட்டு ஒட்டுனது மாதிரி கும்பிட்டுகிட்டே திரிவாரு. குடும்பத்தோட தூங்கும்போது கூட கும்பிட்டுகிட்டே குறட்டைவிடுவாரு.

தேர்தல் நேரத்தில கட்சிக்காரனுங்க கொடுக்கும் வாக்குறுதிகளைக் கேட்டாலே தலையைச்சுத்துது.

'நாங்கள் ஆடசிக்கு வந்தால் அரசாங்க செலவில் எல்லா ஊர்களிலும் அன்ன சத்திரம் கட்டி அனைத்து குடும்பங்களையும் தங்கவைத்து மூன்று வேளையும் ஓசியில் உணவு வழங்குவோம்.

காலை எழுந்தவுடன் கடுங்காபியுடன் காரமும் வழங்கப்படும்.

காலை சிற்றுண்டியாக குண்டான் நிறைய குழம்பு சோறும் குஷ்பு இட்லியும் வழங்கப்படும்.

மதிய உணவாக மாங்காய் வடவத்துடன் மணமணக்கும் சாம்பார் சாதமும்,

மாலையில் மக்காச்சோளமும் அவித்துக்கொடுக்கப்படும்.

அத்துடன் பிரமாதமான பில்டர் காபி வரிசையில் நிற்க வைத்து வாயில் ஊற்றப்படும்.

இரவு உணவாக இருட்டுக்கடை அல்வாவும் இடியாப்பமும் வழங்கப்படும்.

ஓசியில் தின்னு விட்டு ஒய்யாரமாக ஓய்வெடுப்பதற்கு ஓலைப்பாய் பின்னித்தரப்படும்.

டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு வாந்தியெடுத்து, வயலில் உருண்டு கிடப்பவர்களுக்கு 'சிறந்த குடிமகன்' விருதாக கோப்பையுடன் கோழி சப்பையும் குவார்ட்டரும் வழங்கப்படும்.

போதையில் பொண்டாட்டியை புரட்டியெடுப்பவர்களுக்கு 'உத்தமபுருசன்' பட்டத்துடன் ஊறுகாயும் வழங்கப்படும்.

வருடத்தில் அதிகமாக வாங்கி குடித்து, அரசுக்கு வருமானத்தை பெருக்கித் தரும் பொறுக்கிப்பயல்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பட்டம் வழங்கப்படும்.


குடிபழக்கம் இல்லாத தேசதுரோகிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

திருடர்கள் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் திருடர்களுக்கு ஆண்டொன்றுக்கு 420 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு அரசு மானியத்துடன் தங்கத்தில் திருவோடு வழங்கப்படும்.

வேலையற்ற இளைஞர்கள் வெட்டிப்பேச்சு பேசி காலைத்தைப் போக்க குட்டிச்சுவர்கள் கட்டிக்கொடுக்கப்படும்.

கச்சத்தீவை கயிறுகட்டி இழுத்துவந்து இந்தியாவோடு இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.'

இப்படியெல்லாம் வாகனத்தில் நின்றபடி வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளரை நம்ம மக்கள் வாயைப்பொளந்து கேட்பாங்க.

அதே ஆச்சரியத்தோட போயி பட்டனைக் குத்தி அவனுக்கு பதவியை கொடுத்துபுட்டு பாழாய்ப்போயிடுவாங்க.

நேத்துவரைக்கும் மணல்கொள்ளையடிச்சு,சாராயம் வித்து போலீஸ்காரன் கிட்ட செறுப்படி வாங்கின,மூணாம் கிளாஸ் பெயிலான நம்ம வேட்பாளர் தேர்தல் நேரத்திலே கஞ்சி போட்ட வெள்ளைச்சட்டையும் வேட்டியும் கட்டிகிட்டு மைக்கைப் பிடிச்சு பொளந்து கட்டுவாரு.

'நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.... அதாவது இதன் மூலம் உங்களுக்கெல்லாம் ஒன்று கூறிக்கொள்ள நான் விரும்புவது என்னவென்றால்... இதைப்பற்றி திருவள்ளுவர் என்ன சொன்னார் என்றால்.. அதாவது இதை நான் ஏன் உங்களுக்கெல்லாம் கூறுகிறேன் என்றால்... ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ரெண்டிலே... சுமார் ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்தது என்றால்.... இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு நான் ஒன்றும் சொல்லத்தேவையில்லை. ஏனென்றால் நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்பதாலும் அனைத்தும் உங்களுக்கு தெரியும் என்பதாலும் மேற்கொண்டு அதைப்பற்றி உங்களுக்கு நான் கூறவேண்டிய தேவையில்லை என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.'

கடைசி வரைக்கும் என்னத்தை சொல்ல வந்தார்னு அவருக்கும் தெரியாது. கேட்டவனுக்கும் புரியாது.

தேர்தல் நாள் அன்னைக்கு கட்சிக்காரனுங்க ரொம்ப பாசத்தைப் பொழிவானுங்க.

குத்தவெச்சி உட்கார்ந்து வெத்தலையை குதப்பிகிட்டு கிட்டு இருக்கிற கிழவிகளை குண்டுகட்டா தூக்கிகிட்டு போற நம்ம கட்சிக்கார பயலுங்க, எலக்சன் பூத்துக்குள்ள கொண்டுபோயி கிழவி கையைப்பிடிச்சி 'இந்த பட்டன்ல குத்து ஆத்தா' ன்னு சொல்லி இவனுங்களே பட்டனை குத்திபுட்டு கிழவியை வெளியில தூக்கி கடாசிட்டு போயிடுவானுங்க.

சுள்ளுன்னு அடிக்கிற வெயிலிலே வீட்டுக்கு திரும்பி வரும் கிழவிகள் சுருண்டு விழுந்து சுடுகாட்டுக்கு கொண்டுபோற நிலைமைக்கு ஆளாயிடுவாங்க.

தேர்தல் முடிவு அறிவிக்கபட்டதும் வெற்றிபெற்ற கட்சிக்காரனுங்க வெடியை வெடிச்சு எதிர்க்கட்சிக்காரனோட வேதனையைக் கிளப்புவானுங்க.

தோற்றுப்போன கட்சிக்காரனுங்க தோளில் கிடக்கிற துண்டை எடுத்து தலைமேல போட்டுகிட்டு அடையாளம் தெரியாம ஊருக்குள்ள நடமாடுவானுங்க.

தேர்தலிலே தோற்றுப்போன கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணின நடிகர்கள் பீதியில் பேதிபோயி நாதியத்துப் போயிடுவானுங்க.

யாரு வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் பட்டனைக் குத்தின பாவிமக்கள் தன்னோட பழைய சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட காசில்லாம பஞ்சத்துல அடிபட்ட பரதேசி ஆயிடுவாங்க.


இதன் மூலம் உங்களுக்கெல்லாம் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால்..

தயவுசெய்து தேர்தலிலே ஓட்டுப்போடுங்க...!

'போடுங்கய்யா ஓட்டு! எந்த கண்றாவி சின்னத்தையாவது பார்த்து!'

என்று கூறி இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!



.......

சனி, 19 மார்ச், 2011

தேர்தல் (மறை)முகம்-4






வல்லரசு சூழலில்
ஒளிரும்
ஒளிநாடா?


இல்லை..

வானளாவிய ஊழலில்
ஒழியும்
ஒழிநாடா?

என

இழிவாய்
இகழ வைத்தது...

நீரா ராடியாவின்
ஒலிநாடா!


...

தேர்தல் முகம்-3




தேர்தலில்..

வெற்றி பெற்றால்
அரசு செலவில்..
ஆகாய வழியில்..
அலைந்து திரிய..
தமிழ்நாடு!

அவமானமாய்
தோற்றுப்போனால்
அடுத்த தேர்தல்
வரும் வரை
அயர்ந்து தூங்க..
கொடநாடு!

...

தேர்தல் முகம்-2




அரசனும்
ஆண்டியாவான்
விலைஉயர்வு
சூழலிலே!

ஆண்டி மகன்
அரசனான்
இமாலய
ஊழலிலே!


....

தேர்தல் முகம்-1




சூத்திரத்தை...
சாத்திரத்தை
ஆத்திரமாய் எதிர்த்த
ஆவேசப் பகுத்தறிவு..
மஞ்சள் துண்டு
துவைத்துப் போட
கோபாலபுரம் விரைவு!

...

புதன், 10 நவம்பர், 2010

எழுப்புவோரை மிதிப்போம்!




சோம்பேறிகளைப் பத்தி ஒரு கதை எழுதணும்னு ரொம்பநாளா நெனைச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப அலுப்பா இருந்ததால எழுத முடியலை.

அந்தக்காலத்திலே சோம்பேறிகளுக்கு ரொம்ப மரியாதை கொடுத்திருக்காங்க.அதனாலதான் எல்லார் வீட்டிலேயும் சோம்பேறிகள் படுத்து உருள சொகுசான திண்ணை கட்டி வெச்சியிருக்காங்க.

வசதிபடைச்ச இன்னும் சிலபேர் சோம்பேறிகள் ஓய்வெடுப்பதற்காக தங்களோட சொந்த செலவிலேயே சத்திரம் கட்டிவெச்சி தரித்திரத்தில்... மன்னிக்கவும் சரித்திரத்தில் இடம்பிடிச்சிருக்காங்க.



ஒரு ஊர்ல லேசி கான் ன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் ஊர்ல இருக்கிற சோம்பேறிகள் எல்லோரையும் சேர்த்து 'ஓய்வு எடுப்போர் நலச்சங்கம்' னு ஒரு சங்கம் ஆரம்பிச்சான்.

சங்கத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

கொட்டாவி விடக்கூட அலுப்பு படுவார்கள் சிலர்.

மூக்கின்மேல் உட்கார்ந்திருக்கும் ஈயை விரட்ட ஆள்தேடுவார்கள் சிலர்.

கழன்று விழும் பேண்டை கையால் பிடிப்பதற்கு உதவி தேடுவார்கள் சிலர்.

கனிந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன அலுப்புபட்டு ஜுஸ் போட்டு குடிப்பவர்கள் சிலர்.

மாதாமாதம் சங்க கட்டிடத்துல கூட்டம் நடத்தினான். ஆனா அலுப்பா இருக்குதுன்னு சொல்லிட்டு சங்க உறுப்பினர்கள் யாருமே கூட்டத்துக்கு வர்றது இல்லை.

தூக்கக் கலக்கத்துடன் வந்திருந்த ஒருசிலரும் வந்தவுடனே கக்கத்தில் சுருட்டி வெச்சிருந்த பாயை விரிச்சிப்போட்டு ஆளுக்கொரு மூலையிலே அயர்ந்து தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சங்கக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1.சங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமான அஞ்சால் அலுப்பு மருந்தை உடனே தடை செய்ய வேண்டும்.

2.மருத்துவமனைகளில் குளுகோஸ் பயன்படுத்தி நோயாளிகளை சுறுசுறுப்பாக்குவதை உடனே நிறுத்தவேண்டும்.

3.நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்க விடாமல் தடை ஏற்படுத்தும் மின்தடையை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

4.சோம்பல் காரணமாக சாலையோரத்திலும் பூங்காவிலும் சுருண்டு தூங்குபவர்களை மயக்கத்தில் விழுந்ததாக நினைத்து சோடாவை மூஞ்சியில் பீய்ச்சியடித்து எழுப்பி தொந்தரவு செய்பவரை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

5.அதிகாலையில் பெல் அடித்து தூக்கத்தை கலைக்கும் பால்காரர்கள் மற்றும் பேப்பர் போடுபவர்களின் வாகனங்களை உடனே பறிமுதல் செய்யவேண்டும்.

6. தூக்க மாத்திரை உற்பத்தியை அதிகரித்து சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.

7. குறட்டை சத்தத்தினை தேசிய கீதமாக அறிவிக்கவேண்டும்.

8. அரசாங்கமானது, சிறந்த சோம்பேறிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். அதையும் அவர்களை வெயிலில் அலையவிடாமல் அவர்களது வீட்டிற்கே நேரடியாகச்சென்று வழங்கவேண்டும்.

9. அதிகாலை நேரம் 5 என்பதை மாற்றி 11 மணியாக அறிவிக்க வேண்டும்.

10. அதிகாலையில் கூவும் சேவல்களுக்கு மரணதண்டனை வழங்கி, பின்னர் அவற்றை வறுத்து, கடிப்பதற்கு எளிமையாக இருக்கும் லெக் பீஸ் மட்டும் சங்கத்து உறுப்பினர்களுக்கு வழங்குமாறும், அதையும் சம்பளத்திற்கு ஆள் வைத்து ஊட்டி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.



ஒருநாள், சங்கத்தலைவர் லேசி கான் , லேசி ராமன் என்கிற தொண்டனை கூப்பிட்டு தனது கன்னத்தின் மேலே உட்கார்ந்து கடித்துக்கொண்டிருக்கும் கொசுவை விரட்ட உத்தரவிட்டான்.

அதற்கு அந்த தொண்டன் 'கொசுவை அப்புறமா விரட்டிக்கலாம். முதல்ல என் காலை நக்குற நாயை தயவு செய்து விரட்டிவிடுங்க தலைவரே' ன்னு கெஞ்சினான்.

மிரண்டு போன சங்கத்தலைவர், தொண்டன் தன்னை மிஞ்சிய சோம்பேறியாய் இருப்பதைக்கண்டு வியந்து 'நீதாண்டா இனிமேல் இந்த சங்கத்துக்கு தலைவர்'ன்னு சொல்லி தன்னோட பதவியை ராஜினாமா செய்தான்.

உடனே அந்த தொண்டன் 'எனக்கு அந்தபதவி வேண்டாம் தலைவரே' என்று பணிவுடன் சொன்னான்.

'எண்டா அப்படி சொல்லுற?' என்று கேட்டார்.

'அதுவந்து தலைவரே! இப்ப நான் தலைவர் ஆயிட்டா இப்ப நான் எழுந்திருச்சி வந்து உங்க இருக்கையில அமரணும். எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குது. மன்னிச்சுக்கங்க'

அதிர்ச்சியடைந்த சங்கத்தலைவர் ஆனந்தக்கண்ணீர் மல்க, கீழே குந்தியிருந்த அந்த தொண்டனை கட்டியணைத்து பாராட்டிவிட்டு குண்டுகட்டாக அவனை தூக்கி தலைவர் இருக்கையில் அமரவைத்துவிட்டு தான் தரையில் அமர்ந்துகொண்டார்.

புதிய சங்கத்தலைவர் லேசி ராமன் தலைமையில் சங்கம் மேலும் சிறப்பாக வளர்ச்சியடைந்து சங்கக்கட்டடம் ஆழ்ந்த தூக்கக்கலக்கத்துடன் அமைதியானது.

செவ்வாய், 2 மார்ச், 2010

வில் துளைக்கும் அம்புகள் -3

பகுதி -1

பகுதி -2

பகுதி -3



இரண்டு நாட்கள் கழித்து.....

காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தார் ரமணன்.

செல்போன் அழைத்தது.

'ரமணன். நான் மார்ட்டின் பேசறேன். உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசணும்.'

'சொல்லுங்க சார்.'

'ராஜா இறந்துட்டதா இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் எனக்கு போன் பண்ணி சொன்னார். அடுத்த நிமிசம் இன்னொரு போன் வந்தது. என்னைக் கொல்லப்போறதா ஒருத்தன் பேசறான். குரல் அப்படியே ராஜாவோடது மாதிரியே இருந்தது. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நீ கிளம்பி இங்க நேரா வா.'

சற்று யோசித்த ரமணன்,

'சார். நான் இன்னைக்கு ராத்திரி 11 மணிக்குமேல உங்க வீட்டுக்கு வர்றேன். நீங்க மட்டும் தனியா இருங்க. நான் வர்ற விசயம் யாருக்கும் தெரியக்கூடாது. என் கிட்ட ஒரு திட்டம் இருக்கு'

'என்ன திட்டம் தம்பி?'

'அதை நான் நேர்ல வந்து சொல்றேன்.'

.........

ரவு 11 மணி.

நீலாங்கரை மார்ட்டின் பங்களா.

'என்ன தம்பி? வந்து ரொம்ப நேரமாச்சு. எதையோ யோசிச்சி கிட்டு இருக்கீங்க?'

'சார் மேலிடத்திலே பேசி என்னோட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து பண்ணி திரும்பவும் என்னை வேலையில அமர வெச்சதுக்கு நன்றி சார்.'

'இப்ப இருக்கிற சூழ்நிலையில நீ இந்த கேஸை கையாள்றதுதான் எனக்கு பாதுகாப்பு. அதனாலதான் உனக்காக பேசி வேலையில அமர வெச்சேன்.'

'சார். உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி.'

'கேளுங்க தம்பி'

'எதுக்கு சார் பாபுவை கொலை பண்ணுனீங்க?'

அதிர்ச்சியுடன் எழுந்தார் மார்ட்டின்.

'என்ன தம்பி உன்னோட போலிஸ் புத்தியை என்கிட்டேயே காட்டறியா?'

'ஒரு நிமிசம் அமைதியா உட்காருங்க சார். உங்களை எல்லாப்பிரச்சினையிலேயிருந்தும் விடுவிக்கத்தான் நான் இப்ப வந்தேன். நீங்க எந்த விசயத்தையும் மறைக்காம சொன்னாத்தான் நான் உங்களை காப்பாத்த முடியும்.'

'நான் எதுக்கு கொலை பண்ணனும் என்னோட நண்பனை?'

'சார்! பாபு கடைசியா உங்களுக்குத்தான் போன் பண்ணியிருக்கார். அதுக்கப்புறம் இரண்டு மணி நேரம் மட்டுமே அவரோட சிம் கார்டு வேலை செய்திருக்கு.'

'அதனால நான்தான் அவனை கொலை செய்தேன்னு எப்படி சொல்லலாம்?'

'சார். அதை வெச்சு மட்டும் சொல்லவில்லை. ஒரு நிமிசம் என்னோட வாங்க.'

இருவரும் வெளியே வந்தனர்.

வெளியே வராண்டாவில் நின்றிருந்த மார்ட்டின் காரின் டிக்கியின் கதவை திறந்தார் ரமணன்.

'இதோ பாருங்க. உங்க காரோட டிக்கியில அந்த கம்பியில ஒரு பிசிறு துணி தொங்குதே. அந்த துணி பாபு கடைசியா போட்டிருந்த சட்டையில் கம்பி மாட்டி கிழிஞ்ச துணி. நான் உங்க வீட்டுக்குள்ளே வர்றப்ப ஒரு சந்தேகத்துக்காக இந்த காரோட டிக்கியை தூக்கிப் பார்த்தப்ப இந்த விசயம் தெரிஞ்சது. சரி வாங்க உள்ளே போய் உட்கார்ந்து பேசலாம்.'

உள்ளே சென்றதும் அமைதியாக சோபாவின் மீது அமர்ந்தார் மார்ட்டின்.

'மார்ட்டின் சார். உங்களை ஜெயில்ல தள்றதுக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை. நீங்கதான் கொலை பண்ணியிருக்கீங்கன்னு தெரியும். ஆனா எப்படின்னு தெரிஞ்சாத்தான் நான் உங்களை காப்பாத்த முடியும். தயவு செய்து எதையும் மறைக்காம என் கிட்ட சொல்லுங்க.'

மேஜை மீதிருந்த தண்ணீர் டம்ளர் வாயில் கவிழ்த்துவிட்டு பேச ஆரம்பித்தார் மார்ட்டின்.

'ஆமாம். ரமணன். நான் உங்க கிட்ட இப்ப சொல்லப்போற விசயத்தை வேற யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நீங்க என்னை இந்த சிக்கலில் இருந்து காப்பாத்துவீங்கன்னு நம்பித்தான் இதை சொல்றேன்.

நீங்க பாபுவை பெசன்ட் நகர் பீச்ல சந்திச்சு கொஞ்சம் நேரம் கழிச்சு பாபு எனக்கு போன் பண்ணினான். சொத்துக்காக என்னையும் பாபுவையும் கொல்றதுக்கு மூர்த்தி திட்டம் போட்டிருந்த தகவலை நீங்க சொன்னதா சொன்னான். அவன் பேசி முடிச்ச அப்புறம் கொஞ்சம் நேரத்திலே நான் இருந்த இந்த நீலாங்கரை பங்களாவுக்குள்ள என்னை கொலை பண்றதுக்காக ராஜா வந்துட்டான்.'

'என்ன சார் சொல்றீங்க? ராஜா இங்க வந்தானா?'

'ஆமாம் ரமணன். அவன் கத்தியோட என்னை நோக்கிப் பாய்ஞ்சப்ப நான் காவலுக்காக நிறுத்தி வெச்சிருந்த என்னோட ஆட்கள் அவனைப் பிடிச்சு அமுக்கிட்டாங்க. அப்புறம் அவனை கழுத்தை நெறிச்சு கொலை பண்ணினேன். அவனோட உடலை எங்க பசங்க காரில எடுத்துகிட்டு போய் தாம்பரத்திலே வீசிட்டு வந்துட்டானுங்க.'

'சார்! அப்ப ராஜாவை கொலை பண்ணினதும் நீங்கதானா?'

'ஆமாம். கொலை பண்ணி முடிச்ச கையோட எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. சொத்துக்காக பார்ட்னர்களை கொலை பண்ண மூர்த்தி போட்ட திட்டத்தை நாமே செய்தா என்னன்னு யோசிச்சுப் பார்த்தேன். மூர்த்தி ஏற்கனவே செத்துட்டான். அதனால மீதி இருக்கிற பாபுவையும் தீர்த்துக் கட்டிட்டு அவனை ராஜா கொலை பண்ணினதா செட்டப் பண்ணிடலாம்னு திட்டம் போட்டேன். ராஜா இறந்து போன விசயத்தை பாபு கிட்டே சொல்லாம அவனுக்கு போன் பண்ணி இங்கே வரவழைச்சேன். அவனை இங்கேயே துப்பாக்கியால சுட்டு சாகடிச்சேன். அப்புறம் நம்ம பசங்க அவனோட உடம்புல கல்லைக் கட்டி மெரினா கடல் பக்கமா படகுல கொண்டுபோய் கடல்ல தூக்கி வீசிட்டாங்க. ஆனா கயிறு எப்படியோ அவிழ்த்து கிட்டு பிரேதம் கரை ஒதுங்கிடுச்சு. ஆனா கொலை செய்யப்பட்ட நேரத்தை உடல் பரிசோதனையில கண்டுபிடிக்கலாம் என்கிற விசயத்தை நான் மறந்திட்டேன்.'

'நல்லவேளை நீங்க என்கிட்டே சொன்னீங்க. இந்த விசயத்தை வெளியில் தெரியாம அமுக்கிட வேண்டியது என்னோட பொறுப்பு.'

'அது சரி. போன்ல என்னை மிரட்டினவன் யாருன்னு தெரியலையே. அவனால எனக்கு திரும்பவும் ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு.'

'அவன் யாருன்னு கண்டுபிடிக்க ஒரு வாரம் அவகாசம் கொடுங்க. ஆனா அதுக்கு நீங்க ஒரு காரியம் செய்யணும்.'

'என்ன செய்யணும் தம்பி?'

'நீங்க தற்கொலை பண்ணிகிட்டதா ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு தலைமறைவாயிடுங்க. உங்களுக்கு போன் பண்ணி மிரட்டினவன் குழம்பிப்போய் அது நிஜமான்னு தெரிஞ்சிக்கிறக்கு முயற்சி பண்ணுவான். அதுக்குள்ள அவன் யார்னு கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிறலாம்'

சற்று யோசித்த மார்ட்டின் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

'மார்ட்டினாகிய நான் வாழ்க்கையில் என்னுடைய அருமை நண்பர்களை இழந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு நானே முழுமுதல் பொறுப்பு. - இப்படிக்கு , மார்ட்டின்.'

எழுதிய காகிதத்தை ரமணனிடம் நீட்டினார் மார்ட்டின்.

படித்துப்பார்த்த ரமணன், நிமிர்ந்து பார்த்து மார்ட்டினை நோக்கி புன்னகைத்தார்.

'அதான் லெட்டர் எழுதிட்டியே. அப்புறம் இன்னும் ஏன் சாகாம இருக்கே மார்ட்டின்.'

இடுப்பிலிருந்து உருவிய சைலன்சர் பொறுத்திய பிஸ்டலை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மார்ட்டினின் நெற்றிப்பொட்டில் சுட்டார் ரமணன்.

அதிர்ச்சியுடன் சடலமாக கீழே சாய்ந்தார் மார்ட்டின்.

மார்ட்டின் எழுதிய தற்கொலைக் கடிதத்தை அவரது உடல் அருகில் வீசிவிட்டு, பிஸ்டலை இறந்துபோன மார்ட்டினின் உள்ளங்கையில் திணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் ரமணன்.


..................

மிஷனர் அலுவலகம்.

கமிஷனர் சசிகுமார் முக்கிய கோப்புகளை புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

'சார். நாங்க உள்ளே வரலாமா?'

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் சசிகுமார்.

வாசலில் ரமணனும் பிரேம்நாத்தும் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர்.

'உள்ளே வாங்க'

அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் கமிஷனர் எழுந்து சென்று அறையின் கதவை சாத்திவிட்டு வந்தார்.

இருவரையும் கைகுலுக்கினார்.

'அருமையா திட்டத்தை செஞ்சு முடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.'

'சார். நம்மோட ரகசிய திட்டமான 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கை பற்றி எனக்கே குழப்பமா இருக்கு. கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா?' சந்தேகத்துடன் கமிஷனரை பார்த்துக் கேட்டார் பிரேம்நாத்.

'சொல்றேன். நாம இதுவரைக்கும் கொலை கொள்ளைகளை செய்துகிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலா இருந்த நூற்றுக்கணக்கான ரவுடிகளை என்கவுண்டர்ல போட்டுத்தள்ளியிருக்கோம். ஆனா ரவுடிகளோ ரவுடியிசமோ குறையவே இல்லை.

அதாவது நாம அம்புகளைத்தான் உடைத்தெறியறோமே தவிர அதை செலுத்திய வில்லை நாம மறந்திடறோம். வில்லை உடைச்சுப் போட்டுட்டா அம்புகள் செயலிழந்து போய் விடும்.'

'அதாவது ரவுடிகளை காலி பண்ணினாலும் அவர்களை உருவாக்குற பணக்கார அதிகார வர்க்கத்தை நாம நெருங்க முடியவில்லை. அதனால அவர்கள் உருவாக்குற ரவுடிகளை வெச்சே அவர்களை காலி பண்றதுதான் 'வில் துளைக்கும் அம்புகள்' என்கிற ரகசிய நடவடிக்கையோட நோக்கம்.

'இதை நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்கிற நம்பிக்கையான சிலரை மட்டுமே தேர்வு பண்ணி இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திகிட்டு வர்றோம். நம்ம டிபார்ட்மென்ட்ல உள்ள மற்ற ஆட்களுக்கு கூட தெரியாமத்தான் இந்த ரகசிய நடவடிக்கைகள் நடந்துகிட்டு இருக்கு.'

'அது சரி சார். மார்ட்டின் கும்பலை ஒழித்துக்கட்டிய நடவடிக்கையில என்னென்ன நடந்தது?'

ரமணன் இடைமறித்தார்.

'அதை நான் சொல்றேன். மார்ட்டின்,பாபு, மூர்த்தி மூணு பேரும் மதுரைக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவங்க. சுமார் முப்பது வருசத்துக்கு முன்னாடி அவங்க இளைஞர்களா இருந்த காலத்தில மூணுபேரும் சேர்ந்து அங்கேயிருந்த ஒரு கோயில் சிலையை திருட முயற்சி பண்ணி பொதுமக்கள் கிட்ட மாட்டிகிட்டாங்க. பொதுமக்கள் அவங்க மூணு பேரையும் அடிச்சு ஊரை விட்டே துரத்தி விட்டுடுச்சு.

அவனுங்க மூணு பேரும் சென்னைக்கு ஓடி வந்துட்டானுங்க. இங்க கள்ளக்கடத்தல் மாதிரியான சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதிச்சிட்டானுங்க.

அவனுங்க மூணு பேரும் கல்யாணம் ஏதும் செஞ்சுக்காம சம்பாதிப்பதிலேயே குறியா இருந்து தனிமரமாகவே வாழ்ந்துகிட்டு வந்தாலும் பணம் சேர்க்கிறதுல இருந்த வெறி அடங்காம பல சட்டவிரோத நடவடிக்கைகள்ல ஈடுபட்டு வந்தானுங்க. அரசியலில் அவுனுங்களுக்கு செல்வாக்கு அதிகரிச்சதால அவனுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாம இருந்துச்சு.

பிற்காலத்துல அவனுங்க கிட்ட வேலைக்குச் சேர்ந்த ராஜா
அவனுங்க செய்த பல குற்றச்செயல்களுக்கு உதவியா இருந்து வந்தான்.

அந்த நேரத்திலேதான் மார்ட்டின் கும்பலுக்கு நாம வலை விரிச்சோம். அந்தக் கும்பலை கூண்டோட ஒழிக்கிறதுக்காக 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கையை துவங்கினோம்.

மார்ட்டின் கும்பலிலேயிருந்து கழண்டு போகப்பார்த்த ராஜாவை கொல்றதுக்காக அவங்க மூணு பேரும் திட்டம் போட்டாங்க. அதுக்காக என்னை அணுகினானுங்க.

ராஜா கிட்டே இந்த விசயத்தை சொல்லி அவனை உசுப்பேத்தி விட்டு என்கவுண்டர் செய்யப்போறது போல அவனை கூட்டிகிட்டுப் போய் வேண்டுமென்றே அவனை தப்பிக்க வெச்சேன்.'

'வெறி பிடிச்சவன் போல மாறின ராஜா முதல்ல மூர்த்தியை தீர்த்துக் கட்டிட்டான். ஆனா அடுத்ததா மார்ட்டினைக் கொல்ல முயற்சி பண்ணினப்போ அவர் கிட்டே மாட்டி அவர் கையாலேயே கொலை செய்யப்பட்டான்.ஆனா அவன் கொலை செய்யப்பட்ட விசயம் அப்ப நமக்கே தெரியாது'

'அந்த நேரத்திலே பாபுவை வெச்சு மார்ட்டினை கொல்றதுக்கும் நான் திட்டம் போட்டேன். சொத்தை அடையறதுக்காக மூர்த்தி மற்ற ரெண்டுபேரையும் கொலை பண்ண திட்டம் தீட்டியிருந்ததா ஒரு பொய்யைச்சொல்லி அதுபோன்ற காரியத்தை பாபு செய்யும்படி அவர் மனசில் ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சி பண்ணினேன். ஆனா பாபு என்னோட வலையில் சிக்காம, துரோகம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சாரு. ஆனா அந்த வலையில மார்ட்டின் விழுந்துட்டார். சொத்துக்காக பாபுவை கொலை பண்ணினார். கடைசியா இருந்த மார்ட்டினையும் காலி பண்றதுக்காக நானே ராஜா மாதிரி பேசி போன்ல அவரை கொலை செய்யப்போறதா மிரட்டினேன். அவரும் ராஜாவைத்தான் கொலை பண்ணிட்டோமே. இது என்ன புது பிரச்சினைன்னு குழம்பிப்போய் என்னை கூப்பிட்டாரு. நானும் அவர்கிட்டே தற்கொலை கடிதம் நாடகம் எழுதச்சொல்லி அவரை சுட்டுத்தள்ளிட்டு அவரே தற்கொலை பண்ணிகிட்டதா செட்டப் பண்ணிட்டேன். ஒருவழியா நம்மோட 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கை முடிஞ்சிடுச்சி.

சொல்லி முடித்துவிட்டு சோம்பல் முறித்தார் ரமணன்.

கமிசனர் அலமாரியிலிருந்து ஒரு கோப்பினை எடுத்து மேஜை மீது போட்டார்.

'நம்மோட 'வில் துளைக்கும் அம்புகள்' நடவடிக்கையில அடுத்த கட்டமா நாம ஒழிச்சுக்கட்டப்போற கும்பல் பற்றின விவரம் இதுல இருக்கு. நாம இப்ப...'

'சார். அதுக்கு முன்னாடி சூடா ஒரு கப் காபி குடிக்கலாமா?'

(தொடர் நிறைவடைந்தது.)

திங்கள், 1 மார்ச், 2010

வில் துளைக்கும் அம்புகள் - 2

..

பகுதி -1

பகுதி -2

'ன்ஸ்பெக்டர் தம்பி நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அவன் தப்பிச்சுப் போயிட்டான்னு என்கிட்டயே வந்து வெட்கமில்லாம சொல்லிகிட்டு இருக்கே. நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல அவன் செத்துட்டான்னு எனக்கு சேதி வரணும். இல்லைன்னா உன் வேலை போயிடுச்சுன்னு உனக்கு சேதி வரும்.' எதிரில் நின்றிருந்த ரமணனிடம் கோபமாக கத்தினார் மூர்த்தி.

'ரெண்டு நாள் அவகாசம் கொடுங்கய்யா. அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிடறேன். நான் போய்ட்டு வர்றேன்'

வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ரமணன்.


'கொஞ்சம் நில்லு தம்பி.'

ரமணன் திரும்பிப் பார்த்தார்.

'என்னங்கய்யா'

'நாங்கதான் அவனை போலீஸ்ல மாட்டிவிட்டு போட்டுத்தள்ள சொன்னோம்னு ஏதாவது அவன் கிட்ட உளறிட்டியா?'

'...அது வந்து.. அப்படியெல்லாம் அவன்கிட்ட எதுவும் சொல்லலீங்க. நீங்க தைரியமா இருங்க. ஏன் உங்களுக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் வெச்சிருப்பீங்களே? இங்க ஏன் ஒருத்தரையும் காணோம்?':

'எல்லா பசங்களுமே அந்த ராஜா பயலோட நல்லா பழகினவனுங்க. அதனால நான் அவனுங்க யாரையும் இந்த சூழ்நிலையில நம்பலை. எல்லாரையும் வெளியில அனுப்பிட்டேன். என்கிட்ட பிஸ்டல் இருக்கு. நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்.'

ரமணன் மூர்த்தியினுடைய வீட்டிலிருந்து வெளியேறினார்.

வாசலில் நின்றிருந்த ஜீப்பினை கிளப்பி பிரதான சாலையில் திரும்பி இருளில் கரைந்து போனார்.

......


வீட்டின் கதவை உட்புறமாக தாழிட்டுச் சாத்திய மூர்த்தியின் நெற்றியில் குழப்ப ரேகைகள் பரவ ஆரம்பித்தன.

'ஒருவேளை இந்த இன்ஸ்பெக்டர் ராஜா கிட்ட ஏதாவது உளறி வெச்சிருப்பானோ? எதுக்கும் நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது' என எண்ணியபடி தனது கைத்துப்பாக்கி இருக்கும் அறைக்குள் அதை எடுப்பதற்காக நுழைந்தார்.

உள்ளே..

கைத்துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த மேஜை மீது கையில் கத்தியுடன் அமர்ந்தவாறு புன்னகைத்தான் ராஜா.

.............


மணன் ஜீப்பை காவல் நிலையம் நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார்.

செல்போன் ஒலித்தது.

'மிஸ்டர் ரமணன். டி.எஸ்.பி ஆபிசில இருந்து பேசறோம். கைதியை தப்ப விட்டதுக்காக உங்களை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. நீங்க நாளைக்கு காலையில இங்க நேரா வாங்க.'

'நான் எதிர்பார்த்ததுதான். நன்றி சார்'

ரமணன் ஜீப்பினை திருப்பி காவலர் குடியிருப்பு நோக்கி செலுத்தினார்.

ஜீப் இருளை கிழித்துக்கொண்டு ஒரு வளைவில் திரும்பிய போது சாலையோரம் இருந்த புளியமரத்தின் பின்புறத்தில் மறைந்திருந்த ராஜா ஆவேசமாக சாலையை நோக்கிப் பாய்ந்தான்.


..........

மூர்த்தியின் உடல் அவருடைய வீட்டில் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது.

உறவினர்கள் என்று யாரும் அவருக்கு இல்லாததால் அங்கு அவருக்காக அழுவதற்கு யாரும் இல்லை.

அவரிடம் வேலை செய்த ஆட்கள் சுற்றிலும் சோகமாக நின்றுகொண்டிருந்தனர்.

அருகில் மார்ட்டினும் பாபுவும் நின்றிருந்தனர்.

எதிரில் நின்றிருந்த ரமணன் பாபுவிடம் நெருங்கி அவரை தனியே அழைத்துக்கொண்டு போனார்.

'பாபு சார். உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும். இன்னைக்கு ராத்திரி பெசன்ட் நகர் கடற்கரையில உங்களை சந்திக்கிறேன்.'

கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார் ரமணன்.

........

பெசனட் நகர் கடற்கரை.

இரவு 7 மணி.

கடல் அலைகள் வழக்கத்தைவிட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

பாபு கடற்கரையின் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் நின்றபடி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் காரின் அருகில் ஸ்ப்ளெண்டரை நிறுத்திவிட்டு கீழிறங்கினார் ரமணன்.

'வாங்க பாபு சார். மணல்ல உட்கார்ந்து பேசுவோம்'

இருவரும் கடலை நோக்கி நடந்தனர்.

கடலோரம் கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் படகின் அருகில் இருவரும் அமர்ந்தனர்.

'பாபு சார்! நீங்க, மார்ட்டின் அப்புறம் இறந்துபோன மூர்த்தி மூணு பேரும் பார்ட்னரா சேர்ந்து பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் பண்றீங்களே. அதோட மதிப்பு எவ்வளவு இருக்கும்?'

'சுமாரா நானூறு கோடி இருக்கும். எதுக்கு தம்பி கேட்கறீங்க?'

'சார் நான் இப்ப சொல்லப்போற விசயம் உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கலாம். ராஜாவை கைதுபண்ணி கஸ்டடியில வெச்சிருந்தப்ப அவன் என்கிட்ட ஒரு விசயம் சொன்னான்.'

'என்ன சொன்னான்?'


'இறந்துபோன மூர்த்தி ஐயா அந்த நானூறு கோடி சொத்துக்களையும் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள உங்களையும் மார்ட்டின் சாரையும் கொலை பண்ணச் சொல்லி ராஜா கிட்ட சொல்லியிருக்காரு.'

'கண்டிப்பா அவர் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. ராஜா உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கான்.'

'நடக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு சார். இந்த காலத்திலே பணம்தானே எல்லாம் செய்யுது. நீங்க மூணு பேரும் எனக்கு பணம் கொடுத்ததாலதானே ராஜாவை போட்டுத்தள்ள ஒத்துகிட்டேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்.'

'என்ன தம்பி?'

'நேத்து ராத்திரி நான் ராஜாவை பார்த்தேன்.'

' என்னது அவனை பார்த்தியா?'

'ஆமா சார். நான் வீட்டுக்கு போறதுக்காக ஜீப்ல போய்க்கிட்டு இருந்தப்ப எதிர்பாராவிதமா அவன் சாலையில குறுக்கே ஓடினான்.நான் அந்த நேரத்திலே அங்க வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டான். என்னை பார்த்ததும் அதிர்ச்சியாயிட்டான்'

'அவனை அங்கேயே சுட்டுக்கொல்ல வேண்டியதுதானே''

'நானும் அதற்கு முயற்சி பண்ணினேன். ஆனா அவன் இருட்டில ஓடி மறைஞ்சிட்டான். துப்பாக்கியையும் பயன்படுத்த முடியாது. ஏன்னா என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அதனால என்னால் அந்த நேரத்தில ஒன்னும் செய்ய முடியாம போயிருச்சு.மூர்த்தி சாருக்கு அடுத்தபடியா அவனோட அடுத்த குறி உங்க மேல இருக்கலாம். எதுக்கும் எச்சரிக்கையா இருங்க சார்.'

'அதை நான் பார்த்துக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க ரமணன்.'

'சார். கடைசியா நான் உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கணும்.நீங்க தப்பா எடுத்துக்கூடாது.'

'கேளுங்க. என்ன விசயம்?'

'மூர்த்தி சாரை நீங்க கொலை பண்ணியிருப்பீங்களோன்னு எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.'

'இன்ஸ்பெக்டர் தம்பி என்ன விளையாடறீங்களா?'

'தப்பா எடுத்துக்காதீங்க சார். உங்களுக்கு உதவி பண்ணத்தான் கேட்கிறேன். ஒருவேளை மூர்த்தி சார் நினைச்சது போல நீங்களும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொலை பண்ணியிருந்தா தயங்காம என்கிட்ட சொல்லுங்க. அப்பத்தான் இந்தப் பிரச்சினையிலேயிருந்து நான் உங்களை காப்பாத்த முடியும். ஏன்னா இப்ப இந்த கொலை கேஸை விசாரிச்சிகிட்டு இருக்கிற இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் ரொம்ப நேர்மையானவர்னு எங்க டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க.'

'நான் இதுவரைக்கும் அப்படி நினைச்சது இல்லை. இனிமேலும் நானும் மார்ட்டினும் எப்போதும் போல சேர்ந்துதான் பிசினஸ் பண்ணப்போறோம். நாங்க செய்யிற தொழில்கள் தப்பானதா இருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள எப்போதும் துரோகம் இருக்காது.'

'சரி சார். நான் உங்க ஆள். அதனாலதான் கேட்டேன். நீங்க எந்த தப்பு பண்ணினாலும் உங்களை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. நான் கிளம்பறேன்.'

அங்கிருந்து கிளம்பினார் ரமணன்.

குழப்பத்துடன் காரை நோக்கி நடந்த பாபுவின் செல்போன் ஒலித்தது.

எடுத்தார்.

'டேய் பாபு. நான்தான்டா ராஜா பேசறேன். என்னோட அடுத்த குறி நீதான்டா'

மறுமுனையில் தொடர்பு அறுந்துபோனது.

.....................

ள்ளிரவு.

நீலாங்கரையின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்த தனது பங்களாவில் காரை நிறுத்திவிட்டு இறங்கினார் மார்ட்டின்.

செல்போன் ஒலித்தது.

'மார்ட்டின் நான்தான் மூர்த்தி பேசறேன்.'

'என்ன பாபு இப்பத்தான் போன் பண்ணி ரமணன் உன்கிட்ட சொன்ன விசயத்தையெல்லாம் என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தே. அதுக்குள்ள திரும்பவும் போன் பண்றியே. என்ன விசயம்.?'

'மார்ட்டின். இப்ப கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ராஜா எனக்கு போன் பண்ணினான். என்னை கொலை செய்யப்போறதா மிரட்டினான்.'

'நீ பயப்படாம இரு பாபு. அவனை போலீஸ் தீவிரமா தேடிக்கிட்டு இருக்காங்க. அவனை கூடிய சீக்கிரத்திலே கண்டுபிடிச்சு போட்டுத்தள்ளிடுவாங்க. நீ கவலைப்படாதே. அதான் உன்கிட்டே துப்பாக்கி இருக்கே. அப்புறம் நீ ஏன் பயப்படுறே?. நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்.'

இணைப்பைத் துண்டித்தார் மார்ட்டின்.

தூரத்தில்...

சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது.

..........

காலை 10 மணி.

காவல் நிலையம்.

புதிதாய் பொறுப்பேற்றிருந்த இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் மூர்த்தி கொலை வழக்கு சம்பந்தமான கோப்புகளை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒருவன் மூச்சிறைக்க உள்ளே ஓடி வந்தான்.

'யாருய்யா நீ. உனக்கு என்ன வேணும்?'

'அய்யா. நான் பாபு ஐயா வீட்டு வாட்ச்மேனுங்க. கொஞ்சம் நேரத்திலே வந்திடறேன்னு சொல்லிட்டு நேத்து ராத்திரி காரை எடுத்துகிட்டு போனவரு இன்னும் வீட்டுக்கு திரும்பி வரலைங்க.'

'யோவ். பெரிய மனுசங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.
திரும்பி வந்துடுவார். நீ வீட்டுக்குப் போ.'

அப்போது தொலைபேசி ஒலித்தது.

'சார். நான் தாம்பரம் ஏரியா இன்ஸ்பெக்டர் பேசறேன். இங்க தாம்பரம் மேம்பாலத்துக் கீழே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சிதைந்து போன ஒரு உடல் கிடக்குது. உங்க கேஸ் சம்பந்தப்பட்டவரா இருக்கலாம். கொஞ்சம் இங்க வர்றீங்களா?'

............


ன்ஸ்பெக்டர் பிரேம்நாத் தாம்பரம் போய்ச்சேர்ந்தபோது தண்டவாளத்தின் அருகே வெள்ளைத்துணியால் உடல் மூடி வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துணியை விலக்கி முகத்தைப் பார்த்தார்.

கோரமாக இறந்துபோய்க் கிடந்தான் ராஜா.

......

நெற்றியை கீறியபடி அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத்.

கான்ஸ்டபிள் சந்தானம் அருகில் வந்தார்.

'சார். ராஜா ரயிலில் அடிபட்டு இறந்துபோயிட்டான். அப்படின்னா அவன் கடத்திட்டுப்போன பாபுவோட கதி என்னன்னு தெரியலையே சார்?'

'நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டு இருக்கேன் சந்தானம்.'

கான்ஸ்டபிள் முருகன் அப்போது உள்ளே வந்தார்.

'சார். நான் சொல்ல மறந்திட்டேன். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி மெரினா கடற்கரை போலீஸ் ஸ்டேஷன்லேயிருந்து பேசினாங்க. கரையில் ஒரு பிரேதம் ஒதுங்கி கிடக்குதாம்.'

.....


அவசரமாக மெரினா கடற்கரையில் உடல் ஒதுங்கியிருந்த இடத்தினை வந்தடைந்தார் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத்.

அங்கே...

பாபுவின் பிரேதம் தண்ணீரில் உப்பிப்போய் மீன்களால் கடித்து குதறப்பட்டு கிடந்தது.

.....

மார்ட்டின் தனது வீட்டில் சிந்தனையில் அமர்ந்திருந்தார்.

செல்போன் அடித்தது.

'சார். நான் இன்ஸ்பெக்டர் பிரேம்நாத் பேசறேன். பாபு சாரை கடத்திட்டுப்போய் கொன்னு கடல்ல போட்டுட்டு போன ராஜா எதிர்பாராவிதமா ரயிலில் அடிபட்டு செத்துப்போயிட்டான். இந்தப் பிரச்சினை இதோட முடிஞ்சது. இனிமே நீங்க கவலைப்படாம இருங்க.'

'ரொம்ப நன்றி தம்பி. நண்பர்களை இழந்த எனக்கு உங்க பேச்சு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. வணக்கம்.'

தொடர்பை துண்டித்தார் மார்ட்டின்.

செல்போன் மீண்டும் கத்தியது.

எடுத்தார்.

மறுமுனையிலிருந்து குரல் ஒலித்தது.

'உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டா.'

.........


'டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?'

'ஆமாம் இன்ஸ்பெக்டர். ராஜா ரயிலில் அடிபட்டு சாகவில்லை. யாரோ அவனை கழுத்தை நெறிச்சி கொன்னு, இறந்துபோன உடலை தண்டவாளத்திலே வீசிட்டுப்போயிருக்காங்க.'

'அப்படின்னா அவன் கொல்லப்பட்டது என்னைக்கு?'

'உடல் பரிசோதனைப்படி பார்த்தா அவன் உயிர் பிரிஞ்ச நேரம் செவ்வாய்கிழமை இரவு 11 மணிக்கு.'

'சரி. பாபு உடலையும் நீங்கதானே பிரேதபரிசோதனை பண்ணினீங்க. அவர் எப்படி இறந்திருக்கார். அவரை எப்போது ராஜா கொலை பண்ணியிக்கான்?'

'இன்ஸ்பெக்டர் சார்! பாபு துப்பாக்கியால சுடப்பட்டு இறந்திருக்கார். ஆனா பாபுவை ராஜா கொலை பண்ண வாய்ப்பே இல்லை. ஏன்னா பாபு இறந்தது ராஜா இறந்து ஆறு மணி நேரம் கழிச்சு. அதாவது புதன்கிழமை விடியற்காலை 5 மணிக்கு.'

அதிர்ச்சியுடன் எழுந்தார் பிரேம்நாத்.

.............

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

வில் துளைக்கும் அம்புகள்





.....

பிஸ்டலை எடுத்து மேஜை மீது வைத்தான் ராஜா.

எதிரில் அமர்ந்திருந்த மார்ட்டின், மூர்த்தி மற்றும் பாபு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

'நான் உங்களுக்காக எவ்வளவோ கொலை,கொள்ளைகளை பண்ணியிருக்கேன். பிரியாவை நான் சந்திச்சதுக்கப்புறம் எனக்கும் வாழ்க்கையோட இன்னொரு அழகான பக்கம் தெரிய ஆரம்பிச்சது.
நான் அந்த நிம்மதியான உலகத்தை தேடி போகப்போறேன். இனிமே என்னை தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்.'

'இதப்பாரு ராஜா. இதுவரைக்கும் நீ எங்களுக்கு பண்ணின உதவிகளுக்கு நன்றி. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறப்போ அதை நாங்க கெடுக்க விரும்பல. ஒரு நிமிசம் இரு.'

மூர்த்தி எழுந்துபோய் அருகிலிருந்த அலமாரியை திறந்து பணப்பெட்டியை எடுத்து ராஜாவிடம் நீட்டினார்.

'வாங்கிக்கப்பா. இதுல கொஞ்சம் பணம் இருக்கு. நீ உன்னோட வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்க. போய்ட்டு வா.'

ராஜா பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு விருவிருவென அங்கிருந்து வெளியேறினான்.

......

குளிர்காற்று வேகமாக வீசியது. மேகம் கருக்கத் தொடங்கியது. ஓரிரு மழைத்துளிகள் முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கத் தொடங்கியதும் பல்சர் வேகத்தை அதிகரித்தான் ராஜா.

இடுப்பிலிருந்த செல்போன் அழைத்தது.

பிரியா பேசினாள்.

'என்னப்பா. நான் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு தயாரா இருக்கேன். சீக்கிரமா வர்றதா சொல்லிட்டு எங்க போய்ட்ட? சீக்கிரம் வாடா'

'வந்துகிட்டே இருக்கேன் செல்லம். இன்னும் அரைமணி நேரத்திலே வந்துடறேன்.'

இணைப்பை துண்டித்துவிட்டு செல்போனை சட்டைப்பையில் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது எதிரில் சாலை நடுவில் புதிதாய் முளைத்திருந்த சோதனைச் சாவடியை மிக அருகில் நெருங்கியிருந்தான்.

......

ஜீப் அந்த நள்ளிரவின் இருளை கிழித்துக்கொண்டு காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

இன்ஸ்பெக்டர் ரமணன் ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தார். பின்னால் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த இரு போலீசாருக்கு மத்தியில் கைவிலங்குடன் ராஜா அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரிலும் இரண்டு போலீசார் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தனர்.

ரமணன் கேட்டார்.

' என்ன தம்பி. அமைதியா வர்ற? உன்னை எங்க கூட்டிகிட்டு போறோம்னு தெரியுமா?'

'தெரியும். என்கவுன்டர்ல போட்டுத் தள்றதுக்கு.'

'ஆகா. புத்திசாலி பையன்தான் நீ. அதனாலதான் மார்ட்டின் ஐயா உன்னை இவ்வளவு நாளா வேலைக்கு வெச்சிருந்திருக்காரு. ஆனா நீ அவரை விட்டு விலகிப்போறதுல அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஏன்னா அவங்க மூணு பேரோட அத்தனை ரகசியங்களும் தெரிஞ்சவன் நீ. பிற்காலத்துல அவங்களுக்கு ஆப்பு வெச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அவங்களே உன்னை போட்டுத் தள்ளியிருப்பாங்க. ஆனா நீ ரொம்ப நாள் அவங்களுக்கு விசுவாசமா இருந்ததால அவங்களுக்கு மனசு வரலை. அதனாலதான் அந்த பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சி இருக்காங்க.'

ஜீப் பாதையிலிருந்து விலகி புதர்களுக்கிடையில் பயணித்து மரங்களடர்ந்த ஒரு பகுதியில் கிரீச்சிட்டு நின்றது.

ஜீப்பிலிருந்து குதித்தார் ரமணன். இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவி உள்ளங்கையில் வைத்துக்கொண்டார்.

'கான்ஸ்டபிள் அவனை இழுத்துகிட்டு வாங்கய்யா.'

ராஜா கைவிலங்குடன் கீழே இறக்கப்பட்டான்.ஜீப் விளக்குகள் அணைக்கப்பட்டன.

'கான்ஸ்டபிள் ரெண்டு பேரு ஜீப் பக்கத்தில நில்லுங்க. ரெண்டுபேரு என்னோட வாங்க.' என்றபடி ராஜாவின் சட்டைக்காலரை பிடித்து தள்ளியபடி ஒரு அடர்ந்த புதருக்கு அருகில் அவனை இழுத்துச்சென்றார் ரமணன்.

நிலவு தேய்ந்துபோய் மிகக்குறைவான வெளிச்சத்தினை பூமியின் மீது பொழிந்துகொண்டிருந்தது.

'கான்ஸ்டபிள் அவன் கைவிலங்கை அவிழ்த்துவிடுய்யா. பாவம் சாகப்போறப்ப சுதந்திரமா சாகட்டும்.'

கை விலங்கு அவிழ்க்கப்பட்டது.

'நீங்க ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க.'

அங்கேயே இரு கான்ஸ்டபிள்களையும் தடுத்து நிறுத்திய ரமணன் ராஜாவின் பின்னந்தலையில் கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தியபடி அவனை அடர்ந்த இருளில் தள்ளிக்கொண்டு சென்றார்.

.....


ஜீப் அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிள் சந்தானம் அருகிலிருந்த கான்ஸ்டபிள் முருகனிடம் தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டை பற்றவைத்தபோது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

'யோவ் முருகா. நம்ம இன்ஸ்பெக்டர் அந்தப் பையனோட கதையை முடிச்சிட்டார் போலிருக்கு. கிளம்பவேண்டியதுதான் ஜீப்ல ஏறு.' என்றபடி பற்றவைத்த சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு நிமிர்ந்தபோது துப்பாக்கிகள் மீண்டும் வெடித்தன. சிறிது நேரத்தில் காட்டுப்பகுதியிலிருந்து சிலபேர் ஜீப் நின்ற திசை நோக்கி சருகுகளை மிதித்துக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது.

சந்தானமும் முருகனும் பதட்டமாகி துப்பாக்கியை எடுத்து சத்தம் வரும் திசை நோக்கி திருப்பினார்கள்.

இன்ஸ்பெக்டர் காலில் ரத்தம் வழிய, அவருடன் சென்ற இரு கான்ஸ்டபிள்களும் அவரை தூக்கிக்கொண்டு ஜீப் நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தனர்.



'யோவ் சந்தானம் ஜீப்பை சீக்கிரமா எடுத்து ஆஸ்பத்திரிக்கு போ. இன்ஸ்பெக்டர் சார் காலில கீழ கிடந்த மரக்கட்டையால அடிச்சிட்டு அவன் தப்பிச்சிப்போயிட்டான்.'

ஜீப் ரமணனை ஏற்றிக்கொண்டு வேகமாக பறந்தது.

.......

(தொடரும்)